வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சமுதாயம், தன் கண்முன்னே வீழ்ந்துவிட்ட மக்களுக்காக, கண்ணீர் சிந்த ஏற்றுக்கொண்ட நாளாக இந்த மே18 அமைகின்றது.ஒன்றுமே செய்யமுடியாமல் ஓடி ஓடி ஒதுங்கிய மக்களை,விரட்டி விரட்டி உயிர் பறித்த சோகம் சொல்லும் நாள்தான் இந்த மே 18. ஆட்சிபீடம் ஏறி முடிசூட முயற்சிக்கவில்லை.தங்கள் மூதாதையர் வாழ்ந்த மண்ணில் தாங்களும் வாழ விரும்பினர். வாழ்ந்தனர். அந்த வாழ்வுரிமை சிதைக்கப்பட தொடங்கியதால் போராட்டங்கள் தொடங்கின. அமைதியை விரும்பும் மக்கள் இவர்கள். வன்முறையைவிரும்பவில்லை. ஆனால் வாழ்விற்காக போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டவர்கள். போராட்டங்களை விரும்பினோரும், அதனை விரும்பாதோரும் ஓன்றாகவே வாழ்ந்தனர். இந்த மக்களை பயங்கரவாதம் சூழ்ந்துநிற்கிறது என்று கூறி, அவர்களை மீட்கிறோம் என்று சொல்லிக்கொண்டு, அந்த மக்களை முற்றாக இராணுவ முற்றுகைக்கு உள்ளாக்கி, விமானக் குண்டுவீச்சுகள்,எறிகணைத்தாக்குதல்கள், துப்பாக்கி வேட்டுக்கள் என்று சகல உயிர்கொல்லும் யுக்திகளும் மாறி மாறி பிரயோகிக்கப்பட்டு, உலகமே புறம்தள்ளிய யுத்தமுறைகள்பயன்படுத்தப்பட்டு தாக்குதல்களை மேற்கொண்டனர். இந்ததாக்குதல்களினால் உயிர்காவு கொள்ளப்பட்டோர் ஒருபுறம்,காயப்பட்டோர் மறுபுறம், ஏங்கி ஏங்கி, பயந்து பயந்து தவித்தோர் இன்னோர் புறம் என்று எங்கள் தமிழ் மக்களை வகைப்படுத்தலாம்.
உணவு முற்றாக தடுக்கப்பட்டு, பசி, பட்டினி நிரந்தரம்ஆக்கப்பட்டு மக்கள் நிலைகுலையச் செய்யப்பட்டனர்.அதையும் மீறி உணவுப்பொருட்கள் வழங்குகின்றோம்வாருங்கள் என்று கூப்பிட்டு, அந்த மக்களை உணவுக்காக வரிசையில் நிற்கவைத்து, அவர்கள் மீதும் எறிகணை ஏவப்பட்டு கொல்லப்பட்ட, காயப்படுத்தப்பட்ட நிகழ்வுகளும் அங்கே அரங்கேறத் தவறவில்லை. மருத்துவம் முற்றாகதடுக்கப்பட்டது. சுகாதாரசேவை முடக்கப்பட்டது.காயப்பட்ட மக்கள் கதறி அழுது, வேதனையால் துடித்து,நொந்து வாடி உயிர்போக்கிய சம்பவங்களும் நடந்தேறியது.இதற்குள் அகப்பட்டு இந்த துன்பங்களை அனுபவிக்கவும் முடியாமல், மற்றவர்க்கு உதவவும் முடியாமல்,செய்வதறியாமல் பதறியது கூட இருந்த தமிழ்மக்கள் கூட்டம். துன்பத்தில் உள்ளோரை பார்த்து அழுவதா?இல்லை, அடுத்து எமக்கும் இப்படித்தானே என்று நினைத்து ஏங்குவதா? ஓடும் இடமெல்லாம் காலில் தட்டுப்படும் இறந்த எங்கள் உறவுகளை என்ன செய்ய? காயப்பட்டோரை எப்பிடி காக்க? எதுவுமே புரியாது கலங்கியது அடிவாங்கியபடி அலைந்த தமிழர் கூட்டம்.
உறவுச்சங்கிலி உடைந்து போவதை நினைக்கவா, அல்லது.பசி, பட்டினி, சொந்தங்கள் படும் துன்பங்களைநினைப்பதா, இதில் எதை நினைப்பது, எதை மறப்பது, எங்களை நாங்கள் எப்படி வழிநடத்துவது என்று ஏங்கியது தமிழ்ஈழ தமிழர்கூட்டம். இத்தனையும் நடந்தது மாற்றுஇடத்தில் அல்ல. அவர்களின் சொந்த நிலத்தில்,பாரம்பரியமாக வாழ்ந்த மண்ணில். யாரும் இதனைகேட்கவுமில்லை. அங்கு உயிருக்காக ஓலமிட்ட மக்களை யாரும் திரும்பிப்பார்க்கவில்லை. இதுதான் வேண்டும்.தமிழர்களை சிதைக்க வேண்டும், சிந்தையை குழப்பவேண்டும், பைத்தியம் பிடித்தோராக மாற்ற வேண்டும். விடுதலை என்ற எண்ணமும் இனிவரக்கூடாது. உரிமை பற்றி பேசவும் கூடாது என்று ஆனந்தமாய் தொடர்ந்தது ஆளும் வர்க்கம். இதனை வரவேற்றும், உதவி புரிந்தும் ஏற்றுக்கொண்டது உலகினை நெறிப்படுத்துவதாய்க் கூறிக்கொள்ளும் அரசுகள், அமைப்புக்கள் மற்றும் சமாதான மன்றங்கள். இவ்வாறான நீதி பேசும் உலகினை நம்பி,அவர்களை நடுநிலைமையாளர்கள் என்று கூறி, ஈழத்தமிழன் நீதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றான். ஒரு சில பேரை தேடுவதாய், அழிப்பதாய் கூறிக்கொண்டு, ஒட்டுமொத்த தமிழ்மக்களும் வதைக்கப்படுவது ஏன்? என்கின்ற கேள்வி யாராலும் முன்வைக்கப்படவில்லை. பிறந்த குழந்தைமுதல்,ஏதுமறியா பிஞ்சுசிறார்கள் மட்டுமன்றி, வயதுமுதிர்ந்து எதுவுமே செய்ய முடியாத நாதியற்ற முதியோர் வரை எல்லோரும் உயிருடன் வதைக்கப்பட்டனர். உடல்கள்காயங்களால் நிரப்பப்பட்டனர், இரத்த வெள்ளத்தில் மிதக்கவிடப்பட்டனர், உயிர்ப்பயம் கொடுத்து அலைக்கப்பட்டனர். மக்களும் ஓடி ஒதுங்கி உயிரைக்காக்க துடித்தனர். ஏராளமானோர் உயிரை இழந்தனர்,உயிர்தப்பியோர் அங்கங்களை இழந்தனர், சிலர் தப்பிப்பிழைத்தனர். இப்போதும் ஆள்வோர் செய்வது அத்தனையும் சரியென்று ஆதரவுக்கரம் கொடுத்தோர் தொடர்ந்தனர். ஆனால் அகப்பட்டுக்கொண்ட மக்களுக்காக ஈழம் மட்டுமன்றி உலகம் முழுவதும் வாழ்ந்த தமிழர்கள் தங்களால் இயன்றவரை போராடினர். பலனில்லை. காரணம்அவர்களிடம் பலமில்லை.
இவ்வாறு ஈழவரலாற்றில் தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட வன்முறைத் தாக்குதல்களால் அழிந்துவிட்ட மக்களின் நினைவு நாள் மே18. இது ஒரு வரலாற்றுத்தொடரின் இடைநிலைப் புள்ளியே தவிர, இந்த நாள் ஆரம்ப நாளுமல்ல, அதேபோல முடிவு நாளும் அல்ல. இதேவேளைதமிழர்கள் மத்தியில் அரங்கேற்றப்பட்ட சாவுச்செய்திகள்,இவை மட்டுமல்ல இன்னும் ஏராளம் உண்டு. ஆனால் அங்கு நடந்த நிகழ்வுகள் எல்லாம் எழுத்தாளர்களுக்கு கருப்பொருள் ஆனது, எழுதிக்குவித்தார்கள்.கவிஞர்களுக்கு பாடுபொருளானது கவியாய் புனைந்தனர்,பேச்சாளர்களுக்கு பேசுபொருளானது மேடை மேடையாய் ஏறி விளாசித்தள்ளுகின்றனர். அரசியல்வாதிகள் வாழும்வரை இதை அரசியலாக்கியே வாழமுடியும் என்று முடிவெடுத்துக்கொண்டனர். ஆனால் துன்பப்பட்ட தமிழ்மக்கள் இதனால் எந்தப்பயனும் பெறவில்லை என்பதுதான் சோகத்திலும் சோகம்.
மே18 என்று பொதுவாக சொல்லப்பட்டாலும், இது 2009ம் ஆண்டிற்கு பின்பே மக்கள் மத்தியில் வந்துசேர்ந்தது. இந்த நாளுக்காக உலகில் வாழும் ஈழத்தமிழினம் என்ன செய்கின்றது என்பதும் சிந்திக்கப்பட வேண்டிய ஒன்று.முதலில் வழமையானதும், எனக்கு எதிரானதுமான கேள்விக்கு பதில் கூறிவிட்டு மீதியைத் தொடர விரும்புகின்றேன். இதை எழுதுபவர்கள் வெளிநாட்டில் இருக்கிறீர்களா? நல்லது. உங்கள் பாதுகாப்பு உறுதியாக உள்ளதா? அதுவும் நல்லது. “அப்ப எங்களுக்கு புத்தி சொல்லுவியள் சொல்லுங்கோ, நல்லாச் சொல்லுங்கோ,” என்பதும் நியாயமாகத்தான் தெரிகிறது. வெளிநாடு சென்றவர்கள் எல்லோரும் ஈழத்தை வெறுக்கவும் இல்லை, மறக்கவுமில்லை என்பதை ஒவ்வொரு தமிழனும் நினைவில் கொள்ளவேண்டும்.
இன்று சிறிலங்கா அரசு கூட தமிழர் பிரதேசங்களில் நடைபெறுகின்ற வன்முறைகளை கட்டுப்படுத்த முடியாமல் நிற்கின்றது, விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் வரமுடியாதுமுற்றாக தடுத்த அரசினால், நாட்டுக்குள் உலவும் போதைபொருளை தடுக்க முடிவில்லை. பயந்த வாழ்வும் நிறைந்த போதை உள்ள பிரதேசமுமாக தமிழர் பிரதேசங்கள் மாறுகின்றன, மாற்றப்படுகின்றன. சமூகவிரோத செயல்கள் பெருகுகின்றன. இதுவும் ஏதோ ஒரு செய்தியை எமக்கு சொல்கிறது. இனி நாங்கள் நீங்கள் மீளக்கூடாது என்பதற்காக கட்டமைக்கப்பட்டதாக இவைதெரிகின்றன. இதனை ஈழத்தமிழர்கள் புரிந்துகொள்வதுமட்டுமல்ல, தங்கள் இளவல்கள் வழிதவறி செல்லாமல்தடுத்து நிறுத்துவதையும் அந்த மக்களே பொறுப்பேற்கவேண்டும். அதன்மூலம் தம் சமூகத்தை காக்கவேண்டும். பராமரிக்கவேண்டும். இதுவே எங்கள் எதிர்கால சந்ததி சரியான வழியில் முறையாக பயணிக்க உதவிநிற்கும்.
அடுத்து புலம்பெயர் ஈழத்தமிழர்கள், இவர்களில் முன்னதாகவெளிநாடுகளுக்குள் புகுந்தவர்கள் நிலையானவர்கள்,ஈழம்பற்றி தெரிந்தவர்கள், ஈழத்திற்காக உழைப்பவர்கள் என்றும், பின்பு வந்தவர்கள், உரிமை குறைந்தவர்கள்,இதனால் முன்பு வந்தவர்கள் சொல்வதைத்தான் கேட்கவேண்டும் என்பது மட்டுமல்ல அவர்களைத்தான் பின்பற்றவேண்டும் என்கின்ற நிலைமைகளும் இல்லாமல் இல்லை. தமிழர்கள் தொடர்பான சகல செயற்பாடுகளுக்கும் உரித்துடையவர்கள் முன்பு வந்தவர்கள். பின்பு வந்தவர்கள்அவர்கள் செய்வதை பின்பற்றமுடியும் என்றும் நிலைமை செல்கிறது. முன்பு, பின்பு என்பதை மே18 நாளுடன் இணைந்து சிந்தியுங்கள்.
ஈழத்தமிழர்களை பொறுத்தவரை அவர்கள் ஒன்றுபடும் இடம் எதுவென்றால், தாய்நாட்டில் இருந்து புறப்படுகையில்முக்கியமான ஒன்றை எடுத்துச்சென்றுள்ளார்கள். இது ஆகாயத்தில் பறந்து சென்றோர், கடலில் மிதந்துசென்றோர் என எல்லோராலும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அது வேறு ஒன்றும் அல்ல.எந்தக்கட்டத்திலும் நாம் ஒரு கொடியின் கீழ்நின்று வெற்றிக்காக ஒன்றுபட்டு உழைக்கமாட்டோம் என்பதுதான்.வெளிநாட்டிற்கு வந்தவர்கள் தங்களுக்குள் வேற்றுமைகளை விதைத்து, நன்மைகளை தொலைத்து, ஒன்றுபடமுடியாதுவாழுகின்ற துர்ப்பாக்கிய நிலையில், மே18 நாள் நினைவுகள் அவர்களை ஒன்றாய் இணைக்கின்றது.எங்களுக்காக வீழ்ந்த அந்த உயிர்கள் ஒன்று திரண்டு எமக்கு இவ்வாறான சக்தியை தருகின்றது. அந்த தினம் எங்கள் எல்லோர் மனதிலும் காயமாக மட்டுமன்றிபாரமாகவும் உள்ளது. அதனால் கடைப்பிடிக்கப்பட்டும் வருகின்றது. ஆனால் மே18 நாள் கற்றுத்தரும் பாடம் என்ன? அதற்காக நாம் ஆற்றவேண்டிய செயற்பாடுகள்என்ன? என்ற புரிதல்கள் மக்களிடம் நிறைந்துவிட்டதா என்பது சிந்திக்க வேண்டிய கருப்பொருள்.
தமிழ் பேசுதல் தாழ்வென்றும், ஈழத்தமிழன் என்பது இழிவுநிலை என்றும் சிந்திப்பவர்களால் தலைமை தாங்கப்பட்டு தமிழர்கள் வழிகாட்டப்படுகின்றனர். தவறியும் தன்பிள்ளை தமிழ் பேசக்கூடாது என்போர், தமிழர்களை வழிநடத்தும் பரிதாபநிலையும் தமிழனுக்கு இல்லாமல்இல்லை. முடிந்தவற்றால் எப்பயனும் இல்லை,உயிர்ப்புள்ளதால் மட்டுமே இயங்கு நிலை பெற முடியும்.தமிழர்கள் உயிர்ப்படைந்து ஒன்றுபட்டு இயங்கு நிலைக்கு வரவேண்டும். ஆழ்ந்த பற்றும் சிறந்த உறுதியும் உள்ளசெயற்பாடுகளே வெற்றிபெறும்.
போதைக்குள் உட்புகுத்தப்பட்டு, பயந்த வாழ்வுக்குள் தள்ளிவிட்டு, மக்கள் விரோதச் செயற்பாடுகள் முன்னிலைப்படுத்தப்பட்டு, எப்படியாவது ஒதுங்கி உயிர்வாழ்ந்து விட்டுப்போவோம் என்ற மனநிலையை ஈழத்தமிழரிடம் விதைத்து, தமிழர் தாயக நிலங்கள் அவனுடையது அல்ல என்ற நிலை ஈழத்தில் அரங்கேறஅங்கு வாழும் தமிழர்களாலும், வெளிநாட்டு வாழ்வுக்குள் தங்களை இணைத்து, தங்களை வலுப்படுத்தி, சந்ததியை நிலைப்படுத்த அல்லும் பகலும் உழைத்துக்கொண்டிருக்கும் புலம்பெயர் ஈழத்தமிழர்களாலும் கடைப்பிடிக்கப்படும் மே18நாள், வெறும் துக்க தினமாகவே முடிந்துபோகுமா, அல்லதுஎமக்காக இறந்த மக்களின் ஆன்மபலத்தால் ஈழத்தமிழ்மக்கள் வாழ்வு மேன்மை பெறுமா? என்பது பெறுத்திருந்து பார்க்கும் ஓர் நிகழ்வாகவே அமைகின்றது.
– பரமபுத்திரன்.