தாமரை இலையில்
தஞ்சம் புகுந்த தண்ணீர்
தாங்காத மகிழ்ச்சியில்
கன்னம் விழுந்த கண்ணீர்
அவிழும் மொட்டின் அண்டை
வயதான வண்டின் சண்டை
நறுமணல் மீதினில்
நண்டின் சித்திரம்
நாணும் போதினில்
நங்கையின் விசித்திரம்
மண் அள்ளித் தின்னும்
மழலையின் தேசப்பற்று
விண் வெள்ளி எண்ணி
விளையாடும் இரவு
நீ தள்ளிப் போனாலும்
நெருங்கு கின்ற உறவு
சேலை மறைப்பில் சேராத இடுப்பு
விறகுகள் எரிந்தும் வேகாத அடுப்பு
குட்டிச் சூரியனான கோதை மூக்குத்தி
கட்டித் தழுவும் காதலரின் காமத்தீ
குறிவைத்த மீனுக்காய்
கொக்கின் காத்திருப்பு
குமரியின் குழல்சேர
பூவின் பூத்திருப்பு
கொள்ளைச் சிரிப்பில்
குழிவிழும் கன்னம்
வெள்ளை உடையில்
விரைந்து வரும் அன்னம்
தொலைந்து கிடைத்த பொக்கிஷம்
தொலைக்க நினைக்கும் துரதிஷ்டம்
பொன் அள்ளிச் சொரியும்
பூங்கோதை கழுத்து
காந்தமாய் ஈர்க்கும்
கவிஞனின் எழுத்து…..