இரணைதீவு மக்களை வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் நேரில் சென்று பார்வையிட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
362வது நாளாக இரணைதீவு மக்கள் தமது பூர்வீக இடத்தில் குடியேற்றுமாறு சாத்வீக போராட்டத்தினை இன்றும் முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில் தங்களின் சொந்த நிலத்திற்குச் சென்ற மக்கள் நான்காவது நாளாகவும் அங்கு தங்கியிருக்கின்றனர்.
குறித்த பகுதியில் உள்ள மக்களை இன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் சந்தித்து கலந்துரையாடினார்.
இன்று பகல் இரணைதீவுக்கு சென்ற அவர் குறித்த பகுதியில் தங்கியுள்ள மக்களிற்கு உலர் உணவு பொருட்களையும் வழங்கி வைத்தார். இதன்போது அவருடன் பிரதேச சபை உறுப்பினர்கள் சிலரும் சென்றிருந்தனர்.
இதன்போது ஊடகங்களிற்கு கரு்தது தெரிவித்த அவர்,
மக்கள் தமது பூர்வீக மண்ணில் குடியேறுவதற்காக நீண்ட காலமாக போராடி வந்தனர். இந்நிலையில் இன்று அவர்கள் தாமாகவே குறித்த பகுதியில் குடியேறியுள்ளனர். இவர்களின் இந்த துணிகரமான செயல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அனைத்து போராட்டகாரர்களிற்கும் முன்னுதாரணமாகும்.
இன்று இவர்கள் குடிநீர் உட்பட அடிப்படை தேவைகள் இல்லாது வாழ்கின்றனர். குடிநீர் பெற்ற கொள்வதற்கு பொருத்தமான வாகனங்கள் வழங்கப்பட வேண்டும், அதே வேளை கொட்டகை அமைத்து வாழ்வதற்கு ஏற்ற வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
மக்கள் தொடர்பில் விசேடமாக வடமாகாண சபை விசேட கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக வடமாகாண முதலமைச்சர் இவர்களை நேரில் வந்து பார்வையிட்டு குறை நிறைகளை கேட்டறிந்து, உதவ முன்வர வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
இதே வேளை குறித்த பகுதியில் தங்கியிருந்தவர்கள் தமது காணிகளில் கிடைத்த தென்னை ஓலைகளை பின்னும் காட்சிகளும் பதிவாகியிருந்தன். அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
இந்த தென்னை மரங்கள் எமது மூதாதையர்கள் வைத்த தென்னைகள் மாத்திரமல்ல நாமும் நாட்டி சென்றிருந்தோம். இன்று 26 வருடங்களின் பின்னர் நாங்கள் எமது காணிகளில் சென்று தென்னை ஓலைகளை வெட்டி இப்போது பின்னி வருகின்றோம்.
இவற்றைக் கொண்டு மலசலகூடங்களை அமைக்கவும், கொட்டகைகளை அமைக்கவும் என எண்ணி இவ்வாறு நாம் செய்கின்றோம். எமக்கு மிகவும் சந்தோசமாக உள்ளது. எமது காணியில் உள்ள இவ்வாறான எமது வளங்களை நாம் பயன்படுத்த கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி என்றனர்.