ஒவ்வொரு கணமும்
உன்னைத்தேடும் என்விழிகள்…..
இன்று சில
ஒளிப்படங்களைப் பார்த்தேன்..
ஏதாவது ஒன்றிலாவது
உன்னை அடையளங்கண்டுகொண்டால்
இந்த மனம் அமைதியடையக்கூடும்….
இது எவ்வளவு வலி தெரியுமா……
நாளும் பொழுதும்
துளைத்து துளைத்து தின்னும்
இந்தவலியை எவரிடம் முறையிடுவேன்…..
ஒருகாலின் ஒளிப்படத்தை
இன்று கண்ணுற்றேன்….
உன்காலைப் போலவே அதுவும்
கறுப்பாயிருந்தது…..
அந்தக் காலின் சுருண்ட முடிகள்
அந்தக்கால்
உன்னுடையதாய் இருக்கலாம் என்றன…
நீ முதன்முதலாக சயிக்கிள்ஓடி விழுந்த
காயமும் அதில் இருக்குமாற்போலத் தோற்றம்….
எத்தனை நாட்கள் உன்காலைவருடி
தூங்கவைத்திருப்பேன்……….
நீண்ட நேரமாய்
என்னுள் உதைத்துக்கொண்டிருக்கிறது
அந்த ஒளிப்படக் கால்……
மேகம் திரண்டிருக்கும் பொழுதில்
வானமாய் அழுகிறது மனம்…..
தொலைத்தவர்களின் பாடல்
மின்னலென வெட்டுகிறது வெளியே …..
துண்டுதுண்டாய் வெளிவரும்
உடற்கூறுகளை ஒவ்வொருநாளும்
சிறு குழந்தையைப் போல
பொருத்திப்பார்க்கிறேன்
உன்னை அடையாளம் காண்பதற்காய்….
இது காலத்தின் விளையாட்டா இல்லை
கடவுளின் களியாட்டா…….
தொலைத்தவர்களின் பாடலாய்
வானம் அழுகிறது……….
– ஆதிலட்சுமி சிவகுமார்.