ஒரு பேயைப்போல
கறுப்பாய் இருக்கிறது இரவு…..
அவளின் காதுகளில் இன்னமும்
அவன் கடந்து சென்ற
அந்தக்கடல் இரைந்துகொண்டிருக்கிறது…..
நீலமும் சிவப்புமாக அந்தக்கடல்
நீண்டுகிடக்கிறது……..
மூப்படைந்த பெண்ணாய் அதன்
அலைக்கரங்கள் மெலிந்திருக்கின்றன….
அவள் பல ஆண்டுகளாய்
அவனை எதிர்பார்த்திருக்கிறாள்…….
யார்யாரொ சொல்வது போல
அவன் மரணித்துப்போகவில்லை என்றும்
அவன் வருவானென்றும்
அவள் காத்திருக்கின்றாள்…….
அவன் வரும்போது அவனது
தொந்தி பருத்திருக்கக் கூடும்…..
மூப்பும் நரையும் அவனின்
முக அழகை மறைத்திருக்கவும் கூடும்….
ஆயினும்…
கண்களில் சுமந்த கனவுகளின் வெற்றியுடன்
அவன் வருவான் என்பது
அவளுக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது…..
அவனுடைய மௌனம் சொற்களாகி
காற்றோடு வருவதை
அவள் யாரிடமும் சொல்வதில்லை…….
அவனின் கண்களென மின்னும்
நட்சத்திரங்களோடு நாளும் அவள்
பேசிக்கொண்டிருக்கிறாள்……
பனிச்சை மரத்தின் பசிய இலைகளென
மனதில் பதிந்துகிடக்கின்றன அவன்நினைவுகள்………….
தன்னைமறந்து அவள் உறங்கும் தருணம்
கன்னங்களை ஒற்றியெடுக்கிறது
அவனை அளைந்துவந்த காற்று…….
வெளித்தெரியா உணர்வுகளாய் உள்நுழைந்து
அவளை இயக்கும் சக்தியாகிறான் அவன்…..
வெற்று வாய்க்குள் அவனை வைத்து
மெல்லுகின்ற மனிதர்களே…..
கண்களில்சுமந்த கனவுகளின் வெற்றியுடன்
அவன் வருவான் என்பது
அவளுக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது…..
அவள் ஒரு தாய்.
-ஆதிலட்சுமி சிவகுமார்