சம்பந்தனின் எதிர்கட்சி தலைவர் பதவி பற்றி மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. அவர் முழு நாட்டுக்கும் பணி செய்கிறார் இல்லை என்று சொல்லி அதை பறித்து தமக்கு தர சொல்லி பொது எதிரணி கூறுகின்றது. ஆனால் அதைவிட முக்கியமாக “சம்பந்தன், இலங்கை நாட்டின் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஏற்றதன் மூலம், தனியொரு நாடு என்ற இலக்கை கைவிட்டு, நாம் ஒரே நாட்டுக்குள் வாழ்வோம் என்ற செய்தியை, சிங்கள தேசத்துக்கு தருகிறார். அதன் முக்கியத்துவத்தை உங்களால் உணர முடியவில்லையா?” என நான் சிங்கள மொழியில், சிங்கள ஊடகங்கள் மூலமாக கடந்த சில நாட்களில் பலமுறை கேட்டுள்ளேன். வழமையாக எனக்கு பதில் கூறும் சிங்கள அரசியல்வாதிகள் எவரும் கூட இதுவரை இதற்கு இன்னமும் பதில் கூறவில்லை. பிரபல “விகல்ப” ஊடகம் மட்டுமே, “மனோ கணேசனின் இந்த கருத்தை, ஜனநாயகம் பற்றிய ஒரு துளிகூட அறிவற்ற தென்னிலங்கை சக்திகளால் புரிந்துகொள்ள முடியாது” என கூறியுள்ளது என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஐ.தே.க., ஸ்ரீல.சு.க. ஆகிய கட்சிகள் மத்தியில் இடையிலான அக்கப்போர் எங்கள் பிரதான பிரச்சினை அல்ல. எம் முன்னுரிமை பட்டியலில் முதலிடம் இனப்பிரச்சினை தீர்வு ஆகும். அதற்காகத்தான் தேசிய இனப்பிரச்சினைக்கு, பிரிபடாத நாட்டுக்குள்ளே தீர்வு காண புதிய அரசியலமைப்பு பணியை ஆரம்பித்தோம். அதில் நானும், சம்பந்தனும் உட்பட அனைத்து கட்சித்தலைவர்களும் இருக்கிறோம்.
ஆனால், தற்போதைய அரசியல் சந்தடிகளில் காணாமல்போயுள்ள புதிய அரசியலமைப்பு பணியை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும். பிரதமர் தலைமையிலான வழிகாட்டல் குழுவை மீண்டும் கூட்ட வேண்டும். இதுபற்றி சம்பந்தனை, கடந்த வாரம் ஒரு நிகழ்வில் சந்தித்த போது, நான் சொல்ல, அவரும் எனது கருத்தை ஏற்றுக்கொண்டார்.
உண்மையில் கூட்டமைப்பு தலைவர் என்ற அடிப்படையிலேயே அவர் அரசமைப்பு வழிகாட்டல் குழுவில் இருக்கிறார். இனப்பிரச்சினை தீர்வுக்கான வழித்தேடல் என்ற அடிப்படையில்தான் அவர் எதிர்க்கட்சி தலைவர் பதவியில் அமர்த்தப்பட்டார். எதிர்க்கட்சி தலைவர் என்ற அடைப்படையில்தான், அரசியலமைப்பு பேரவையில் இருக்கிறார். இவை சர்வதேச சமூகத்துக்கு பிடித்தமான நடவடிக்கைகள். இந்நிலையில், இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். அதற்காக மீண்டும் புது அரசியலமைப்பு பணிகள் ஆரம்பமாக வேண்டும். உண்மையில் புது அரசியலமைப்பு பணிகளை ஆரம்பிக்க முடியாவிட்டால், எதிர்க்கட்சி தலைவர் பதவியினால் பெரும் பயன் விளைய போவதில்லை. சர்வதேச சமூகம்தான் இலங்கையின் எதிர்க்கட்சி தலைவர் ஒரு தமிழர் என சந்தோஷப்படும்.
பலர் குற்றம் கூறுவதைப்போல், முழு நாட்டுக்கும் எதிர்க்கட்சி தலைவராக செயற்படாவிட்டாலும் கூட, தேசிய நல்லிணக்கம், நல்லெண்ணம் ஆகியவை பாற்பட்ட தனது நல்ல செய்தியை கூட தென்னிலங்கை புரிந்துக்கொள்ளாததைப்பற்றி சம்பந்தன் சிந்தித்து பார்க்க வேண்டும். புதிய அரசியலமைப்பு இல்லையென்றால், இனப்பிரச்சினைக்கு தீர்வில்லை. இனப்பிரச்சினைக்கு தீர்வில்லையென்றால், எதிர்க்கட்சி தலைவர் பதவி சும்மா பக்க வாத்தியம்தான். சில அதி தீவிரவாத தமிழ் தரப்புகள் மத்தியில் இருந்து கடும் விமர்சனத்தை எதிர்கொள்ளும் சம்பந்தனின் நியாயமான கோரிக்கைகள்கூட கணக்கில் எடுக்கப்படாவிட்டால், இந்நாடு மீண்டும் பேரழிவை எதிர்கொள்ள நேரிடும்.