வீர வரலாறுகள் இப்படித்தான் எழுதப்பட்டது
அதோ அந்த நந்திக் கடற்கரையின்
தீராச் சோக கீதங்களைப் போல
வீர வரலாறுகளின் வெற்றிகளுக்கு பின்
இனிப்புகள் வழங்கப்படுகிறது
தேசிய கீதங்கள் முரசறையப்படுகிறது
யார்யாரோவெல்லாம் தங்களை
தலைவர் என்று சொல்லுவார்கள்
தகுதிமிக்க வீரர் கொடியை
கூச்சமின்றி தொட்டு ஏற்றுவார்கள்
தோல்விகள் எந்நாளும் பேசப்படும்
வீரர்களின் புனித தியாகங்கள் மட்டும்
ஒரு நாளுக்காய் கூடும்
பெருந்திரள் சன நெருசலின்
கூச்சலுக்கு மத்தியில் மறைந்துவிடுகிறது
விடுதலைப் போராட்டம் மௌனித்திருக்கிறது
ஆனால் வீரர்கள் பெற்ற வெற்றிகளுக்கு முன்
எந்த தோல்விகளையும் நினைக்க
பிடிக்கவில்லை
வீரர்களுக்கு ஒரே இலட்சியம் தாய்நிலம்
அதனால்த்தான் தாய்நிலம் சுமக்கும்
மனிதம் இழந்தவைகள் மீதும்
அவர்களுக்கு கோவம் வருவதில்லை
தன்னலம் அற்றவர்களின்
கழுத்தில் தொங்கிக்கொண்டிருக்கும்
சயனைட்டைவிட
எங்களில் பலரும் அவர்களை காதலிக்கவில்லை
என்பதே கவலை..!
-#அனாதியன்-