2009
வைகாசி மாதத்தின்
இந்த நாட்களில்தான்
நாம் கருகிக் கொண்டிருந்த தேசமொன்றின்
கரையில் நின்று கதறிக்கொண்டிருந்தோம்
நகர்ந்த ஒவ்வொரு கணங்களிலும்
முச்சடங்கிப்போகிற ஆன்மாக்களின்
இறுதிமூச்சுக்காற்றைத்தான்
அப்போது நாம் சுவாசித்துக்கொண்டிருந்தோம்
நாளொன்றின் விடியல் தொடங்கி
அடுத்த நாளின் விடியல் வரை
உறக்கமின்றி இன்னமும் மிச்சமாய் கிடந்த உயிருக்காய் பாதுகாப்பான இடத்தை தேடி
ஓடிக்கொண்டேயிருந்தோம்
“கடவுளே என்னை காப்பாற்று ”
என்று குற்றுயிராய் கிடந்தவர்களின்
இறுதிக் கண பிராத்தனைகள் கூட
அருகில் இருந்த கண்ணகி அம்மனுக்கு கூட கேட்டிருக்கவில்லை
எத்தனை உடல்களின் உயிர்பிரிதலை
கண்முன்னே பார்த்தும்
நாம் கால்லாய் கடந்து வந்திருந்தோம்
பதுங்கு குழிகள் பலருக்கு புதைகுழியாய் மாறிப்போனது
சீறி வந்த தோட்டாக்களும் எறிகணைகளும்
கணப் பொழுதில் பலரின் உயிரைக் குடித்துக் கொண்டிருந்தது
இறந்தது
தந்தையோ தாயோ
அண்ணணோ தம்பியோ தங்கையோ
கணவனோ மனைவியோ பிள்ளையோ
அப்போது கண்ணீர் விட்டு கதற கூட
நேரம் கைவசமாய் இருக்கவில்லை
அன்று அந்த பாலத்தை கடந்து வந்த
எமக்கு மட்டுமே
இந்த நினைவுகள் அனுபவித்த வலிகளாய்
இன்றும் நெஞ்சத்துள் புதைந்துபோய்க் கிடக்கிறது
-பிரகாஷ்