வாரத்துக்கொரு கேள்வி – 20.05.2018
முள்ளிவாய்க்கால் கூட்டம் முடிந்ததும் கொழும்பில் இருந்து நண்பர் ஒருவர் தொலைபேசியில் கேட்ட கேள்வியே இந்த வாரத்துக்கான கேள்வி. அவருக்குக் கொடுத்த பதில் சற்று விரிவுபடுத்தி தரப்படுகிறது.
கேள்வி:புலிகளைத் தொடர்ந்து இந் நாட்டில் ஒரு இக்கட்டான நிலைமையை உண்டாக்க நீங்கள் இவ்வாறான நினைவேந்தல் கூட்டங்கள் மூலம் வழி அமைக்கின்றீர்கள் அல்லவா? இவை தேவையா?
பதில்: தேவை. மரணித்தவர்களின் நினைவை நாம் வருடந்தோறும் ஏந்தல் எமது பாரம்பரிய வழக்கம். அநியாயமாக கொல்லப்பட்ட எமது உறவுகளின் நினைவேந்தலை நடத்துவது வழக்கமான நினைவேந்தல்களை விட முக்கியமாகத் தேவையானதொன்று. எமது மக்கள் தற்செயலாகச் சாகவில்லை. கொடூரமாகக் கொலை செய்யப்பட்டவர்கள். ஒரு இடத்திற்குக் கொண்டுவரப்பட்டு, சரணடைந்தால் விடுவிப்போம் என்று பல பசப்பு வார்த்தைகள் கூறி எம் மக்களைச் சதி செய்து கொன்ற நிகழ்வை நாம் நினைவில் ஏந்தாது எப்படி இருப்பது? போரில் இறந்தவர்களை நினைவு கூருவது, அவர் சாந்திக்காகப் பிரார்த்தனை செய்வதென்பதெல்லாம் சர்வதேச சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மனித உரிமைகளின் அலகுகள். ஆகவே நினைவேந்தலின் முக்கியத்துவத்தை நீங்கள் இப்போது உணர்ந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகின்றேன்.
புலிகளைத் தொடர்ந்து இக்கட்டான நிலையை ஏற்படுத்த விழைகின்றோம் என்ற உங்கள் அடுத்த கூற்று நகைப்புக்குரியது. வட கிழக்கில் எமக்கான உரித்துக்களை நாம் முன் வைத்தால் உடனே பதட்டப்படுவது கொழும்பில் உள்ள தமிழர்கள் தான். தமக்கிருக்கும் சொத்து, சுகம், வசதிகள், பதவிகள் யாவற்றையும் இழந்து விடுவோமோ என்ற பயந்தான் உங்களை அவ்வாறு சிந்திக்க வைக்கின்றது. தமிழர்களாகிய எங்களுடைய இதுவரையான நிலைமையை எண்ணிப் பாருங்கள். வெள்ளையர் காலத்தில் நாடு பூராகவும் வாழ்ந்தோம். மற்றைய இனங்களுடன் சேர்ந்து ஒற்றுமையாக வாழ்ந்தோம்.
அதிகாரமானது வெள்ளையரிடம் இருந்து பெரும்பான்மை சமூகம் வசம் சென்றவுடன் அவர்கள் செய்தது என்ன? தமிழர்கள் பரந்து வாழ்ந்த முழுநாட்டில் இருந்தும் குறிப்பாக தெற்கில் இருந்து படிப்படியாக அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். தமிழர்களுக்கு எதிரான இனக் கலவரங்கள் மூலமும் புதிய புதிய சட்டங்கள் மூலமும் இதனைச் சாதித்தார்கள். எம்முட் பலர் மெல்ல மெல்ல வெளிநாடுகளுக்குச் செல்லத் தொடங்கினார்கள். இலங்கைத் தமிழர்களின்; சனத் தொகை குன்றத் தொடங்கியது. யுத்தம் இந்த வெளியேற்றலைத் துரிதப்படுத்தியது. போரின் முடிவைப் பாவித்து வடகிழக்கு மாகாணங்களைத் தொடர்ந்து ஒன்பது வருடங்களாக படையினர் தம் கைவசப்படுத்தி வந்துள்ளார்கள். அவர்கள் தொடர்ந்து இங்கு இருப்பதால் வரும் பாதிப்புக்கள் பற்றி ஏற்கனவே பல தடவை கூறிவிட்டேன். அவை பற்றி உங்களுக்குத் தெரியும் என்று நம்புகின்றேன். உரிமைகளைக் கேட்பது இக்கட்டான நிலையை ஏற்படுத்துமானால் நாம் மௌனம் சாதிக்க வேண்டும். அவ்வாறு வாளாதிருந்தால் நாடு பூராகவும் சிங்கள பௌத்த மயமாக்கப்படும். அதை விரும்புகின்றீர்களா?
புலிகளைத் தொடர்ந்து நாம் ஒரு இக்கட்டான நிலையை உண்டாக்கத் தலைப்பட்டுள்ளோம் என்று கூறுகின்றீர்கள். அது சரியா? புலிகள் ஏன் உண்டானார்கள்? தமிழ் மக்கள் இரண்டாந்தரப் பிரஜைகள் ஆக்கப்பட்ட பின்னரே எமது இளைஞர்கள் யுத்தம் பற்றி சிந்திக்கத் தொடங்கினார்கள். தெருவில் போகும் ஒருவனை நோக்கி நீங்கள் உங்கள் வீட்டு நாயை அவிழ்த்து விடுகின்றீர்கள். அவன் தற்பாதுகாப்புக்காக கல்லை எடுத்து நாயின் மீது எறிகின்றான்.உங்கள் யன்னல் கண்ணாடி அதனால் உடைகிறது. உடனே நீங்கள் போலிசுக்கு தொலைபேசி எடுத்து ‘இன்னார் என் வீட்டுக்குக் கல் எறிந்து விட்டான். பிடியுங்கள் அவனை. சிறையில் போடுங்கள் அவனை’ என்றெல்லாம் சொல்லிக் குமுறுகின்றீர்கள். தெருவில் சென்றவன் அமைதியாகச் சென்று கொண்டிருந்தான். நீங்கள் தான் உங்கள் நாயை உசுப்பேற்றி அவன் அண்டை அனுப்பினீர்கள். எதிர் வினையாகவே அவன் கல்லை எறிந்தான். கல்லை அவன் எறியாவிட்டால் நாய் அவனைக் கிள்ளிக் குதறி எடுத்திருக்கும். ‘நாய்’ என்று கூறியது அரசினால் கட்டுப்படுத்தப்படாத இன வழிக் கொலைகளும் சட்ட மாற்றங்களும். இந்தக் கதையில் வரும் உங்களைப் போலத்தான் சிங்கள அரசியல்வாதிகளும் இதுகாறும் நடந்து வந்துள்ளார்கள்.
பிழைகளை மத்திய அரசாங்க சிங்களத் தலைவர்கள் தம் வசம் வைத்துக் கொண்டு தமிழர்களைப் பிழை கூறுவது பொருத்தமானது அன்று.தமிழரை விரட்டி அடிக்க வேண்டும், அவர்களின் அதிகாரங்களைக் குறைக்க வேண்டும் என்று கங்கணங் கட்டிக் கொண்டு நடந்து கொண்ட சிங்கள அரசியல் தலைவர்களால்த்தான் நாட்டில் இக்கட்டான நிலைமை ஏற்பட்டது.
‘சிங்களம் மட்டும்’ என்ற போது வடக்கு கிழக்கில் தமிழ் என்றிருக்கலாம் அல்லது இடதுசாரிகள் அன்று கூறியது போல் இரு மொழிகளும் அரச கரும மொழிகளே என்று சட்டம் கொண்டு வந்திருக்கலாம். ஆகக் குறைந்தது 1958ம் ஆண்டின் பண்டாரநாயக்க – செல்வநாயகம் உடன்பாட்டையாவது நடைமுறைப்படுத்தியிருக்கலாம். தமிழர்களிடம் இருந்து அவர்கள் உரிமைகளைப் பறித்த நிலையில் அவர்கள் உரிமைகளை அவர்களுக்குத் திருப்பிக் கொடுக்காது இருந்து கொண்டு இருக்கும் இன்றையநிலையில் ‘ஒரு இக்கட்டான நிலையை ஏற்படுத்தாதீர்கள்’ என்று சொல்வதைப் பார்த்தால் தெற்கு எவ்வளவு தான் உங்களைக் குட்டினாலும் குட்டை ஏற்றுக் கொண்டு பணிந்து நடவுங்கள் என்று நீங்கள் சொல்வது போல் இருக்கின்றது. எமது உரித்துக்களைப் பெறும் வரையில் நாம் போராடா விட்டால் நாம் இருந்த இடமே தெரியாமல் போய்விடும்.
ஏற்கனவே வடகிழக்கில் எமது காணிகள் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளன. பல தடவைகளில் வடமாகாண சபைக்குத் தெரியாமலே இது நடந்துள்ளது. ஏற்கனவே எமது காணிகளில் வெளியார் கொண்டுவரப்பட்டு குடியேற்றப்பட்டுள்ளார்கள். புதிய சிங்களக் கிராமங்கள் முளைக்கத் தொடங்கியுள்ளன. ஏற்கனவே வன திணைக்களம் போன்றவை எமது மக்களைத் தாம் குடியிருக்கும் இடங்களில் இருந்து வெளியேற்றுகின்றார்கள். ஏற்கனவே எமது பல்கலைக்கழகங்களில் 50மூமேற்பட்டவர்கள் சிங்கள மாணவ மாணவியர். ஏற்கனவே பல திணைக்களங்களுக்குத் தேவை நிமித்தமும் மத்திய அரசாங்கத்தின் ஏற்பாட்டின் நிமித்தமும் தென்னவர் கொண்டு வரப்பட்டுள்ளார்கள். ஏற்கனவே பல ஏக்கர் காணிகள்,விவசாயம், விவசாயப் பண்ணைகள் படையினர் கைவசம். ஏற்கனவே மீன் பிடித்தலுக்கு வெளி மாவட்ட மீனவர்கள் படையினர் அனுசரணையுடன் குடியேற்றப்பட்டுள்ளனர்.
நடப்பவற்றைப் பார்த்தால் தமிழர்கள் வட கிழக்கில் தொடர்ந்து பெரும்பான்மையினராகக் கணிக்க முடியாத நிலையே உருவாகி வருகின்றது. இவ்வாறான நிலையில் யாரென்று பார்க்காமல் எமது உறவினர் கொன்றுகுவிக்கப்பட்ட நாளில் இறந்தவர்களை நினைவில் ஏந்தாது சும்மா இருக்குமாறு சொல்கின்றீர்களா? சும்மா இருந்தால்த்தான் பிரச்சினை முடிவுக்கு வருமா?
பல வருடங்களுக்கு முன்னர் ஜேர்மனியர் ஒருவர் கூறியது ஞாபகத்திற்கு வருகின்றது. ‘பலரையும் ஜேர்மனிய ஹிட்லர் அரசு கைது செய்து கொண்டு போனது. தொழிற் சங்கத்தினர், விவசாயிகள், மதாசாரியர்கள் என்று அந்த அரசு கொண்டு செல்லும் போது நான் வாளாதிருந்தேன். சும்மா இருந்தால் சுகம் பெறலாம் என்றிருந்தேன். கடைசியில் என்னையும் பிடித்துச் சென்றுவிட்டார்கள். என் சார்பில் குரல் எழுப்ப எவரும் இல்லை’ என்றார்.
இக்கட்டான நிலையை ஏற்படுத்தாதீர்கள் என்கின்றீர்கள். சும்மா இருந்தால் சுகம் பெறலாம் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள். அவ்வாறு நடப்பதில்லை. உங்கள் உரித்துக்களை நீங்கள் உரத்துக் கூறிப் பெறவிட்டால் எவருமே உங்களுக்கு உதவி செய்ய முன் வரமாட்டார்கள். 1983 ஜூலைக்கு முன்னைய மாதங்களில் ஜே.ஆரின் திறந்த பொருளாதாரம் பாரிய பொருளாதாரவிருத்தியை ஏற்படுத்தியது. பல தமிழர்கள் வெளிநாடுகளில் இருந்து இலங்கை திரும்பி வணிகத்தில் ஈடுபட விரும்பினார்கள். ஆனால் நடந்தது என்ன?
ஜூலைக் கலவரம் ஏற்கனவே நல்ல நிலையில் இருந்த வணிக நிலையங்களைத் தீயிட்டு கொளுத்தியது. பொருளாதார ரீதியில் கணிசமான முன்னேற்றத்தைப் பெற்றிருந்த எமது வணிகப் பெருமக்கள் பலர் சகலதையும் இழந்து நிற்கும் ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். அவர்கள் எதற்கும் குரல் கொடுக்காதவர்கள். சும்மா இருந்தால் சுகம் பெறலாம் என்று நம்பியவர்கள்.
ஆகவே அன்பரே! இவ்வாறான கேள்விகளைக் கேட்டு உங்கள் சுயநல சிந்தையை வெளிப்படுத்தாதீர். போரில் அநியாயமாக கொல்லப்பட்டவர்களைப் பற்றி குரல் எழுப்ப முடியாவிட்டாலும் இறந்தவர்களை நினைத்து அவர்கள் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்தனை செய்யுங்கள்.எமது பிரச்சனைகளைத் தீர்க்க நீங்கள் முன்வராவிடினும் எம்மை விமர்சிக்காது இருங்கள். தமிழ் மக்கள் என்ற ரீதியில் இன்னும் 20 வருடத்தில் வடகிழக்கில் தமிழர்கள் செறிந்து வாழ்வார்களா இல்லையா என்பதையும் பெரும்பான்மையினராக தமிழர்கள் தான் தொடர்ந்து வாழ்வார்களா என்பது பற்றி எல்லாம் சற்று நின்று நிதானித்து முடிவுக்கு வாருங்கள். எம் மக்கள் படிப்படியாக விரட்டப்படும் நிலையில் எமது கடமைகள் என்ன என்பதைப் பற்றிச் சிந்தியுங்கள். பெரும்பான்மையினருடன் சங்கமமாகிவிட வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கிருந்தால் நாமும் அந்த எண்ணம் கொண்டிருக்க வேண்டும் என்று நீங்கள் நினைப்பது மடமை. ஒரு இனத்தை இவ்வாறு அழிப்பது, சங்கமமாக்குவது, படிப்படியாக இல்லாமல் ஆக்குவது இனப்படுகொலை என்று சர்வதேச ஆவணங்கள் கூறுகின்றன.
ஆகவே இனப்படுகொலைக்கு ஆதரவு தெரிவித்தா இந்தக் கேள்வியை நீங்கள் கேட்டீர்கள்? பதில் தாருங்கள்.
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்