ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இரண்டாக உடைந்தது. அதனைத்தொடர்ந்து முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வம் யாரும் எதிர்பாராத வகையில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அதன்பின்னர் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பதவி ஏற்றார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தனது அரசின் மீதான நம்பிக்கை தீர்மானத்தை சட்டசபையில் கொண்டுவந்தார்.
அந்த தீர்மானத்துக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுபோட்டனர். இதுகுறித்து சட்டசபை சபாநாயகர் தனபாலிடம் புகார் செய்யப்பட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்தநிலையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்றும், அவரை முதல்- அமைச்சர் பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்றும் தமிழக கவர்னரிடம், டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 18 எம்.எல்.ஏ.க்கள் புகார் அளித்தனர்.
இதையடுத்து அந்த 18 எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகரிடம் அரசு கொறடா புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் அந்த 18 பேரையும் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து அந்த 18 பேரும் வழக்கு தொடர்ந்தனர். அதேநேரம் தி.மு.க. கொறடா சக்கரபாணி ஐகோர்ட்டில் புதிதாக ஒரு வழக்கு தொடர்ந்தார்.
அதில், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். இதுகுறித்து சபாநாயகரிடம் புகார் செய்தும், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும்’, என்று கூறியிருந்தார்.
இதே கோரிக்கையுடன் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 4 பேர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகள் அனைத்தையும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் விசாரித்தனர். பின்னர் இந்த வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.
ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி தி.மு.க. கொறடா சக்கரபாணி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகளின் தீர்ப்பை இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2.15 மணிக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு பிறப்பிக்க உள்ளது.