யாழ்.ஊடக அமையத்தில் சுரேஸ் பிரேமச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண தவறிவிட்டது; ஆகையால் தமிழ்த் தேசிய கட்சிகள் ஓரணியில்ல் திரள வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
சுரேஸ் பிரேமச்சந்திரனும் அவருடைய ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியும் 100 வீதம் தமிழ் தேசியத்தை இறுக்கமாக கொண்டிருக்கவில்லை. சுரேஸ் பிரேமச்சந்திரன் அறிந்தோ? அறியாமலோ? கூறியிருக்கின்றார்.
அதனை நாங்கள் வரவேற்கிறோம். மேலும் கட்சிகள் கூட்டாக இணங்கி செயற்படவேண்டும் என்பதற்கு முதலில் அடிப்படையான நம்பிக்கையை மற்றவர்களிடம் உருவாக்கவேண்டும். தூய்மையான அரசியலை செய்வது என்பது வேறு.
நடைமுறையில் மற்றவர்களிடத்தில் நம்பிக்கையை வளர்ப்பது என்பது வேறு. ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் கொள்கை என்ன? தேர்தலின் பின்னர் அவர்கள் கூட்டுசேர்ந்திருக்கும் கட்சிகள் எவை? என்பதை மக்கள் நன்றாக அறிவார்கள்.
ஒரு நகர சபையில் ஆட்சியமைப்பதற்காக எந்த கட்சியுடனும் சேர்வதற்கு தயாரான இவர்கள் எப்படித் தமிழ்தேசியவாத கட்சியாக இருக்க முடியும்? தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளுராட்சி சபைகளில் மற்றய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைப்பதை தவறு என்று விமர்சித்தவர்களில் சுரேஸ் பிரேமச்சந்திரனும் உள்ளடக்கம்.
ஆனால் தான் யாரை விமர்சித்தாரோ? அவர்களை போன்றே நடந்து கொண்டவர் சுரேஸ். தமிழ்தேசிய கூட்டமைப்பு எதனையும் மக்களுக்கு செய்யாது என்பதை நாங்கள் இன்றல்ல தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறியிருந்த நாட்களில் இருந்து கூறிக்கொண்டிருக்கின்றோம்.
ஆனால் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகள் ஒன்றிணைவு கொள்கைக்கான இணைவாக இருக்கவேண்டுமே தவிர, வெறுமனே தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பை தோற்கடிக்கவேண்டும் என்பதை மட்டும் இலக்காக கொண்ட கூட்டாக இருக்ககூடாது. கொள்கைக்காக மட்டும் நாங்கள் இணைய தயார். இவ்வாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறினார்.