ஐயோ… ஐயோ…
வானமெழுந்த அழுகுரல்களுக்கு
அர்ததமற்ற இரவுகளை
நாங்கள் கடந்து கொண்டிருந்தோம்
கருமுகில்களைக் கிழித்துக் கொண்டு
பாய்ந்து வரும் வெடி மழையில்
நீரவியாய் எம் குருதியை
பறித்தெடுத்துக் கொண்டிருந்தான்
சூரிய பகவான்.
அவனுக்கென்ன…?
ஆயிரம் ஆண்டுகள் பலவற்றைக்
கடந்தாலும் அவன் சிரித்துக்
கொண்டுதானே இருக்கிறான்
எமக்கு மட்டும் தானே
அவலமும் வலியும்
அப்பனும் ஆத்தாவும்
உடல் சிதறிப் போகையிலே
கையில் கிடைத்ததை
தூக்கிக்கொண்டு
பரதேசியாகிய அந்த பொழுதை
அவன் கடக்கவில்லையே
நான் தானே கடந்து வந்தேன்
என் தங்கை உடையற்று
நீரற்ற மீன் குஞ்சாக துடிக்கையில்
நிர்வாணமாய் கரங்கள் கட்டப்பட்டு
சேற்றுக் குழிக்குள் கிடந்த
கொடுமை அவனுக்கு நடக்கவில்லையே
எனக்குத் தானே நடந்தது.
ஒற்றைப் பருக்கை சோற்றுக்கும்
தாகம் போக்கும் தண்ணீருக்கும்
முதுகில் பிரம்படி வாங்கி வாங்கி
செல்லில் பட்ட புண்ணை விட
ஆறாத வடுவைச் சுமந்தது
அவனில்லையே நான் தானே
பொஸ்பரசிலும் இரசாயனத்திலும்
கருகி உடல் சிதறி
கருவுற்ற மனைவியோடு
வயிற்றிலமர்ந்திருந்த சிசுவையும்
தொலைத்தது அவனில்லையே
நான் தானே
பால் மாவுக்கும் வாய்ப்பனுக்கும்
நீண்ட வரிசையில் காத்திருந்து
சோர்ந்து போன என் பிள்ளை
வாங்கிய வாய்ப்பனை
வாயில் வைத்த கொடுமையான
நிமிடத்தில் வானேறி
வந்து கழுத்தறுத்துக்
கொன்று போட்ட கொடுமை
அவனுக்கில்லையே எனக்குத் தானே
நடந்தது…
பங்கர் என்ற பெயரில்
ஒற்றைக் குழிக்குள் நாம்
வாழ்ந்த குழியை தன்
வாழ்வாக கொண்ட
பாம்பு கடித்து உயிர் பிரிந்த
என் சித்தியைப் போல
ஒருத்தியை அவன் இழக்கவில்லையே
நான் தானே இழந்தேன்
அப்புறம் ஏன் அவன் அழவேண்டும்
ஆயிரம் ஆண்டு கடந்தாலும்
நானல்லவா அழுது தொலைக்க வேண்டும்
கவிமகன்.இ
08.05.2017