வடக்கு கிழக்கில் போர் நடைபெற்ற காலத்தில் அங்குள்ள மக்களை அரச படையினர் படுகொலை செய்ததாக எம்பிலிப்பிட்டிய நகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் லசந்தி லக்மினி நேற்று தெரிவித்துள்ளார்.
நகர சபை உறுப்பினரின் இந்த கருத்தை அடுத்து நகர சபைக் கூட்டத்தில் பெரும் அமளி ஏற்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அதிகாரத்தில் இருக்கும் எம்பிலிப்பிட்டிய நகர சபைக் கூட்டம் நகரபிதா லலித் கமகே தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய நகர சபை உறுப்பினர் கே. ருவான் பத்திரன, அரசங்கத்தின் அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன பாதுகாப்பு படையினர் குறித்து தெரிவித்திருந்த கருத்தை கண்டித்து யோசனை ஒன்றை கொண்டு வந்து உரையாற்றினார். அப்போது குறுக்கிட்ட லசந்தி லக்மினி போர் காலத்தில் அரச படையினர் தமிழ் மக்களை படுகொலை செய்ததாக கூறியுள்ளார்.
இறந்தவர்களுக்கு விளக்கேற்றும் தார்மீக உரிமை தமிழ் மக்களுக்கு இருப்பதாகவும் ஆயுதங்களை கையில் எடுத்த குழு ஒன்று ஜனநாயக வழிக்கு வரவில்லை என்றால் அதற்கு தகுந்த சூழலை ஏற்படுத்த வேண்டும். தமிழ் மக்கள் தமது உறவுகளை நினைவு கூர இடமளிப்பதை,அவர்களுக்கு ஆதரவாக செயற்படுகின்றனர் என்று கூறுவது தவறு. மக்கள் விடுதலை முன்னணி தனது பயங்கரவாத செயல்களை கைவிட்டு தற்போது ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்துள்ளது. இதனால் தமிழ் உறுப்பினர்களையும் ஆட்சி நிர்வாகத்தில் இணைத்துக்கொண்டு நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என லசந்தி லக்மினி குறிப்பிட்டுள்ளார்.
அப்போது குறுக்கிட்ட மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர், தமது கட்சி பயங்கரவாத செயல்களில் ஈடுபடவில்லை எனவும் புரட்சியில் ஈடுபட்டதாகவும் கூறியதுடன் மக்கள் விடுதலை முன்னணி பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக கூறியதை திரும்பபெற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அதேவேளை அரச படையினர் வடக்கு கிழக்கில் மக்களை இனப்படுகொலை செய்தனர் என்று கூறியதை திரும்பபெற வேண்டும் என நகர சபை உறுப்பினர்கள் வலியுறுத்தினர். எனினும் படுகொலை நடந்தது என்று கூறிய லசந்தி லக்மினி, தான் கூறியதை திரும்ப பெற மறுத்து விட்டார். எம்பிலிப்பிட்டிய நகர சபையின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 13 அதில் 8 பேர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள். மூன்று பேர் ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர்கள். மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்பன தலா ஒரு உறுப்பினர்களை கொண்டுள்ளது.