“பாலசந்திரன்” இந்த பெயரை உச்சரிக்காதவர்கள் யாரும் இல்லை. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் சிங்களக் கொடியவர்களின் இனவழிப்புக்கு செத்துப் போன குழந்தைகளின் குறியாக மார்பில் குண்டேந்தி வீழ்ந்த பாலகன். சர்வதேசத்துக்கு இருக்கும் கண்களுக்கு இரத்த சிதறலின் வலிமையை உணர்த்திச் சென்ற சின்னவன். அவனை எம் சிறுவர்களின் குறியீடாக எடுத்துக் கொண்டு இந்த பத்தியை எழுத வேண்டி துர்ப்பாக்கிய நிலைக்கு நான் தள்ளப்பட்டுள்ளேன்.
இன்று அனைவரது மனங்களிலும் வாழ்ந்து கொண்டிருப்பான் அந்தக் குழந்தை. துரு துரு என ஓடும் அவன் கால்களும் எந்நேரமும் அறிவார்ந்த சிந்தனையும் கற்றவர்களை கூட ஒரு நிமிடம் யோசிக்க வைக்கும் கேள்விக் கணைகளால் துளைக்கும் அவனது கற்றார்ந்த திறமையும், அவனை அனைவராலும் கவரப்பட்டவனாக வெளிகாட்டியது என்றால் அதில் எந்த மிகையும் இல்லை.
1996 ஐப்பசி திங்கள் பத்தாவது நாள் முல்லைத்தீவு மண்ணில் இருந்து கொடியவர்களை விரட்டியடித்த வெற்றி செய்தியை தாயகம் கொண்டாடி கொண்டிருந்த தருணம் தேசிய தலைவருக்கு முள்ளியவளை மண்ணில் இருந்து ஒரு செய்தி வருகிறது.
“ஆண் பிள்ளை பிறந்துள்ளது”
ஒரு பெரும் வெற்றி செய்தியோடு வந்து உதித்தவன் தான் பாலச்சந்திரன். ஆனால் பெரும் வரலாற்று முடிவு நேரத்தில் அதே முல்லை மண்ணில் கொடியவர்களால் பலிகொள்ளப்பட்டு விட்டான் என்பதை ஏற்க மறுக்கிறது மனது. பிறந்தது முதல் ஒரு மகா வீரனின் மகனாக மட்டும் அல்லாது ஒரு மாவீரனின் (தாயின் சகோதரன் பாலச்சந்திரன்) நாமத்தையும் தன்னகத்தே கொண்டு ஒரு சிறந்த குழந்தையாக வளர்ந்து வந்தான். ஒரு சகோதரனோடும் செல்லமான ஒரு அக்காவோடும் கூட பிறந்த பாலச்சந்திரன் அனைவரையும் விட தனது தந்தையில் அதிக பாசமும் அன்பும் கொண்டவனாக வளர்ந்தான். எதையும் ஆய்வு செய்வதிலும் அவை குறித்து தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வதும் அவனுள் சிறுவயது முதல் வளர்ந்த ஒரு சிறப்பம்சம்.
பாலச்சந்திரன் குறித்து அவனது பாதுகாப்பணியில் இருந்த ஒரு போராளி தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்ட போது
“தம்பி சரியான சுட்டி எதை பார்த்தாலும் எதையாவது செய்து கொண்டே இருப்பான். சும்மா இருக்க மாட்டான். எடுத்து காட்டாக கூறின் அண்ண எப்போதாவது ஒரு நாள் வீட்டுக்கு இவர்களை பார்க்க வருவார். வரும் போது அவருடனே எப்போதும் இருக்கும் அவருடைய கைத்துப்பாக்கி யாரும் எடுத்து விடக்கூடாது என்ற கட்டளையுடன் அதற்காக அமைக்கப்பட்டிருந்த இடத்தில் வைக்கப்பட்டிருக்கும். அப்போது அதையாரும் எடுக்க மாட்டார்கள். அவரின் வீட்டில் கட்டுப்பாடுகள் நிறைய. அதனால் அனைவரும் கட்டளைகளுக்கு கட்டுப்பட்டே இருப்பார்கள் ஒரே ஒருவனைத் தவிர… பாலா ஒருநாள் பிஸ்டலை எடுத்து வந்து அதைப் பற்றி தந்தையிடமே “இது எப்பிடி அப்பா பயன்படுத்துவது “ என்று வினவுகிறான். அதைப் பார்த்த அண்ண அவனிடம் இருந்து பிஸ்டலை வாங்கி அது தொடர்பாக வயது வரும்போது கற்றுக் கொள்ளலாம் எனக் கூறுகிறார். அப்போது பாலாவுக்கு 2 அல்லது 3 வயது இருக்கும் என பகிர்ந்து கொள்கிறார்.
எதையும் தேடும் முயற்சியுடைய பாலா தலைவரை போன்ற உருவம் மட்டுமல்ல அவரது அனைத்து பண்புகளையும் கொண்டு முள்ளியவளை மண்ணில் வளரத்தொடங்கினான். அனைவருடனும் சந்தோசமாக பழகுவதற்கும் விரும்பும் இடத்திற்கெல்லாம் எம்மை போல விரும்பிய நேரத்தில் கிளம்பி செல்வதற்கும் பாதுகாப்பு சிக்கல்கள் பாலச்சந்திரனுக்கு இடமளிக்காது
சிறு வயது முதல் குறித்த சில நண்பர்களுடனும் போராளிகளுடனும் பழகி வந்த பாலாவுக்கு பாடசாலை கல்வி என்பது பலத்த மகிழ்ச்சியை கொடுத்தது என்பது உண்மை இந்த நிலையில் அங்கு தன்னுடன் கற்ற சக மாணவர்கள் அனைவரையும் சம உரிமையுடன் பழகுவதும் ஆசிரியர்கள் அனைவர் மீதும் அதீத மரியாதையுடன் நடப்பதும் அவனது சிறப்பம்சம்.
தலைவன் மகன் என்ற பெருமையில்லாத நட்பு அவன் பள்ளியில் அனைவராலும் கவரப்படுவதற்கு ஒரு காரணம். வெளியில் இருப்பவர்களுக்கு அவன் யார் என்று தெரியாத நிலையில் இருந்தாலும், அவரது பண்புகளும் செயற்பாடுகளும் அவரை இனங்காட்டி விடும், இது சாதாரண குழந்தை அல்ல மிகப்பெரிய அறிவாற்றல் நிறைந்த குழந்தை என அனைவரும் நினைக்கும் வண்ணம் அவனது செயல்பாடுகள் மனதை கவரும்.
சாதாரணமாக எம்மில் பலர் அவர்களது தந்தை உயர் நிலையில் இருந்தால் பிறரை மதிக்க மாட்டார்கள். மற்றவர்களை தூக்கி எறிவதும், அவர்களை அவமதிப்பதும் பலரது கீழ்த்தரமான நடத்தைகளில் ஒன்று, இது அனைத்துக்கும் இடையில் இந்த புனிதன் வேறுபட்டவனாக தான் இருந்தான், நான் தலைவரது மகன் என்று பெருமைப்பட வேண்டிய அவன் அதை பெருமையாக பேசியதே கிடையாது. அத்தனை அடக்கமும் நட்பும் மிகுந்தவன் பாலா.
“ஒருநாள் அவன் கல்வி கற்ற பாடசாலையில் வைகப்பட்டிருந்த தலைவரது புகைப்படத்தை பார்த்து கொண்டு நிற்கிறான் வேறொரு சிறுவன். அவன் அருகில் வந்த பாலா
யார் இது ? என்று வினவ
இவர் எங்கட மாமா எனக்கு இவரை ரம்ப பிடிக்கும் என்று சொல்ல. எந்த உணர்ச்சியையும் காட்டாது சிரித்துவிட்டு சென்று விடுகிறான். அதைத் தவிர அவர் என் தந்தை என்பதை அவன் கூறிப் பெருமைப்படவில்லை. அப்படியான பெருமை இல்லாதவன் எங்கள் தம்பி.
எதற்கும் அடிபணியாத அண்ணனை போன்ற உருவம் மட்டுமல்ல அண்ணனின் அனைத்து பண்புகளையும் கொண்டவன் தலைவர் வீட்டில் இருக்கும் போது என்ன எல்லாம் செய்கிறாரோ அத்தனையையும் தானும் செய்து பார்க்க வேண்டும் என்று முயலுவான்.
அண்ணைக்கு சமையல் என்றால் மிக விருப்பம். அத்தனை வேலைப்பழுக்களுக்கு இடையிலும் நிறைவாகவும் சுவையாகவும் சமைத்து தன்னுடன் நிற்கும் போராளிகளுக்கு உணவு கொடுப்பார் அந்த நேரத்தில் பாலாவும் அவரை போலவே சமையல் பழகுவதில் முனைப்பு காட்டுவான். சாதாரணமாக சமையலறையில் செய்யும் சமையல் தொடக்கம் ஆயுத கையாள்கை வரைக்கும் தானும் செய்ய வேண்டும் என்று அனைத்திலும் தனது ஆர்வத்தை காட்டி அண்ணனை போலவே தன்னை வளர்த்து கொள்ள முனைப்பு காட்டியவன். ஆனால் இறுதி வரைக்கும் அவன் துப்பாக்கிகள் தொடர்பாக கற்றது இல்லை அவனுக்கு அதுக்கான வயது வரவில்லை.
பாலச்சந்திரனது இசை ஆற்றல் மற்றும் ஆர்வம் பற்றியும் கட்டாயமாக பதிவிட வேண்டும். பாலச்சந்திரனுக்கு தலைவனை போலவே மிக அதிகமாக விரும்பி கேட்கும் பாடல்களில் தேனிசை செல்லப்பாவின் தமிழீழ எழுச்சி காணங்கள் முக்கிய இடம் பிடிக்கும்.
வெளியிடங்களுக்கு செல்ல கிளம்பும் போது வாகனத்தில் ஏறியவுடனே தமிழீழ எழுச்சி கானங்களை போட்டு கேட்க தொடங்கி விடுவான். தனது முயற்சிகளில் எப்போதும் தோற்று விடக்கூடாது என்ற நினைப்பு உள்ளவன். அதனால் அனைத்து விடயங்களிலும் அதிக அக்கறை எடுத்து செயல்படுவான். விளையாட்டுக்களில் ஈடுபடும் போது இவரது அணி தோற்ற்று விட்டால் தான் வெற்றியடையும் வரை அனைவரும் தன்னுடன் விளையாடும் படி அன்பு கட்டளையிடும் பாலச்சந்திரன் தான் வெற்றியடைந்தவுடன் தான் விளையாட்டை முடிக்க அனுப்பதிப்பான்.
பாலச்சந்திரனுக்கு அப்போது 6 வயது, மரத்தில் இருந்து கீழே தவறி விழுந்த அணில் குஞ்சு ஒன்றை தூக்கி தன் நெஞ்சோடு அனைத்து கொண்டவன் பாத்திரத்தில் எடுத்து வைத்திருக்கும் பாலினை ஒரு துணியில் நனைத்து நனைத்து எடுத்து அணிலுக்கு ஊட்டி விட்டதும். அதை தடவி கொடுத்து வளர்த்ததும் இப்போது என் கண்களில் மறையாமல் நிற்கிறது, அன்று முதல் அணில் பாலாவின் நண்பனாகி அவருடனே கூட இருந்து விளையாடும். பறவைகள் நாய் என்று அனைத்து மிருகங்களிலும் பாசம் வைத்து கவனிக்கும் இந்த குழந்தையை. வெறி நாயை விட மிக கேவலமாக சுட்டு கொலை பண்ணி இருக்கிறது கொடிய சிங்களம்.
குறித்த ஒரு கல்லூரி நிகழ்வு. அங்கே தாயுடனும் செஞ்சோலை பொறுப்பாளர் ஜனனி அக்காவுடனும் வந்திருந்தான் பாலச்சந்திரன். அங்கே தொழில்நுட்பம் சார்ந்த பல புதிய உருவாக்கங்களை மாணவர்கள் காட்சிப்படுத்தி இருந்தார்கள். ஒவ்வொன்றையும் மிக துல்லியமாக ஆராய்ந்து கொண்டிருந்தான் அவன். அங்கே காட்சிப்படுத்தி இருந்த மாணவர்களை கலங்கடிக்கும் புரியாத பல வினாக்களை கேட்கிறான். முதலில் யார் இந்த சிறுவன் என்று தெரியாது இருந்தாலும் கூட வந்திருந்த தாயை கண்டவுடன் பலர் புரிந்து கொள்கின்றனர். அவர்களும் அவனிடம் நெருங்கி அதற்கான விடைகளை அல்லது விளக்கத்தைக் கொடுத்து கொண்டிருந்தனர்.
அப்போது தான் அந்த சங்கடம் அரங்கேறியது. அங்கு இருந்த மாணவி ஒருத்தியிடம் வந்த பாலா கேட்ட வினாவுக்கான விடை அவளுக்கு தெரியவில்லை ஆனால் அவனுக்கு அது தொடர்பான சிறு அறிமுகம் தெரிந்திருந்தது. அதனை அவளுக்கு உரைத்து இது தொடர்பாக இன்னமும் நீங்க படிக்க வேண்டும் படியுங்கோ என்று கூறி நகர்ந்தான். அவளுக்கோ அவனை தூக்கி முத்தமிட தோன்றியது ஆனால் அண்ணனின் பிள்ளையை எப்படி…? மனதில் எழுந்த தாள்புனர்ச்சி அவளை தடுத்தது.
அதைத் தாண்டிச் சென்று அடுத்த காட்சிப்படுத்திய மாணவியிடம் சென்றவன் E-Medicien என்ற உயர் தொழில்நுட்ப உற்பத்தியைப் பார்க்கிறான். இரண்டு மடிக்கணனிகள் மற்றும் இணையத் தொடர்பின் மூலம் நோயாளிகளுக்கான சிகிச்சையை எங்கோ தூர இருந்தே செய்ய முடியும் என்பதை அந்த மாணவி கண்டு பிடித்திருந்தாள்.
அது பற்றி பாலா நிறையக் கேள்விகளை அந்த மாணவியிடம் கேட்கிறான். கேள்விகளுக்கு சரியான விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறாள். ஆனாலும் பாலா வேகமாக அடுத்தடுத்து கேள்விகளைக் கேட்ட போது சமாளிக்க முடியாமல் அந்த மாணவி சிரிக்கிறாள். தாயை நிமிர்ந்து பார்க்கிறாள். தாய் சிறு புன்னகையுடன் விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்த மாணவியையே பார்த்துக் கொண்டி நிற்கிறார். அது வேறு யாரும் இல்லை பாலாவின் சகோதரி துவாரகா தான். அமைதியின் உச்சம். புன்னகையின் மறு உருவம். பழகும் போது அன்பும் மகிழ்வும் பொங்கி வரும் தாயின் உருவம்.
தம்பி… என்ன நீங்கள் இப்பிடி அக்காவ கேள்வி கேட்கிறீங்கள்? அக்கா வீட்டை வந்து தம்பிக்கு சொல்லித்தாறன். சரியா?
அவளுக்கு வேறு வழி தெரியவில்லை. தன் தம்பியிடம் வேண்டுகோள் விடுக்கிறாள். பாலாவும் புன்னகையோடு சரி அக்கா என்று நகர்கிறான். இவற்றை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அனைவருமே
சரியான சுட்டி….
முனுமுனுத்துக் கொண்டார்கள்.
வீட்டில் இருக்கும் போது சாதாரணமாக சகோதர சண்டை வரும் அக்காவும் தம்பியும் எதற்காக என்றாலும் சண்டை பிடிப்பார்கள். ஆனால் மறு நிமிடம் பாலா
“அக்கா மன்னிச்சு கொள்ளுங்கோ மன்னிச்சு கொள்ளுங்கோ “
என்று அக்காவை சமாதானப்படுத்துவதும், துவாரகா தம்பியை பார்த்து சிரிப்பதும். வழமையாக நடக்கும். தனது மடிக்கணனி திரையில் அதிகமாக தானும் தம்பியும் சேர்ந்தெடுத்த படத்தையே திரையின் பின்னணியில் வைத்திருக்கும் துவாராவுக்கு அதிகம் பிடித்த உறவென்றால் பாலாதான். எப்போதும் தம்பி தம்பி என்று அவனில் உயிரையே வைத்திருப்பாள். அதைப் போலவே பாலாவும் அக்காவில் சரியான பாசமுள்ளவன்.
அணில் குஞ்சை கூட காப்பாற்ற நினைத்த இந்த பிஞ்சு உள்ளத்தை. நாயை கூட தனது உறவு என்று நினைத்து பாசம் காட்டும் இந்த பண்பாளனை வெற்றிக்காக என்றும் முனைப்புடன் செயற்படும் இந்த குழந்தையை சிங்களவன் வெற்றுடலாக்கியதை நினைக்க ஒவ்வொரு தமிழன் மட்டுமல்ல இந்த உலகமே கண்ணீரில் இருண்டு கிடந்தது.
கையில் சிற்றுண்டியை கொடுத்து உண்ண சொல்லும் சிங்களத்தின் கொலைகார கூட்டத்தின் சுயரூபத்தை கூட உணர்ந்திருப்பான் இந்த பிள்ளை. தன்னை கொல்லப்போகிறார்கள் என்பதை கூட புரிந்து கொண்டிருப்பான் ஏனெனில் அவன் தலைவரை மாதிரி தீர்க்கதரிசனமானவன். ஆனாலும் நாயை கூட உண்ண கொடுத்து அடிக்காத தமிழனின் பிள்ளை, தனக்கு சாப்பிட சொல்லி கொடுத்த உணவு தொண்டை வழி உள்நுழையும் முன்பே தன்னை கொல்வான் இந்த சிங்களவன் என்று நினைத்து கூட பார்த்திருக்க மாட்டான். பசித்திருந்த குழந்தைக்கு பசிக்கு துப்பாக்கி ரவைகளை உணவாக கொடுத்த சிங்கள தலைமைகளும், சிப்பாய்களும் இன்று சுதந்திரமாக மீண்டும் மீண்டும் தமிழனது தலைமுறையை அழிப்பதற்காக முனைப்பு காட்டி வருவது ஒவ்வொரு தமிழனுக்கும் எத்தகைய ஆபத்து என்பது வெளிப்படை உண்மை.
இவனைப் போலவே பல ஆயிரம் குழந்தைகளை சிங்களப் படைகள் அழித்தது என்பதை உலகம் ஏன் ஏற்க மறுக்கிறது என்பது புரியவில்லை. தாய்ப்பால் வற்றி பசியில் துடித்த சிறுவர்களுக்கு வாய்ப்பனும், பால் மாவும் கொடுப்பதற்குத் தானே வலைஞர்மடத்தில் வரிசைப்படுத்தி வைத்திருந்தார்கள். அவர்களுக்கு மேலே எப்படி இந்த சிங்களத்தால் எறிகணைகளை ஏவ முடிந்தது. சாகப்போகிறேன் எனத் தெரிந்தும் தான் சாப்பிட்ட வாய்ப்பனை இறுகப் பற்றிக் கொண்டருந்த 3 வயது சிறுமி ஒருத்தியின் கைகளைக்குள் இருந்த வாய்ப்பன் இந்த சர்வதேசத்துக்கு இனியும் எதை உரைக்க வேண்டும்…?
கால் கைகளை இழந்து கண் பார்வை இழந்து இன்னும் துயரப்படும் என் தேசக் குழந்தைகளுக்கு இந்த சர்வதேசம் என்ன பதிலைத் தரப் போகிறது? பாலாவைப் போல கொல்லப்பட்ட என் தேசக் குழந்தைகளுக்கான நீதியை இனியும் இந்த சர்வதேசம் தராதுவிடின் நாம் எங்கே சென்று முறையிடுவது? சர்வதேசமே அதி உச்ச நம்பிக்கையில் தான் உன் முன்னே செந்த இந்தப் பிஞ்சுகளின் உயிரற்ற உடல்களை கிடத்தியுள்ளோம். அவர்களுக்கான நீதியை அவர்களின் பாதங்களில் பரிசளிப்பாய் என்றே எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்…
கவிமகன்.இ
17.05.2018