தொடர் போராட்டம் எதிரொலியாக சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பதவி ஏற்றார். பொறுப்பேற்ற உடன் மற்ற ஆளுநர்கள்போல் இல்லாமல் மாவட்டம்தோறும் சென்று ஆய்வு செய்தார். பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. மேலும் ஆளுநர் ஆய்வு செய்யச் செல்லும் இடங்களில் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகாவைச் சேர்ந்த சுரப்பா நியமிக்கப்பட்டார். இந்த விவகாரத்திலும் ஆளுநருக்கு எதிர்ப்பு வலுத்தது. பெண் பத்திரிகையாளர் விவகாரத்திலும் விமர்சனம் எழுந்தது. தற்போது ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி, ஆர்ப்பாட்டம், முற்றுகைப் போராட்டம் என ஒன்றன்பின் ஒன்றாக போராட்டம் நிகழ்ந்து வருகின்றன.
இதைத் தொடர்ந்து சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையைச் சுற்றி அடையாறு துணை ஆணையர் ரோகித் நாதன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையைச் சுற்றி ரோந்து போலீஸார் 24 மணி நேரமும் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
உளவுப் பிரிவு, நுண்ணறிவுப் பிரிவு, மத்திய உளவுப் பிரிவான ஐ.பி. உள்ளிட்ட பிரிவு போலீஸாரும் கண்காணித்து வருகின்றனர். பெரிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டால் 1,000 போலீஸார் வரை பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முற்றுகையைத் தடுக்க இரும்பு தடுப்பு வேலிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.