தேசிய அரசாங்கத்தை பலமாக முன்னெ டுத்து செல்வதற்கு செய்துகொள்ளும் உடன் படிக்கையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயாரித்துள்ள யோசனைகளை உள்ளடக்கிய வரைபு இன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணங்கும் நிலையில் புதிய உடன்படிக்கை ஒன்றினை செய்துகொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சி –- ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணைந்து தேசிய அரசாங்கத்தை கொண்டு நடத்தும் புதிய உடன்படிக்கையை செய்துகொள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தலைமையில் குழுவொன்றை ஜனாதிபதி நியமித்துள்ள நிலையில் உடன்படிக்கை குறித்து வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்.
தேசிய அரசாங்கமாக அடுத்த இரண்டு ஆண்டுகளை முன்னெடுத்து செல்லும் தீர்மானம் இப்போது எட்டப்பட்டுள்ளது. இதில் புதிய வேலைத்திட்டங்கள், கொள்கைகள் உருவாக்கப்படவுள்ளன. தேசிய அரசாங்கத்தில் பங்குகொண்டு பிரதான இரண்டு கட்சிகளையும் இணைத்த வகையில் இரண்டு கட்சிகளின் ஒருமித்த வேலைத்திட்டமாகவே இது கருதப்படுகின்றது. இதில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடவடிக்கைகளோ அல்லது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வேலைத்திட்டங்களோ அன்றி இரண்டு கட்சிகளின் பொதுவான நடுநிலையான வேலைத்திட்டமாகவே இந்த உடன்படிக்கை செய்துகொள்ளப்படவுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் நியமிக்கப்பட்டுள்ள குழுவினருக்கு இடையில் இது குறித்து ஆராயப்பட்டு அறிக்கையும் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை நாம் ஜனாதிபதிக்கு நாளை ( இன்று ) கையளிக்க தீர்மானித்துள்ளோம். எமது காரணிகள் குறித்து ஆராயப்பட்டு அதேபோல் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் முன்வைக்கும் காரணிகளையும் உள்ளடக்கி ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் இறுதி தீர்மானம் ஒன்றினை முன்னெடுப்பார்கள். இரு தரப்பும் இணக்கம் தெரிவிக்கும் பட்சத்தில் தேசிய அரசாங்கத்தின் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்படும்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நாளை அல்லது நாளை மறுதினம் கூடவுள்ளது. இதன் போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சீரமைப்பு நடவடிக்கைகள் மற்றும் புதிய அமைச்சரவை மாற்றங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் மாற்றங்கள் குறித்து இன்னும் தீர்மானங்கள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை.
ஜனாதிபதி நாட்டில் இல்லாத நிலையில் இந்தக் காரணிகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆகவே தலைவர் இல்லாது இவற்றை எல்லாம் எம்மால் விமர்சிக்க முடியாது. ஆகவே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் ஏற்பட்டுள்ள சகல சர்ச்சைகளுக்கும் இந்த வாரம் இறுதித் தீர்வு கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.