சென்னை: தூத்துக்குடியில் நடந்த கலவரம் மற்றும் துப்பாக்கிச் சூட்டுக்கு ரஜினிகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி தூத்துக்குடி மற்றும் சுற்றுப்புற மக்கள் பெரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இன்று போராட்டத்தின் நூறாவது நாள். இன்று போராட்டக்காரர்கள் பேரணி நடத்த அனுமதி கோரியபோது போலீசார் மறுத்துவிட்டனர்.
இந்த நிலையில் இன்றைய தூத்துக்குடி போராட்டம் பெரும் கலவரமாக மாறிவிட்டது. போலீசார் மீது பொதுமக்கள் கல்வீசினர். பதிலுக்கு போலீசார் தடியடி, கண்ணீர் புகை பிரயோகித்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டு தாக்கப்பட்ட நிலையில், போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மாணவி உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.
இதற்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது. தவிர்க்க முடியாத நிலையில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இந்த நிலையில் ரஜினிகாந்த் இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது கண்டன அறிக்கையில், “மக்களின் உணர்வுகளை மதிக்காத இந்த அரசின் அலட்சியப்போக்கின் விளைவாக இன்று பொதுமக்கள் சுடப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது. நடந்த வன்முறை மற்றும் பொது ஜன உயிரிழப்புகளுக்கு தமிழக அரசே பொறுப்பு,” என்று கூறியுள்ளார்.
மக்களின் உணர்வுகளை மதிக்காத இந்த அரசின் அலட்சியப்போக்கின் விளைவாக இன்று பொதுமக்கள் சுடப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது.நடந்த வன்முறை மற்றும் பொது ஜன உயிரிழப்புகளுக்கு தமிழக அரசே பொறுப்பு – தலைவர் ரஜினிகாந்த்
— ரஜினி மக்கள் மன்றம் | Rajini Makkal Mandram (@rmmoffice) 22 May 2018