கரியமுகில்களை ஊடறுத்து
வான்வழி விரைகிறது ஒரு விமானம்…..
இறகினைக் கோதியபடி தனியாக
உட்கார்ந்திருக்கிறது ஒரு பறவை….
சிறிய மிதிவண்டியில்
புல்வெளியை சுற்றிக்கொண்டிருக்கிறது
ஒரு பெண்குழந்தை…..
பொன்நிற முடிக்கற்றைகள் காற்றிலசைய
கைபேசியில் மூழ்கியிருக்கிறாள்
ஒரு வெள்ளைப்பெண்….
யாரும் வராமல்
வெறிச்சோடிக் கிடக்கிறது
பேருந்து தரிக்கும் இடம்…..
தேவகுமாரனை வரவேற்க
காத்திருக்கும் தூதர்களாய்
பச்சைக் குடைபிடித்ததுபோல்
நிமிர்ந்து நிற்கின்றன மரங்கள்…..
அடுத்த வீட்டின் சாளரத்தை தாண்டி
நாசிகளில் நுழைகின்றது
பீட்ஸாவின் வாசனை…….
நீண்ட ஆண்டுகளாய்
தனிமையில் வாழும் பக்கத்து
யூக்கோகாரனின் அறையில்
போத்தல் உடையும் ஒலி……
முள்ளிவாய்க்காலில் பட்டுணர்ந்த
துயரத்தின் வலியை விடவும்
அதிகமாய் வலிக்கிறது மே 18
முகநூற் பதிவுகள்……
சூரியனைப் பறித்துக்கொண்டு
இருளைப் பரிசளித்தவர்களை
மண்அள்ளித் திட்டுகிறாள்
ஒரு தாய் காணொளியில்……
ஒன்பது ஆண்டுகளின் முன்
தலையில் வீழாத செல்லையும்
கூட்டிச் செல்லாத மரணத்தையும்
சபித்துக்கொண்டிருக்கிறது மனது…….
நிலமெங்கும் சிதறிக்கிடக்கும்
கைவிடப்பட்ட பொருட்களாய்
இதயம் முழுவதிலும்
நிரம்பிக்கிடக்கின்றன காயங்கள் …..
நந்திக் கடலைப்போல
துயரங்களை ஆழப்புதைத்து
நாளைய நகர்வுக்கு
தயாராகிறது வாழ்க்கை.
– ஆதிலட்சுமி சிவகுமார்