கொரியப்போர் 1953-ம் ஆண்டு முடிந்த பின்னர் வட, தென்கொரியாக்கள் இடையே இணக்கமான சூழல் கிடையாது. கொரியப்போர் முடிவுக்கு வந்தபோதும், இரு நாடுகள் இடையே பனிப்போர் பல்லாண்டு காலமாக நீடித்து வந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் தென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், ஒரு அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தியது. அணு ஆயுத சோதனைகளால் தென்கொரியாவை மிரட்டி வந்த வடகொரியா இறங்கி வந்தது. தென்கொரியாவுடன் இணக்கமான போக்கை கடைப்பிடிக்க முன்வந்தது. இரு நாடுகளின் உயர்மட்ட தூதுக்குழுவினர் சந்தித்து பேசினர். அதைத் தொடர்ந்து இரு நாடுகள் இடையேயான பகை விலகத்தொடங்கியது.
அடுத்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன்னும், தென் கொரியாவின் அதிபர் மூன் ஜே இன்னும் உச்சி மாநாட்டில் சந்தித்துப் பேச முடிவானது. இதை அமெரிக்காவும் ஆதரித்து வருகிறது.
இதன்படி, இன்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தென்கொரியாவின் எல்லைக்குள் சென்றார். இருநாடுகளின் எல்லைப்பகுதியில் உள்ள பன்முஞ்சோமில் வடொரியா அதிபருக்கு தென்கொரிய முறைப்படி அணிவகுப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. கிம் ஜாங் உன்னை நேரில் வந்து தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் வரவேற்றார்.
பின்னர், இரு தலைவர்களும் கை குலுக்கிக்கொண்டனர். இரு நாடுகளுக்கும் இடையேயான உச்சி மாநாடு பன்முஞ்சோமில் நடைபெற உள்ளது. பன்முஞ்சோம் அமைதி இல்லத்தில் இந்த மாநாடு நடைபெறுகிறது. பேச்சுவார்த்தை நடைபெறும் இடத்தில் ராணுவம் இருக்காது என்று கூறப்படுகிறது.
வடகொரியா, அணு ஆயுத திட்டங்களை கைவிடுவதாக கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்து உள்ள நிலையில் அதை இன்றைய பேச்சுவார்த்தையில் இடம்பெறச்செய்து உறுதி செய்யும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அது மட்டுமின்றி அடுத்த மாத இறுதியில் அல்லது ஜூன் மாத தொடக்கத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்து நடத்த உள்ள பேச்சுவார்த்தைக்கு இந்த மாநாடு முன்னோட்டமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரிய போர் முடிந்த பின்னர் (1953) வடகொரிய தலைவர் ஒருவர், தென்கொரியாவுக்கு செல்வது இதுவே முதல் முறை ஆகும். அவருடன் 9 பேர் அடங்கிய உயர்மட்டக்குழுவினரும் அங்கு செல்கின்றனர்.