பச்சாத்தாபமற்ற பதர்களே..!
எம் தேசத்தில் புதையுண்டு போனவரின் இறுதி அலறலை
நாங்கள் மறக்காதிருப்பதை பார்க்கச் சிலருக்கு சகிக்கவில்லை
அண்டிப் பிழைத்து உண்டி பெருத்தால் அன்றி
அன்னை நிலம் பற்றி அலட்டிக்கொள்ளாதார்
பலரும்தான் இப்போதும் வியாக்கியானம் பேசுகிறார்
எங்கள் சூடு சுறணையற்ற வாழ்க்கையால்த்தான்
இன்றும் வந்தேறு குடிகளென சொல்வதையும்
பொறுத்துக்கொண்டு வக்கணையாய் வாழ்ந்து மடிகிறோம்
அட வந்ததடம் மறந்து, எம்மக்கள் வெந்த இடம் மறந்து சந்தன மஞ்சத்தில் சரியலாம் ஆனால்
அடுத்த பத்தாண்டுகளில் எங்கள் வரலாற்றையே
மாற்றியெழுதி அவர்தம் பாடப்புத்தகத்தை
அச்சடிப்பார்கள்
அன்று மூலம் தள்ளிய கிழவன் போல பேச வழியற்றுக்கிடப்போம் என்பதேன் சில
ஈழப்பிள்ளைகட்கு புரியவில்லை
எந்தநாட்டில் வாழ்ந்தாலென்ன எம் பிணத்தை சொந்தமண்ணில் புதைக்க சுதந்திரமாய்
ஒரு நாள் வேண்டுமென ஏங்கித்தவிப்பவர்கள்
இருக்கத்தான் செய்கிறார்கள்
தன் பாட்டனின் அழிவை பக்கத்திலிருந்து பார்க்காத எம் பேரர்கள் படித்துத்தெரியவேண்டிய வடுக்களை எழுத்தில் எழுதி வைக்கக்கூட
அச்சப்படுகிற நாங்கள் அழிக்கப்படுவது
அதிசயம் ஒன்றுமில்லை
கொத்துக்குண்டுகள் குதறிய உடல்களை
பக்கத்திலிருந்து பார்த்த பெரும்வலியை
என்னால் எந்தக்காலத்திலும் இறக்கி வைக்க முடியாது
இனியேனும் எம்மவர் மரணத்தை மதிக்காவிடினும் மிதிக்காமல் இருங்கள்
பச்சாத்தாபமற்ற பதர்களே..!
– #அனாதியன்-