மே மாதம் 18ம் திகதி வன்னிப் பெருநிலப்பரப்பில் நடந்த யுத்தத்தின் இறுதி நாள்.
எங்கள் உறவுகள் உயிரிழந்து போன நாட்களின் ஒட்டுமொத்த நினைவு நாள்.
தமிழர்கள் என்பதால் குண்டு போட்டு எங்கள் இனத்தைச் சங்காரம் செய்த நாசகாரத்தின் உச்சமான நாள்.
ஒரு நாடு, இரு இனங்கள். இறந்தது மனிதர்கள். அதிலும் குழந்தைகள், பெண்கள், வயோதிபர்கள் என ஏராளம்.
இருந்தும் சிங்கள ஆட்சியாளர்கள் அதனை வெற்றி நாளாகக் கொண்டாடினர் என்றால், அவர்களிடம் இருந்த வக்கிரம் எத்தன்மையது என்பதை அறிவது கடினமன்று.
இலங்கைத் தீவில் நாம் அனைவரும் சமம் என்பது ஆட்சியாளர்களின் மேடைப் பேச்சு.
சாந்தியும் சமாதானமும் ஏற்பட்டு இந்நாட் டில் அனைத்து மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பது விசேட பண்டிகைகளின் போது அரச தலைவர்கள் வழங்கும் ஆசிச்செய்திகள்.
ஆனால், பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் துடிதுடித்துப் பதைபதைத்து போன துன்பகரமான நாளை வெற்றி நாளாக கொண்டாடும் அக்கிரமம் இலங்கையின் ஆட்சியில் தவிர வேறு எங்கும் நடக்க முடியாது.
போர் நடந்தது உண்மை. அதில் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டது உண்மை. விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டனர் என்பதும் உண்மை.
அதற்காக அதை வெற்றித் திருவிழாவாக ஆட்சியாளர்கள் கொண்டாடி மகிழ்வது எந்த வகையில் நியாயமானது என்பதுதான் நம் கேள்வி.
உயிரிழந்தவர்கள் நம் நாட்டவர்கள். அவர்கள் உயிரிழந்தது உங்களுக்கு வெற்றி என்றால், எப்போதுதான் உங்களால் சமாதானத்தை ஏற்படுத்த முடியும்?
உங்களிடம் எம்மீது நல்லெண்ணம் இருக்குமாயின் மே 18ஐ போர் கொடூரத்தில் உயிரிழந்தவர்களின் நினைவேந்தலுக்குரிய நாளாகப் பிரகடனம் செய்யுங்கள்.
போரில் இறந்தவர்கள் தமிழர்கள் என்று பாராமல் தமிழர்களும் இந்நாட்டவர்களே என்று நினைத்து மே 18ஐ வன்னிப் போரில் உயிரிழந்த தமிழ் உறவுகளின் நினைவேந்தல் நாளாக அங்கீகரியுங்கள்.
இதைவிடுத்து மே 18ம் திகதிதான் டெங்கு ஒழிப்புக்கான தேசிய தினம் என்றால், நீங்கள் மனிதர்களா என்ன?
டெங்கு நோயை ஒழிப்பது உங்கள் நோக்கமா? அல்லது முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு ஊறு செய்வது நோக்கமா?
அட, இதுபற்றியெல்லாம் நாம் நினைக்க வில்லை என்றால், மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள் என்று கலண்டரில் பதிவு செய்யுங்கள்.
இதை மத்திய அரசு செய்யும் வரை எங்கள் மாகாண அரசு மே 18ஐ நினைவேந்தலுக்குரிய நாளாக அறிவித்து அன்றைய நாளில், எமக்காக உயிரிழந்து போன எங்கள் உறவுகளை நினைந்துருக.
அவர்களுக்காக நெய்விளக்கேற்றி அனைவரும் தியானம் செய்ய ஏற்பாடு செய்யுங்கள்.