மைத்திரிபால சிறிசேன, 2015ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தலுக்கான கட்சிகளது வேட்பாளர் தெரிவின் இறுதிக் கட்டம் வரையில் மெளனம் காத்து, 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திகதியன்று இலங்கை அரசியல் வரலாற்றில் அதுவரை எவருமே எதிர்பாராததொரு பெரிய அதிர்ச்சியை, இந்த நாட்டின் பொது மக்களுக்கு ஏற்படுத்தியிருந்தார்.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் மகிந்தவுக்கு எதிராகப் பொது வேட்பாளாராகத் தாம் களம் இறங்க ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவித்து, பரபரப்பை ஏற்படுத்தி வைத்தார்.
அன்று தான் சுதந்திர கட்சியின் சரிவும், பிளவும் ஆரம்பித்தது. அதுவே காலப்போக்கில் பெரும் விரிசலாக உருவெடுத்து முழு அரச இயந்திரத்தையே ஆட்டம் காண வைக்கத் தொடங்கியது.
தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையைப் பார்க்கும் போது, சுதந்திரக் கட்சியின் ஆயுள் இன்னும் எவ்வளவு காலத்திற்கு நீடிக்கப் போகிறது என்பது கேள்விக்குறியாகவுள்ளது.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற மைத்திரிபால சிறிசேன செய்த முதல் வேலை, சுதந்திரக் கட்சியில் தனது பிடியை இறுக்கி, கட்சியின் தலைவர் பதவியை தமது கைவசப்படுத்த முயன்றமை தான்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பெரும் பாலான உறுப்பினர்கள் மைத்திரிபாலவை ஒரு தேசத் துரோகியெனவும், சுதந்திரக் கட்சியை காட்டிக் கொடுத்தவர் எனவுமே கருதினார்கள்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பெரும்பான்மையானவர்கள் சுதந்திரக் கட்சியினரே. ஜனாதிபதி பதவிக்கான தேர்தலின் பின்னர் மகிந்த தரப்பினரின் பலம் பெருகி வருவதை உணர்ந்த மைத்திரி, சுதந்திரக் கட்சிக்குள் தனது அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொள்வது தான் தனது எதிர்கால அரசியல் இருப்புக்கு வழிவகுக்குமென உணர்ந்தார்,
அதனை நோக்கியே சுதந்திரக் கட்சியில் தனது இருப்பை உறுதிப்படுத்தும் விதத்தில் காய் நகர்த்திய மைத்திரி கடும் போராட்டத்துக்குப் பின்னர், மகிந்தவை அடிபணிய வைத்து, சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியைத் தம் வசப்படுத்திக் கொண்டார்.
ஆயினும் 2015 ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலின் போது, ஐக்கிய தேசியக் கட்சியை விட குறிப்பிட்ட அளவிலான நாடாளுமன்ற ஆசனங்கள் குறைவாகவே சுதந்திரக் கட்சியால் கைப்பற்ற முடிந்தது.
ஆயினும் தனித்து ஒரு அரசை நிறுவுவதற்கான பெரும்பான்மை ஆசனங்களான 113 ஆசனங்களை எந்தவொரு கட்சியினாலும் பெறமுடியாமல் போகவே ஒரு கூட்டு அரசு அமைப்பது அவசியமானதொன்றாக ஆனது.
சுதந்திர கட்சியின் மூத்த உறுப்பினர்களது கூற்றுப்படி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான், கட்சியின் இந்த மூத்த உறுப்பினர்களை, ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து ஒரு கூட்டு அரசை நிறுவும்படி அழைப்பு விடுத்துள்ளார்.
ஆயினும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் ஒரு குழுவினர், மகிந்த ராஜபக்ச தலைமையில் எதிர்க்கட்சி வரிசையில் செயற்படவே விரும்பினர். இது சுதந்திரக் கட்சிக்குள் நிலவிய உள்ளகப் பிளவினை மேலும் விரிவாக்கியது.
கூட்டு அரசை உருவாக்கிய போதிலும், அதில் இணைந்த இவ்விரண்டு கட்சிகளும் கொள்கைகளில் எதிரும், புதிருமாகவே இருந்தன.
ஐக்கிய தேசியக்கட்சி தாராள பொருளாதாரக் கொள்கையையும், சுதந்திரக் கட்சி ஜனநாயக சோசலிச தேசிய சித்தாந்தத்தையும், பின்பற்றிய காரணத்தால் பிரச்சினை என்று ஒன்று உருவாகும் போது, இத்தகைய முரண்பாடுகள் தலைதூக்குவதால், பிரதமர் எடுக்கும் முடிவுகளுக்கு எதிராக ஜனாதிபதி செயல்படுவது நாடாளுமன்றத்தில் சாதாரணமாக நடக்கும் நிகழ்ச்சிகளாகியிருந்தன.
இது மகிந்த தரப்பினருக்கு, அரசின் உறுதியற்ற தன்மையை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கான வாய்ப்பை வழங்கியது.
2018ஆம் ஆண்டில் நடந்த உள்ளூராட்சித் தேர்தலின் முடிவுகள், மகிந்த ராஜபக்சவின் தலைமையில் புதிதாக உருவான பொது மக்கள் முன்னணி என்ற கட்சியின், பிரமாண்டமான வளர்ச்சியை அரசியல் வாதிகளுக்கு பறை சாற்றி அனைவரையும் திரும்பிப் பார்க்கும் படி செய்தது.
231 உள்ளூாட்சி சபைகளின் அதிகாரத்தை அந்தப் பொதுமக்கள் முன்னணி கைப்பற்றிக் கொள்ள, சுதந்திரக் கட்சி 7உள்ளூராட்சி சபைகளை மட்டுமே கைப்பற்றியது.இது கூட்டு அரசினுள் பெரும் பிரள யத்தை உருவாக்கியது.
ஐக்கிய தேசிய கட்சியினர் கட்சிக்குள் மறுசீரமைப்பு அவசியம் என ஒருபுறம் வற்புறுத்த, மறுபுறம், சுதந்திரக் கட்சியினர் அரசை விட்டு வெளியேற வேண்டுமென மல்லுக்கு நிற்க, ஜனாதிபதியும் அவருடைய ஆதரவாளர்களான சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும், பிரதமர் தமது பதவியை விட்டு விலக வேண்டுமென்று வற்புறுத்த ஆரம்பித்தனர்.
இவற்றின் மத்தியில் மகிந்தவின் தலைமையிலான கூட்டு எதிரணியினால் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் முன் வைக்கப்பட்டது.
நாட்டில் கடைசியாக நடந்த கண்டி இனக் கலவரத்தை பிரதமர் கட்டுப்படுத்தத் தவறி விட்டார் எனவும், பிணைமுறி மோசடியுடன் அவர் தொடர்புள்ளவர் என்ற காரணத்துடனும், இன்னும் பல்வேறு காரணங்களுடன் மொத்தமாக 14 குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கூட்டு எதிரணி, பிரதமர் ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்தது.
இந்தக் கால கட்டத்தில், சுசில் பிரேம ஜயந்த, லக்ஷ்மன் யாப்பா போன்ற சுதந்திர கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பிரதமரையும், ஐ.தே.கட்சியின் அமைச்சர்களையும் குறை கூறியதுடன், தங்களுடைய கொள்கை நிலைப்பாடுகளுக்கு அமைச்சரவை எந்த முக்கியத்துவமும் வழங்குவதில்லை என்பதையும் வெளிப்படுத்தியிருந்தனர்.
நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்பின் பின்னர் சுதந்திரக் கட்சி மூன்று பிரிவுகளாகப் பிரிந்துள்ளது.சுதந்திரகட்சியின் 16 அங்கத்தவர்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்ததுடன், தமது அமைச்சுப் பதவிகளையும் துறந்துள்ளனர்.
இப்போது சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவு அரசுக்குச் சார்பாகவும், மற்றொரு பிரிவு அரசிலிருந்து கொண்டே அரசுக்கு எதிராகவும், மூன்றாவது பிரிவு கூட்டு எதிரணியுடன் இணைந்தும் இயங்குகின்றன.
அடுத்த நாடாளுமன்ற அமர்வு ஏப்ரல் 19 திகதி நடை பெறும் போது எதிர்க்கட்சியில் அமருவதென மேற்குறிப்பிட்ட 16 அங்கத்தவர்களும் முடிவு செய்திருந்த போதிலும், ஜனாதிபதி ஏப்ரல் 12 ஆம் திகதி வரை நாடாளுமன்றத்தின் 8ஆவது கூட்டத் தொடரை, நீடித்திருந்தார்.
இதன்படி நாடாளுமன்ற இரண்டாவது கூட்டத்தொடரின் முதலாவது அமர்வு எதிர்வரும் மே மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஜனாதிபதி நாடு திரும்பியவுடன் சர்ச்சைக்குரிய 16 முன்னாள் அமைச்சர்களுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர, சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் துமிந்த திசாநாயக ஆகியோர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது, ஜனாதிபதி நாடு திரும்பியவுடன் ஐக்கிய தேசிய கட்சியும், சுதந்திரக் கட்சியும் ஒரு புதிய ஒப்பந்தத்துடன், புதிய அமைச்சரவையில் செயற்படவுள்ளதாக கூறினர்.
இந்த இருவரின் கருத்துப்படி அடுத்த தேர்தல் வரை இந்தக் கூட்டு அரசைத் தொடர்ந்து முன்னெடுப்பதே ஜனாதிபதியின் நோக்கம் எனக் கருதும் நிலையில், சர்ச்சைக்குரிய அந்த 16 பேரும், அரசமைப்பு யாப்பு விதிகளின் படி, 2015 ம் ஆண்டுத் தேர்தலில் சுதந்திரக் கட்சி போட்டியிடாத காரணத்தால், ஜனாதிபதியின் அத்தகைய புதிய ஒப்பந்தமெதுவும் செல்லுபடியாகாது என்று கூறியுள்ளனர்.
அத்துடன் சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மகிந்த அமரவீரவையும் துமிந்த திசாநாயகவையும், சுதந்திரக் கட்சியில் அவர்கள் வகிக்கும் பதவிகளிலிருந்து வெளியேற்றி கட்சியைக் காப்பாற்ற வேண்டுமென கருத்துத் தெரிவித்தார்கள்.
இந்த நிலையைப் பார்க்கும் பொழுது, பிரதமர் ரணிலின் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்பின் பின்னர், ஐக்கிய தேசிய கட்சி ஒன்றிணைந்து செயற்படுகிறது. ஆனால், சுதந்திரக் கட்சியோ மென்மேலும் நிலை தடுமாறிக் கொண்டு செல்கிறது எனக் கருத வேண்டியுள்ளது.