இலங்கை எண்ணும் இருண்ட கூடாரத்தில் சங்கிலிகளால், நரகத்தின் நிழலில் எமது மக்களை சிறையிட்டு, வாய்மூடி இருக்கும் படி ஆணையிட்டு அடக்குமுறையைக் கையாண்டு கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஏதும் முறையீடு செய்தால் இராணுவச் சவுக்கால், சாவால், பசியால், நில அபகரிப்பால் அச்சுறுத்துகின்றனர்.
ஆம், ஈழ விடுதலைப் போரின் இறுதிக் கட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளைப் பற்றிய கேள்விகளுக்கு யாதொரு தீர்மானமான பதிலையும் கூறாமல் பாசாங்கு செய்து இழுத்தடித்துக் கொண்டிருக்கும் இலங்கை அரசாங்கத்திடம் பல போராட்டங்களின் ஊடாக மன்றாடிக் கொண்டிருக்கும் தாய்மார்களின் நிலை தான் இது. நடந்தவற்றை யாவும் நன்றாக அறிந்திருந்தும் ஊமையாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் உலக வல்லாதிக்கங்களின் செவிட்டுச் செவிகளில் எமது தாய்மார்களின் கதறல்கள் மட்டும் ஏனோ எட்ட மறுக்கின்றன. மாறாக, போர் முடிந்துவிட்டது இனி இந்த நரகத்தில் மகிழ்வுடன் வாழுங்கள் என்றே அவர்கள் கூறிச் செல்கின்றனர்.
உலக வல்லாதிக்கங்களே, அனாதையாக்கப்பட்ட எங்கள் தாய்மார்களை உங்களால் காண முடிகிறதா? ஆண்டாண்டுகளாக இவர்களும் துயரமும் சகாக்களாய் இருப்பது தான் விதியா? இவர்கள் நல்வாழ்க்கை கிட்டாத நரகத்துப் பூக்களாக வாழவே இந்தப் பூமிப் பந்து விரும்புகிறதா? என்று பலவாறு கேள்விகள் எழுந்து நமது மனதை இரணமாக்கி, கணமாக்குகின்றன!
ஈழப் போரின்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலை குறித்த விழிப்பு உலகத்தமிழர்கள் மத்தியில் மிகப் பெரும் பேச்சுப் பொருளாக மாறியுள்ள நிலையில், தமிழீழ தலை நகராம் திருகோணமலையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது மிகப் பெரும் வேதனையை அளிக்கக் கூடியதாக இருக்கிறது. இது குறித்து யாதொரு பதிலும் அரசாங்கத்திடமிருந்து வந்தபாடில்லை. இப்படியான நிலையில் திருகோணமலையில் காணாமல் ஆக்கப்பட்ட தனது பிள்ளையைத் தேடிப் போராடிக் கொண்டிருக்கும் ஒரு தாயின் மனக் குமுரலை, பாசப் போராட்டத்தின் படிநிலையை ஒரு வாக்குமூலமாக இந்தத் தொகுப்பில் காண்போம்.
தமிழீழ விடுதலையின் மீதும் விடுதலைப் போராட்டத்தின் மீதும் தீரா பற்று கொண்டிருந்த மதிவதனன், இயக்க வேலைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார் பல செயல்களை இரகசியமாக செய்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் இவரின் இந்தச் செயல்பாடு சிங்கள இராணுவத்துக்குத் தெரியவரவும், இராணுவத்தால் தேடப்படும் நபராக அறியப்பட்டார். அதன் பிறகு தலைமறைவாகத் திரிகோணமலைக்கு வந்தவர், அப்போது நாங்கள் முகாமில் தான் வாழ்ந்து கொண்டிருந்தோம். அகதிகள் முகாமில் சிங்கள இராணுவத்தினரால் அரங்கேற்றப்பட்ட அடக்குமுறைகள் மற்றும் கொடுமைகள் காரணமாகவும், மதிவதனின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும் அங்கிருக்க முடியாமல், தனியே வீடெடுத்து விஜியையும், இவரையும் எங்களுடன் சேர்த்து வாழ்ந்து வந்தோம்.
அந்த காலகட்டங்களில் பகல் வேளைகளில் இராணுவக் கெடுபிடிகள் அதிகமாக இருந்தமையால் இவரைப் பகலில் வெளியே செல்ல நாங்கள் அனுமதித்ததே இல்லை, இரவு நேரங்களில் சில சமயம் கடைகளுக்குச் சென்று வருவார். அந்த நாளும் அப்படித்தான் கடைக்குச் சென்று சைக்கிளை எடுத்துக் கொண்டு சென்றவர், கணநேரமாகியும் வீடு திரும்பவில்லை. சந்தேகப் பட்ட நான் அவரைத் தேடிச் கடை இருந்த இடத்தை நோக்கிச் சென்றேன். நாங்கள் இருந்த பகுதியிலிருந்து கடை கொஞ்சம் தொலைவுதான், என்றாலும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வேகமாகக் கடையிருந்த இடத்தைச் சென்றடைந்தேன். அங்கு கடைக்காரரிடம் விசாரித்த பொழுது “இப்போது தான் அவரை யாரோ ஒரு வேனில் ஏற்றிக் கொண்டு போனார்கள், யாரென்று தெரியவில்லை. அதோ அவருடைய சைக்கிள் அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கு பாங்கோ!” என்றார். அவர் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையுடன் இரவு முழுவதும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்தோம் ஆனால் அவர் வரவில்லை. பிறகு காலையில் நாங்கள் காவல் நிலையத்தை அணுகினோம். காவலர்கள் எங்களிடம் அனைத்து விவரங்களையும் பெற்றுக் கொண்டு அனைத்தையும் குறித்துக் கொள்கிறோம் என்று கூறி பாசாங்கு செய்தார்கள், ஆனால் அவர்கள் ஒன்றுமே எழுதாமல் இருந்தது எங்களுக்குப் பிறகு தான் தெரிந்தது. அவன் நாங்கள் கூறிய எதையுமே பதியவில்லை எங்களுக்குப் பதிலும் கிடைக்கவில்லை. பிறகு அப்போதைய ஜனாதிபதியாக இருந்த மகிந்துக்கும் கடிதம் ஒன்று எழுதி அனுப்பினோம் அதற்கும் இதுவரை எங்களுக்கு இந்தப் பதிலும் வரவில்லை.
பிறகு ஜனாதிபதி மாளிகையின் முன் நடந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கோரிய ஆர்ப்பாட்டத்திலும் கலந்துகொண்டோம் நாங்கள். அதிலும் எங்களுக்கு எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை.
இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பல ஆயிரம் காணிகளை விடுவிக்க நாங்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். மக்கள் பிரதிநிதிகள் அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றனர். காணி ஆக்கிரமிப்பு என்பது இலங்கை அரசுக்கு சர்வதேச அளவில் ஆக்கிரமிப்பு ப் பெயரை ஈட்டிக் கொடுத்துள்ளது. நிலத்தையும் அதிகாரத்தையும் தம் வசம் வைத்திருப்பதன் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி ஆள்வதே அரசின் நோக்கம். அதனை இராணுவ அதிகாரத்தின் வசம் வைத்திருப்பதன் மூலம் ஒடுக்குமுறையை இன்னும் கூர்மையாக்கலாம் என்றும் இலங்கை அரசு கருதுகின்றது.
இந்த நிலையில் இராணுவத்திற்கு அடுத்தபடியாக, சீருடை, துப்பாக்கி ஏதுமற்ற ஒரு இராணுவமாக புத்தர் சிலைகளை அரச படையினர் உபயோகிக்கின்றனர். தமிழ் மக்களின் நிலத்தில் அவர்களின் சமய வழிபாடுகளுக்கு சம்பந்தமில்லாத வகையில், அவர்களின் வழிபாட்டு இடங்களுக்கு எதிராகவும் அச்சுறுத்தலாகவும் புத்தர்சிலைகளும் விகாரைகளும் நிறுவப்பட்டுள்ளன. இராணுவத்தினர் நிலை கொண்டுள்ள இடங்கள் முழுவதும் புத்தர் சிலைகளையும் விகாரைகளையும் நிறுவியுள்ளனர். அந்த வகையில் பார்த்தால் இராணுவ ஆக்கிரமிப்பின் உச்சத்தை புத்தர்சிலைகளும் விகாரைகளும் தெளிவாக எடுத்துரைக்கின்றன.
கடந்த ஆட்சியாளர்களால் அவர்களின் அரசியல் தேவைக்காகவும் ஆயுதமற்ற யுத்தத்தை நடாத்தவும் பௌத்த பேரினவாத அமைப்புக்கள் உருவாக்கப்பட்டன. இவை தொடர்ந்தும் தமிழ் பேசும் மக்களை அச்சுறுத்திய வண்ண்ம் உள்ளன. வெளிப்படையாகவும் கடும்போக்காவும் விடுக்கப்படும் இந்த அச்சுறுத்தல்களுக்கு உரிய நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
இத்தனை ஆண்டுகள் கழித்து இலங்கையில் காணாமல் போனவர்கள் இல்லை என்று அறிக்கை விடுகிறது அரசாங்கம். அதற்கு ஈடாக 2 லட்சம் ரூபாய் பணம் கொடுப்பதாகவும் நியாமின்றி கூறுகிறது அரசு. நாங்கள் கூறுகிறோம் எங்களுக்குக் காசு வேண்டாம், நாங்கள் வேண்டுமானால் 4 லட்சம் தருகிறோம் எங்களுக்கு எங்கட பிள்ளைகளைத் திருப்பி தாருங்கோ என்று. இது தவிர எங்கள் 5 ஏக்கர் காணியையும் ஆக்கிரமித்துக் கொண்டது இராணுவம், அதனை அணுமின் நிலையத்துக்குக் கொடுத்துவிட்டார்கள். சிங்கள படைகள் தொடர்ந்து எனது மகன் விஜிகரனைத் தேடி வருகிறார்கள்.
தமிழீழ விடுதலைக்கான குரலை புலம்பெயர்ந்து வாழ்ந்தும் ஓய்ந்து போய்விடவில்லை, என்பதை எனது மகன் தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் நிலையில் எம்மை அச்சுறுத்தும் வகையில் இத்தகைய அடக்குமுறைகளைச் சிங்கள காவல்துறை ஏவிவிடுகிறது. சுறுத்தி அரச பயங்கரவாதத்தை ஏவிவிடும் சிங்கள பேரினவாத அடையாள ஆதிக்கம் என்பன எம்மை படுகொலை செய்யும. அளவிற்கு அச்சுறுத்துகின்றார்கள். வரலாற்றை எத்தகைய நிலைக்கு கொண்டு சென்றது எங்கள் பிள்ளைகளுக்கு சர்வதேச நீதி கிடைக்கும் வரை நாம் தொடந்து போராடுவோம்.