திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்துக்குப் பக்கத்தில் உள்ள கிராமம், முத்துநகர் முதலியார்பட்டி. மருத மரங்கள் நிறைந்த அந்தச் சாலையில் தோளில் கேமராவை மாட்டிக்கொண்டு ஸ்கூட்டியில் கெத்தாகப் பறக்கிறார், பிரேமா. இன்று அவரைப் பார்த்து வாயடைத்து நிற்பவர்களில் பலர், சில வருடங்களுக்கு முன்பு பிரேமாவை கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளாக்கியவர்கள். அன்று பிரேமாவை கேலி செய்தவர்கள், இன்று ஆச்சர்யப்படுவதற்குக் காரணம் என்ன?
“2011-ம் வருஷம் எனக்குக் கல்யாணம் ஆச்சு. என் வீட்டுக்காரவுகளும் நானும் அஞ்சாவது வரைதான் படிச்சிருக்கோம். எனக்கு சாத்தூர் பக்கத்துல ஒரு சின்ன கிராமம். கல்யாணத்துக்கு முன்னாடி, நாம்தான் படிக்கலே. நமக்கு வரப்போறவராவது கொஞ்சம் படிச்சிருக்கணும்னு நினைச்சேன். ஆனா, என்னைய பொண்ணு பார்க்க வந்தப்போ எங்க வீட்டுல உள்ளவங்ககிட்ட அவர் பேசுன விதம் ரொம்ப புடிச்சுப்போச்சு. படிக்காதவரா இருந்தாலும், நம்மள கண் கலங்காம வெச்சுப்பாருங்கிற நம்பிக்கை வந்துருச்சு. கல்யாணத்துக்கு அப்புறம் உள்ளுர்லேயே ஒரு ஸ்டூடியோ வெச்சி நடத்திட்டிருந்தாங்க. வாழ்க்கை ஓரளவுக்கு நல்லாதான் போய்க்கிட்டிருந்துச்சு” எனத் தொடர்கிறார் பிரேமா.
“சமைக்கிறது, வீட்டு வேலை செய்யறது, புள்ளைங்களைப் பாத்துக்கிறது, அவருக்கு கூடமாட ஒத்தாசையா இருக்கிறதுன்னு நேரத்தை கழிச்சேன். யார் கண்ணு பட்டுச்சோ தெரியலண்ணே. திடீர்னு ஒருநாள் மயங்கி விழுந்துட்டார். கண்ணெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா மங்க ஆரம்பிக்குதுன்னு சொன்னார். அவ்வளவுதாம்ணே. எங்க குடும்பமும் மங்க ஆரம்பிச்சுடுச்சு” என வேதனையாக குரலில் சொல்கிறார் பிரேமா. பக்கத்திலிருந்த கணவர் விக்னேஷ், “கலங்காதே பிரேமா. எனக்குப் பார்வை போனால் என்ன? வழிகாட்டறதுக்கு நீ இருக்கியே” என ஆறுதல்படுத்திவிட்டுப் பேசுகிறார்.
பிரேமா கேமராவோடு
“எனக்கு 17 வயசா இருக்கும்போது, என் அம்மா ஆக்சிடென்ட்ல இறந்துபோயிட்டாங்க. அம்மாதான் உலகம்னு இருந்த வயசு அது. அவங்க போனதும், மேல்மருவத்தூர் கோவிலுக்கு தொண்டு செய்ய போயிட்டேன். அங்கே போன்லேயே போட்டோ எடுத்து பழகினேன். ஏழு வருஷம் அங்கே இருந்தேன். அப்புறம் வீட்டுல உள்ளவங்க தேடிவந்து சொந்த ஊருக்கு கூட்டிட்டு வந்துட்டாங்க. அந்தச் சமயத்துல எனக்குன்னு கையில எதுவுமே கிடையாது. எந்த வேலையும் தெரியாது. இனிதான் ஏதாவது புதுசா உருவாக்கணும் என்கிற சூழ்நிலையில்தான் என்னை நம்பி பிரேமா வந்தாங்க. என் கல்யாணத்துக்கு மேல்மருவத்தூரிலிருந்து 10 பவுன் நகையும் 1 லட்சம் ரூபாய்க்கு சீர் வரிசையும் கொடுத்தாங்க. அந்தப் பணத்தை வெச்சுதான் ஒரு புரொபஷனல் கேமரா வாங்கினேன். கொஞ்சம் கொஞ்சமா படம் எடுக்க கத்துக்கிட்டேன். ‘நீயும் கத்துக்கோ பிரேமா’னு சொல்லும்போதெல்லாம், ‘அய்யோ எனக்கு அந்த அளவு அறிவு கிடையாதுங்க. வேண்டாம்னு சொல்லிட்டாங்க” என்கிறார் விக்னேஷ்.
கல்யாண ஆர்டர், கோவில் திருவிழாக்கள், அரசு விழாக்கள் என மூன்று வருடங்கள் தனது உழைப்பு மற்றும் ஆர்வத்தால் கொஞ்சம் கொஞ்சமா முன்னேறியிருக்கிறார் விக்னேஷ். ”அப்போதான் திடீர்னு கண் பார்வை பறிபோயிடுச்சு. பிரேமா ரெண்டாவது முறை கர்ப்பமா இருந்த நேரம். 5 வயசு பையனையும், கர்ப்பிணி மனைவியையும் காப்பாத்த வேண்டிய நேரத்தில் இப்படி ஆயிடுச்சேன்னு கலங்கி நின்னேன். உதவிக்கு வந்தவங்க சிலரும், எங்க அறியாமையைப் பயன்படுத்தி ஏமாத்திட்டுப் போயிட்டாங்க. அப்போ, பிரேமா துணிஞ்சு சில முடிவுகளை எடுத்தாங்க. கேமரா மூலமா அவங்களே படங்கள் எடுக்கப் பழகினாங்க. கம்ப்யூட்டர் முன்னே உட்காந்துக்கிட்டு ஒண்ணு ஒண்ணா என்கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கிட்டாங்க. எங்களுக்கு வந்த ஆர்டர் எல்லாத்துக்கும் பிரேமாவே போக ஆரம்பிச்சாங்க. ஆனாலும், எங்க ஊர் மக்கள் பிரேமாவை அவ்வளவு சீக்கிரத்துல ஏத்துக்கலை. பொம்பளை போட்டோ எடுத்தால், எப்படி இருக்குமோனு நினைச்சாங்க” என விக்னேஷ் ஆதங்கத்துடன் நிறுத்த, புன்னகையுடன் தொடர்கிறார் பிரேமா.
பரிசு பெறும்போது
“ஆமாங்க, நான் கேமராவை எடுத்துட்டு போனாலே ஊர்க்காரங்க கேலியா பேசுவாங்க. ஏதாவது நல்ல காரியங்களுக்குப் படம் பிடிக்கப் போறதையும் அபசகுணமா நினைச்சாங்க. `அஞ்சாங் கிளாஸ் படிச்ச நீ எப்படி அழகா போட்டோ எடுத்து தருவே?’னு முகத்துக்கு நேராவே கேட்டாங்க. வீட்டுல என் ரெண்டு பிள்ளைங்களும் பசியோடு உட்காந்திருக்குமே என்கிற மன வேதனை என்னைத் தொடர்ந்து போராட வெச்சது. புதுப் பொண்ணு, புது மாப்பிள்ளையைப் படம் பிடிக்கப் போனாலே கை கிடுகிடுன்னு நடுங்கும். ஆனாலும், எனக்குள்ளே இருந்த வைராக்கியம்தான் அந்தப் பயத்தை போக்கி இயங்கவெச்சது.
ஒரு சமயம், இவருடன் பக்கத்து ஊருக்குப் போகும்போது, பஸ்ஸில் அவரை முதல்ல ஏத்திட்டு நான் ஏறுறதுக்குள்ளே பஸ் கிளம்பிடுச்சு. அன்னைக்கு அவர் ரொம்ப தவிச்சுப் போயிட்டார். அப்போ, தெரிஞ்ச ஒருத்தர், பைக் கொடுத்து கத்துக்கச் சொன்னாங்க. நான் பைக் பழகறதைப் பார்த்து, திரும்பவும் ஊர்லே கேலி பேசினாங்க. அவங்களுக்குப் பயந்துட்டு ராத்திரி 12 மணிக்கு மேலே ஓட்டிப் பழகுனேன். இப்போ, பார்வை போனதுக்கு அப்புறம் வீட்டிலேயே முடங்கிக் கிடந்த என் வீட்டுக்காரர், பைக்கில் என் பின்னால் உட்கார்ந்து சந்தோஷமா வர ஆரம்பிச்சுட்டாரு” என்கிறார் மகிழ்ச்சியான குரலில்.
“பிரேமா மாதிரி ஒரு மனைவி கிடைக்க நான் தவம் செஞ்சிருக்கணும். என் சூழலைப் புரிஞ்சுக்கிட்டு என் தொழிலையும் கத்துக்கிட்டு, ரெண்டு பிள்ளைகளோடு என்னையும் பத்திரமா பாத்துக்கிறாங்க. என் கண்ணா அவங்க இருக்கிறதால், இந்த உலகத்தை என்னால் எப்பவும் பார்த்துட்டே இருக்க முடியுது” என மனைவியின் கைகளை நேசத்துடன் பற்றுகிறார் விக்னேஷ்
– எழுத்தாக்கம் :மு.பார்த்தசாரதி
நன்றி : Vikatan EMagazine