நான் செய்தி சேகரிக்கச் செல்லும்போதெல்லாம் பயந்து பயந்து தான் போவன். சாவது என்பது எனக்கு சாதாரணம். ஆனால் காயமடையக்கூடாது, வலி தெரியாமல் குண்டுபட்ட உடனேயே செத்திடனும். காயப்பட்டா உயிரோட இருக்ககூடாது. அந்த வலியை தாங்கமுடியாது. ஏற்கனவே காயமடைந்தவர்களோடு கதைக்கும் போது ஏற்பட்ட இந்த மனநிலையோடுதான் ஒவ்வொரு இடங்களுக்கும் செல்வது உண்டு.
கிளிநொச்சியை அண்டிய பகுதிகளில் இலங்கை விமானப்படையினர் நடத்திய அனைத்துத் தாக்குதல் செய்திகளையும் நான் சேகரித்திருந்தேன். விமானங்கள் முதல் குண்டு போட்ட பின்னரே அவ்விடத்தினை நோக்கி உடனடியாக செல்வோம். தாக்குதல் இட்மபெறும் இடத்திற்கு சுமார் மிக கிட்டிய தூரத்தில் இருந்துவிட்டே விமானங்கள் சென்ற மறுகணமே அந்த இடத்திற்குள் செல்வது வழமை.
இந்தப் பதிவும் அப்படித்தான். நானும், சக ஊடகவியலாளர்களும் நேரில் பார்த்த கொத்துக்குண்டு தாக்குதல் பற்றிய பதிவு.
இறுதி யுத்த காலப்பகுதியில் கொத்துக்குண்டுகளை பயன்படுத்தவில்லை எனத் தொடர்ச்சியாக நிராகரித்து வரும் அரசாங்கத்தின் பார்வைக்கு இவ் ஆதாரங்களை மீண்டும் கொண்டுவருவதோடு, சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் கவனத்திற்கும் கொண்டு வருகின்றேன். சுண்டிக்குளம் – கல்லாறு கிராமத்தை அண்டிய பிரதேசம். சுமார் 30 குடியிருப்புக்களை தொண்டு நிறுவனம் ஒன்று இடம்பெயர்ந்தோருக்காக அமைத்துக்கொடுத்திருந்தது. பெருமழையினை சந்தித்திருந்த அன்றைய நாட்களில் அந்த முகாமைச் சுற்றி வெள்ளகாடாகி காட்சியளித்தது.
“அன்றைக்கு 29 ஆம் திகதி நவம்பர் மாசம் 2008 ஆம் ஆண்டு. விடியவெள்ளன 1.35 மணியிருக்கும். சனங்கள் அந்த நேரத்திலயும் இடம்பெயர்ந்து வந்துகொண்டிருக்குதுகள். எங்கட வீடு விசுவமடுவில இருந்தது. நான் வீட்ட படுத்திருந்தனான்.
அந்த நேரம் திடீர் எண்டு வந்த மிக் விமானங்கள் எனக்கு நேர முன்னுக்கு சில மைல்கள் தூரத்தில் குண்டு போட்ட சத்தம் கேட்டது. திடீரெண்டு பெரிய குண்டுச்சத்தங்கள் கேட்க வீட்டில் எல்லாரும் எழும்பிற்றினம். மிக் விமானங்களின் சத்தம் அப்பிடி. வெளிச்சக்குண்டுகளை வீசினாதால தருமபுரம், விசுமவடு எல்லாம் போல இருந்தது. அவ்வளவு வெளிச்சம். விமானங்கள் மிக கிட்டத்தில எங்கயோதான் குண்டுகள் போடுது எண்டத என்னால் ஊகிக்க முடிஞ்சது. அந்தளவுக்கு விமானங்களின் இரைச்சல் ஒருவித பயத்த எனக்குள் ஏற்படுத்தியிருந்தது. பயம் இருந்தாலும் என்ர வேலையச் செய்யவேணும் எண்டு நினைச்சிக்கொண்டு, மோட்டர் சயிக்கிளில விசுவமடுவில் இருந்து சுண்டுக்குளம் சந்தி நோக்கிப் போனன்.
நான் போற திசையிலயே விமானங்கள் தாக்குதல்கள் நடத்துவது எனக்குத் தெரிஞ்சது. அதுமட்டுமல்லாம, தாக்குதல் நடக்கிற இடம், இடம்பெயர்ந்த மக்கள் அதிகமாக வாழ்ந்து வாற முகாம். . இந்தத் தாக்குதலில சனங்களுக்குத்தான் அதிக பாதிப்புக்கள் வந்திருக்கும் என்றே என்ர மனம் சொல்லிக்கொண்டிருந்தது. ஆனால் அந்த இருட்டு நேரத்தில எவ்வளவு தூரத்தில் தாக்குதல் நடக்குது எண்டு எனக்குத் தெரியேல்ல. ரெண்டாவது முறை குண்டுத் தாக்குதல் நடக்கேக்க நான் சுண்டிக்குளம் சந்திக்குப் போயிற்றன். றோட்டில ஒரு சனம் கூட இல்லை. இந்தத் தாக்குதலில யாரும் காயப்பட்டிருந்தால் கிளிநொச்சி – தருமபுரம் ஆஸ்பத்திரிக்குத்தான் கொண்டு வரவேணும். எனவே நான் தருமபுரம் ஆஸ்பத்திரிக்குப் போனன்.
ஆனால் அங்க காயப்பட்டவங்கள் யாரும் வரேல்ல எண்டு ஆஸ்பத்திரில வேலை செய்த ஆக்கள் எனக்கு சொல்லிச்சினம். . அவையளும் ஆஸ்பத்திரி வாசலிலதான் நிற்கினம். நான் திரும்பி சுண்டிக்குளம் சந்தியால் கல்லாறு பக்கமா என்ர மோட்டர் சயிக்கிள்ல போய்க்கொண்டிருந்தன்.
அந்த நேரம் பார்த்து மோட்டர் சயிக்கிளுக்கு மண்ணெண்ணெய் முடிஞ்சுது. அப்பிடியே நிண்டிட்டுது. அந்த நேரத்தில யாரிட்ட உதவி கேட்கிறது..? உதவி செய்யிற மனமிருந்தாலும், மருந்துக்கு கூட மண்ணெண்ணெய் யாரிட்டயும் இருக்கேல்ல. மோட்டார் சயிக்கிள சரிச்சா கொஞ்சத்தூரம் ஓடலாம். நான் யோசிச்சிக்கொண்டு நிற்க, இன்னொரு மோட்டர் சயிக்கிள் தாக்குதல் நடந்த பக்கமிருந்து வேகமா வந்தது.
அந்த மோட்டார் சயிக்கிளில பின்னுக்கு இருந்தவர் கத்தி அழுதுகொண்டு போனார். நான் உடன அவயள பின்தொடர்ந்து போய், ”அண்ணை எங்க கிபிர் அடிச்சது? காயப்பட்ட ஆக்கள் இருக்கினமோ” என்று கேட்டன். ” எனக்கு தெரியேல்லை. ஆனா நிறைய சனம் கத்துற சத்தம் மட்டும் கேட்குது”. அதுக்குப் பிறகுதான் தெரிஞ்சது காயப்பட்டு, றோட்டால ஓடிவந்த ஒராளைத்தான் அந்த மோட்டர் சயிக்கிளில ஏத்திக்கொண்டு வாறார் எண்டு. உடன ஆஸ்பத்திரிக்குப் போனால் காயமடைஞ்ச ஆக்களின்ர முழுவிபத்தையும் எடுக்கலாம் எண்டு யோசிச்சி, அங்க போனன். “எனக்குப் பெரிய காயம் இல்லை. ஆனால் முகாமுக்குள்ள தான் குண்டுகள் விழுந்தது. அதில் நிறைய பேர் எங்க ஓடினாங்கள் எண்டும் தெரியாது. முகாமை சுற்றி வாய்க்கால் இருக்கு. கழுத்தளவு தண்ணிக்குள்ளால வரமுடியாமல் காயமடைஞ்ச ஆக்கள் அங்க இருக்கினம். நான் ஒருமாதிரி தப்பியோடி றோட்டுக்கு வந்தே, இந்த மோட்டார் சயிக்கிளில ஆஸ்பத்திரிக்கு வந்தன்” என்றார் கத்திக்கொண்டு வந்தவர்.
நான் நினைக்கிறன், இந்தளவு நிகழ்வும் விமானங்கள் சென்று 15 நிமிடங்களுக்கும் நடந்திருக்கும். அதுக்குப் பிறகுதான் ரெண்டு அம்புலன்ஸ் அனுப்பி காயப்பட்ட ஆக்கள ஆஸ்பத்திரிக்குக் கொண்டுவந்தது. இரவு எங்களால மிக் அடிச்ச இடத்துக்குப் போக முடியேல்ல. நானும் லோகீசனும் ( இறுதிப் போர் வேளையில் பணியாற்றிய இன்னொரு பத்திரிகையாளர்) காலமதான் கல்லாறு பகுதிக்கு போனம்.
அது உழவனூர் எண்டுற கிராமமத்தின்ர பின்பகுதி. அதுக்கு அடுத்த கல்லாறு கிராமம். இடம்பெயர்ந்த ஆக்களுக்கு அப்பத்தான் வீடுகள் கட்டிக் குடுத்திருக்கினம். சில ஆக்கள் கட்டிக்கொண்டிருக்கினம். அதுக்குள்ள தான் மிக் குண்டு போட்டது. சில குண்டுகள் வெடிச்சாலும் அதின்ர பகுதிகள் சிதிறிப் போய் கிடந்தது. அதில ஒரு குண்டு கொட்டிலுக்கு முன்னால நிலத்துக்குள்ள அரைவாசி இறங்கியிருந்தது. மற்றது சிதறியிருந்தது. அதை நாங்கள் போட்டோ எடுக்கேக்கத்தான். அந்த இடத்தில் நிண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகங்களை சேர்ந்த போராளிகள், “இதுதான் க்ளாஸ்டர் குண்டு எண்டாங்கள். இது சண்டைகளில பயன்படுத்த தடை” எண்டும் சொல்லிக் கொண்டிருந்தாங்கள்.
கிளிநொச்சி ஜெயந்திநகர் அருகாமையில் அமைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் முக்கிய முகாம் மீதான தாக்குதலின்போது விமானப்படையினரின் தளபதியாக இருந்த றொசான் குணதிலகவே, சுண்டிக்குளம் – கல்லாறு பொதுமக்கள் மீதான தாக்குதலுக்கும் பொறுப்பு வகிந்திருந்தார் என்று பின்னர் அறிந்துகொண்டேன். இவர் ஏற்கனவே பிரித்தானிய விமானி ஒருவருடன் சேர்ந்து பிரமந்தனாறு கிராமப் படுகொலை சம்பவத்துடன் தொடர்புடையவர் என்றும் அறியக்கிடைத்தது.
கொத்துக்குண்டுகள் பல நாடுகளிலும் தடைசெய்யப்பட்டிருக்கின்றன. 2008 ஆம் ஆண்டு மே மாதம் 30 திகதி டப்ளின் தீர்ப்பாயத்தின் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின்படி (Convention on Cluster Munitions ) இரசாயன ஆயுதங்களைத் தயாரிக்கவோ, விற்பனைசெய்யவோ, களஞ்சியப்படுத்தவோ, பயன்படுத்தவோ தடையுத்தரவு அறிவிக்கப்பட்டது. அதனையும் மீறி இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தினால், விநியோகம் செய்தால் மனித குலத்துக்கு எதிரான குற்றமாக அது கருதப்படும். இவ்வுடன்படிக்கையை ஏற்று உலகின் 108 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இந்த சர்வதேச சட்டங்களையெல்லாம் மீறித்தான் இலங்கை இராணுவம் இறுதிப்போரின்போது பொதுமக்கள் மீது கொத்துக்குண்டுகளைப் பொழிந்தது.
இவ்வாதாரங்களை கடந்த காலங்களில் பல சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டிருந்தபோதும்
“யுத்தத்தின் போது அரச படையினர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கொத்துக்குண்டுகளை பயன்படுத்தவில்லை. கொத்துக்குண்டுகளை பாவித்தமைக்கான சர்வதேச குற்றச்சாட்டுக்களை நாம் நிராகரித்திருந்தோம். கொத்துக்குண்டுகளை பயன்படுத்தியமைக்கான எந்தவித ஆதாரங்களும் இல்லை. கொத்துக்குண்டுகளை நாம் இனிவரும் காலங்களிலும் பயன்படுத்துவதில்லை என்பதே எமது நிலைப்பாடாகும், என அமைச்சரவை இணைப்பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன ஊடகங்களிற்கு முன்னர் தெரிவித்திருந்தார்.
இவ்வளவு ஆதாரங்களை நாம் முன்வைத்தும் உலகிற்கு ஈழத்தில் இடம்பெற்றது சாட்சியமற்ற போர். இதுவே சிரியாவாக இருந்திருந்தால்…! சிரியா போல எங்கள் மீதான தாக்குதல்கள் சர்வதேசமயப்படவில்லை என்ற கவலையோடு அடுத்த பகுதியை எழுதத் தொடங்குகின்றேன்.
பகிர்வு – சுரேயன்