அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார்.
தினம் ஒரு அதிரடி… மணிக்கு ஒரு சர்ச்சை என இருக்கிறார். இவரைப் பற்றி பல பிரபலங்கள் பேசித் தீர்த்து விட்டார்கள்.
முன்னாள் அதிபர் பாராக் ஒபாமாவின் மனைவி மிச்சேல் ஓபாமா, இதுவரை எந்தக் கருத்தும் கூறாமல் இருந்தார். தற்போது, முதன்முறையாக ட்ரம்ப்பை தாக்கி பேசியுள்ளார் மிச்சேல்.
அவர், ட்ரம்ப்பை பேர் சொல்லி தூற்றவில்லை. ஆனால், சமீப காலமாக ட்ரம்ப் தலைமையின் கீழ் இயங்கும் அமெரிக்க நிர்வாகம் குறித்து பல குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்.
மிச்சேல், அமெரிக்காவின் முதல் பெண்மணியாக இருந்தபோது, அமெரிக்க குழந்தைகள் மத்தியில் நிலவும் உடல் பருமனைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தி வந்தார்.
பள்ளிகளில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு முறைகளில், சத்தான உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
இன்றைய ட்ரம்ப் நிர்வாகமோ, அமெரிக்கப் பள்ளிகளில் மதிய உணவு வேளைகளில் கொடுக்கப்படும் சாப்பாட்டில், சத்தான உணவுக்கு இருக்கும் முக்கியத்துவத்தை குறைக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இது குறித்து பேசிய மிச்சேல், ”இங்குதான் நாம் அனைத்தையும் ஒதுக்கிவைத்துவிட்டு, இப்படிப்பட்ட முடிவுகள் ஏன் எடுக்கப்படுகின்றன என்பதைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.
நம் குழந்தைகள் பள்ளிகளில் நல்ல உணவை சாப்பிட நீங்கள் விருப்பப்பட மாட்டீர்களா? இல்லையென்றால், உங்களுக்கு என்னதான் பிரச்னை? என்னை இந்த விஷயத்தில் இருந்து முற்றிலும் நீக்கி விடுங்கள்.
ஆனால், ஒருவர் நம் குழந்தைகள் குப்பையைச் சாப்பிடுவதற்கு சம்மதம் என்று சொல்கிறார் என்றால், அதை நாம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அதை எப்படி நாம் கொண்டாட முடியும்?” என்று சராமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அமெரிக்காவில் இருக்கும் மளிகை கடைகள், உணவகங்கள் ஆகியவற்றில் விற்கப்படும் உணவுகளில் உள்ள கலோரி எண்ணிக்கை அளவு பட்டியலிட வேண்டும் என்ற நடைமுறையையும் ட்ரம்ப் நிர்வாகம் தள்ளிப் போட்டுள்ளது. இதனால், உணவில் எவ்வளவு கலோரிகள் இருக்கிறது என்பது அதை வாங்கி உண்பவர்களுக்குத் தெரியாமலேயே போகும்.
இதையும் சுட்டிக்காட்டிய மிச்சேல், ”கொஞ்சம் இதைப் பற்றி யோசித்துப் பாருங்கள். நீங்கள் என்ன சாப்பிடகிறீர்கள் என்பதைப் பற்றி உங்களுக்கே தெரியக் க்கூது? எவ்வளவு பெரிய நகைமுரண் இது’ என்று ட்ரம்ப் நிர்வாகத்தின் நடைமுறையை சாடியுள்ளார்.