லோயா மரணத்தை சந்தேகித்து தனித்த விசாரணை கோரும் மனுக்கள் பின்னணியில் ராகுல் காந்தி இருப்பதாகவும் உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு ராகுல் காந்திக்கு பெரும் பின்னடைவு என்றும் கருத்து தெரிவித்துள்ளார் யோகி ஆதித்யநாத்.
“நீதிபதி லோயா விவாதம் முடிந்து விட்டது. காங்கிரஸாரின் வெறுப்பு உமிழும் முகம் அம்பலமாகிவிட்டது. ராகுல் காந்தி ஒரு 150 பேர்களுடன் புகார் எழுப்பினார். ஆனால் பொய்கள் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
ராகுல் காந்தி தங்கள் குடும்பத்தைத் தவிர வேறு யாரும் இந்தியாவை ஆண்டுவிடக்கூடாது என்று விரும்புகிறார்” என்று ட்வீட் செய்துள்ளார்.
லோயா மரணம் குறித்த தனித்த விசாரணைக் கோரும் மனுக்களின் பின்னணியில் ‘புலப்படா கை’ உள்ளது என்று பாஜக சூசகமாக ராகுல் காந்தியை சாடி வருகிறது. மேலும் அமித் ஷாவுக்கு எதிராக சதி செய்ததற்கு அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
அஸீமானந்தா உள்ளிட்டோர் மசூதி குண்டு வெடிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்டதையடுத்து ‘இந்து தீவிரவாதம்’ காவிபயங்கரவாதம் என்ற வார்த்தைகளை காங்கிரஸ் வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கைக்கு அடுத்து தற்போது லோயா விவகாரத்திலும் இந்தத் தீர்ப்புக்குப் பிறகு தங்கள் கை கறைபடியாத கை என்று பாஜக கோரி வருகிறது