ஈழத்தில் கரவெட்டியில் பிறந்த இவர் தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கின்றார். யாழ் பல்கலைக் கழகத்தில் கணிதத்தில் சிறப்புப் பட்டமும் வெஸ்டேர்ன் சிட்னி பல்கலைக்கழகத்தில் கணக்கியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். சாம்பியா, நியுசிலாந்து ஆகிய நாடுகளில் கணிதம் மற்றும் இரசாயண ஆசிரியராக பணியாற்றியவர். தற்சமயம் சிட்னியில் கணக்கியல் சார் துறையில் நிர்வாக மேலாளராகப் பணி புரிகிறார்.
கவிதையிலும் சிந்தனை இலக்கியத்திலும் அதிக நாட்டம் கொண்ட சௌந்தரி அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் அறிவிப்பாளராகவும் பகுதி நேரப் பணியாளராகவும் இருந்து வருகிறார். இவர் தயாரித்து வழங்கும் கவிதை பேசும் நேரம் சிந்தனைச் சிதறல் ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளும் உலகத் தமிழ் வானொலி நேயர்களின் வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சிகளாகும்.
சிட்னியில் நடைபெறும் இலக்கிய நிகழ்ச்சிகளிலும், பல சமூக அமைப்புகளின் செயல்பாடுகளிலும் இவரது பங்களிப்பு பெருமளவில் இருக்கும்.
நிலவன் :- முதலில் உங்கள் குடும்பம் பற்றியும் வாழ்வுச்சூழல் பற்றியும் சொல்ல முடியுமா .?
சௌந்தரி :- எனது வளர்ச்சியில் மிகமுக்கிய இடத்தைப்பிடித்திருப்பது எது என்றால் அது எனது இளமைப்பருவம்தான். எனது இளமைக்காலம் மிகவும் அழகானது. நான் பிறந்து வளர்ந்தது வடமராச்சி பகுதியில் உள்ள கரவெட்டி என்ற ஓர் அழகிய கிராமத்தில். எனது வீட்டிலும் எனது கிராமத்திலும் உற்சாகமாகக் கழித்த இனிய நினைவுகள் இப்போதும் எனக்குள் பசுமையாக மலர்ந்து கொண்டிருக்கின்றன.
மிகுந்த செல்வாக்கான குடும்பத்தில் பிறந்து,அளவுக்கு அதிகமான செல்லப்பெண்ணாக வளர்ந்தவள் நான். வீட்டில் கடைக்குட்டி,இரண்டு பெண்களில் ஒருத்தி. அக்கா கௌரி நான் சௌந்தரி அம்மா மகேஸ்வரி அப்பா கணேசன். எனது அப்பாவுக்கும் எனக்கும் இடையில் மிக நெருக்கமான பிணைப்பு இருந்தது. என்மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தவர். நல்லதோர் நட்புறவை என்னோடு வளர்த்துக் கொண்டவர். அவரிடம் கிடைத்த அந்த அன்பை இதுவரை நான் யாரிடமும் காணவில்லை. நான் வளர்ந்த சூழல், எனது சொந்தங்கள், எனக்குக் கிடைத்த உறவுகள், நான் பழகிய மனிதர்கள், இவர்களினால் உருவாக்கப்பட்டவளே நான்.
நிலவன் :- உங்களைப்பற்றி சற்று கூறுவீர்களா?
சௌந்தரி :- எனது ஆரம்பக்கல்வியை கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியிலும் பின்பு பருத்தித்துறை மெதடிஸ்ட் பெண்கள் உயர்தர பாடசாலையிலும் கல்வி கற்றேன். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் சிறப்புப் பட்டத்தை நிறைவு செய்து பின்பு அவுஸ்திரேலியாவில் முதுகலைமாணி பட்டத்தை முடித்து கணக்கியல்துறையில் தற்சமயம் பணிபுரிந்து வருகின்றேன்.
சாத்தியமான எல்லாத் திசைகளிலும் பிரச்சனைக்கான தீர்வுகளைத் தேடுகின்ற ஓர் பெண் நான். அன்பு, கோவம், துடுக்குத்தனம், அழுகை எதையுமே மறைத்து வைக்கத் தெரியாமல் உள்ளதை உள்ளபடியே வெளிப்படுத்திவிடுவது எனது சுபாவம். இதனால் நான் இழந்ததும் அதிகம் பெற்றதும் அதிகம்.
எனது சொந்த தேசத்தில் என்னை நானே அறிமுகப்படுத்தும் அறிமுக நிலையில்தான் நான் தற்போதும் இருக்கிறேன். அதையிட்டு வருத்தமும் உண்டு. ஆனால் அதற்கான சந்தர்ப்பத்தை நான் உருவாக்கிக் கொள்ளவில்லை. அதுமட்டுமல்ல அதற்கான வாய்ப்பும் எனக்கு கிட்டவில்லை. பல்கலைக்கழகப்படிப்பு நிறைவடைந்த கையோடு நான் புலம்பெயர்ந்துவிட்டேன். புலம்பெயர்ந்த தேசங்களில் ஏதோ ஒரு வகையில் எனது முத்திரையைப் பதித்திருக்கின்றேன் என்பதில் பெருமைப்படலாம். சாம்பியா நியுசிலாந்து தற்போது அவுஸ்திரேலியா என்று எனது பயணம் தொடர்கிறது.
நிலவன் :- உங்கள் பல்துறை சார் நிபுணத்துவ உருவாக்கத்தில் உங்கள் இளமைக்காலச் சூழல் செலுத்திய தாக்கம் பற்றி சொல்லுங்கள்?
சௌந்தரி :- படிப்பதற்கு மட்டுமல்ல படைப்பதற்கும் திறமை வேண்டும் என்பார்கள். எனக்குள்ளிருந்த திறமைகளை புடம்போடச் செய்து படிக்கும் ஆர்வத்தையும் படைக்கும் ஆர்வத்தையும் வளர்ப்பதில் பங்கு வகித்தவர்களில் மிக முக்கியமானவர் எனது தந்தை பண்டிதர் பொன் கணேசன் அவர்கள். என்னை எனக்கே அடையாளம் காட்டி ஓர் ஆரோக்கியமான சூழலை உருவாக்கித் தந்து தேவையான ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி போன்றவற்றை கற்றுக் கொடுத்தவர்.
எனது தந்தை தமிழிலும் ஆங்கிலத்திலும் மிகுந்த புலமை வாய்ந்தவர். மிகச்சிறந்த மேடைப் பேச்சாளர். நான் சிறுமியாக இருந்தபோதே அப்பாவின் பட்டி மன்றங்களிற்கு அவரோடு செல்வதும், அப்பா கற்றுக் கொடுக்கும் மாலை நேரத் தமிழ் வகுப்புக்களில் உட்கார்ந்து அவர் சுவைபட சொல்லித்தரும் தமிழ் இலக்கியங்களை செவிமடுப்பதும் எனது பொழுது போக்கு நிகழ்வுகளில் ஒன்று. நான் தமிழை முறையாகப் படித்ததில்லை ஆனால் தமிழாசானின் பேச்சாற்றலையும் மொழியாற்றலையும் பக்கத்திலிருந்தே சுவைத்து வளர்ந்தவள். தமிழ் மொழிமீது ஆர்வம் ஏற்படுவதற்கும் என் தாய் மண்மீது பற்றுதல் ஏற்படுவதற்கும் பிள்ளையார் சுழி போட்டவர் எனது அப்பாதான்.
எது சரி எது தப்பு என்பதைப்பற்றிய ஓர் ஆரோக்கியமான வாதம் எங்கள் வீட்டில் எப்போதும் நடைபெறும். எனது குடும்பச்சூழல் எனக்கு கற்றுக்கொடுத்தவைதான் இன்றும் என்னை வழிநடத்திச் செல்கின்றது.
பாரதி கண்ட புதுமைப் பெண் நிமிர்ந்த நன்நடையும், நேர் கொண்ட பார்வையும், ஞானச்செருக்கும் கொண்டவளாக இருந்தாள். பண்டிதர் பொன் கணேசன் உருவாக்கிய பெண்ணும் அதேபோல் தான், ஆனால் அதையும் தாண்டி தனது மனத்திற்கு எது சரி என்று தோன்றுகின்றதோ அதையும் செய்வதற்கு அவள் தயங்குவதில்லை.
நிலவன் :- நீங்கள் ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளர் அதில் எப்படி ஆர்வம் ஏற்பட்டது? நாடகங்களிளும் நடிக்கின்றீர்கள் அந்த வகையில் நாடகம் மேல் ஈர்ப்பு வர ஏதுவாக இருந்த காரணிகள்?
சௌந்தரி :- சிறுபராயத்தில் இருந்தே சொற்களுடன் வாழ்கின்ற சந்தர்ப்பம் கிடைத்ததும் மேடைப் பேச்சுக்களை அதிகம் கேட்டு வளர்ந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். புதிய விடயங்களை அறியவேண்டும் என்பதில் எனக்கு நிறைய ஆர்வமும் தேடலுமிருக்கிறது. நாடகத்தில் ஏற்பட்ட ஓர் சிறிய ஈடுபாட்டிற்கு அதுவும் ஒரு காரணமாகும்.
ஊடகங்களில் எனது ஈடுபாட்டிற்கு நான் வாழ்ந்த புலம்பெயர் தேசங்கள்தான் காரணம். கரவெட்டியை விட்டு வெளியில் வந்தபின்பு எனது ஊர் அனுபவம் உலக அனுபவமாக விரிவடைவதற்கு பலவிதமான வாய்ப்புக்கள் இங்கே கிடைத்தன. மொழி ஆளுமையை வளர்ப்பதற்கும், சிந்தனைத் திறனை விரிவாக்குவதற்கும், என்னைப்பற்றிய பரவலான அறிமுகத்தை உருவாக்குவதற்க்கும் சாதகமான சூழல்கள் அமைந்தன. நியூசிலாந்து தமிழ்சங்க வானொலியும் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமும் எனக்குக் கிடைத்த வாய்ப்புக்களில் முக்கியமானவையாகும்.
நிலவன் :- படைப்பாளிகள் பிறக்கிறானா? உருவாக்கபடுகின்றானா?
சௌந்தரி :- மனதனுடன் சேர்ந்து எந்த ஆற்றலும் பிறப்பதில்லை. அவை வளர்க்கப்படுகின்றன. வளர்க்கப்பட வேண்டும். படைப்பாளிகள் உருவாக்கப்படுகிறார்கள். அவர்களுக்குள் இருக்கும் தனிப்பட்ட ஆர்வம், ஈடுபாடு, ஆசை இவற்றின் வெளிப்பாடுதான் படைப்பு.
நிலவன் :- எழுத்துத்துறையில் நீங்கள் நுழைவதற்கு ஏதுவான காரணிகள் எவை?
சௌந்தரி :- எழுத்துத்துறையில் நுழையவேண்டுமென்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை. இதுதான் என்னுடைய பாதை இதைத்தான் நான் செய்யப்போகின்றேன் என்று திட்டமிட்டு நான் பயணிப்பதில்லை. நேற்று இருந்ததைவிட, இன்று இருப்பதைவிட, நாளை இன்னும் சந்தோசமாக இருக்கவேண்டும் இதுதான் எனது தாரக மந்திரம். இந்த நம்பிக்கையைப் பிடித்துக் கொண்டுதான் நான் பயணிக்கின்றேன்.
பல்கலைக்கழகத்தில் படித்த காலத்திலிருந்தே எனது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு கவிதையை ஓர் ஊடகமாகப் பயன்படுத்தினேன். அன்றாடம் பார்க்கின்ற, பாதிக்கின்ற விடயங்களை எந்தவித வரையறைகளுமின்றி சாதாரண வார்த்தைகளைப் பயன்படுத்தி எழுதுகின்றபோது எனக்குள் ஏதோ ஓர் திருப்தி கிடைத்தது. எனது அனுபவங்களின் எழுத்து வடிவத்தை மற்றவர்கள் வாசிக்கின்றபோது அவை தமக்கு நெருக்கமானதாக உணர்கின்றார்கள் என்பதை நான் அறிந்தபோது தொடர்ந்தும் எழுதத் தூண்டியது. நான் எழுதுவதை நான் சிந்திப்பதை பொது வெளியிலும் சிலர் கவனிக்கின்றார்கள் என்ற நினைப்பு எனது எழுத்தை மெருகூட்டி மேலும் பொறுப்போடு எழுதவேண்டும் என்ற மனோநிலையை எனக்குள் உருவாக்குகின்றது.
நிலவன் :- உங்களுக்குள் எழுத்து மேல் ஈடுபாடு வந்தது பற்றி….
சௌந்தரி :- அடிப்படை விடயங்களைத் தேடி ஓடவேண்டிய தேவைகள் எனது வாழ்க்கையில் இருக்கவில்லை. குறிப்பிட்ட காலத்துக்கு முன்னாடியே அனைத்தும் கிடைத்தன. ஆகவே எனக்கு கிடைத்த மிகுதி நேரத்தை எழுத்துத் துறையிலும் ஊடகத்துறையிலும் செலவிட என்னால் முடிந்தது. காலப்போக்கில் எனது வாழ்க்கை அனுபவங்கள் வாயிலாக எழுத்தும் சிந்தனையும் மேலும் மெருகேறியது.
நிலவன் :- உங்கள் கவிதை பயணத்தின் ஆரம்ப காலகட்டம் அதன் வளர்ச்சி பற்றிக் குறிப்பிடுங்கள்..?
சௌந்தரி :- வாழ்க்கை என்பது ஓர் தொடர் பயணம் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. இன்றைக்கு இந்தக் கணத்தில் இப்போதே வாழவேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டவள் நான். வாழுகின்ற ஒவ்வொரு கணத்தையும் உணர்வுகள் சார்ந்து துண்டு துண்டாக அறிகின்ற தன்மை இருப்பதால் அவற்றை வெளிப்டுத்துவதற்கு கவிதை ஓர் சிறந்த வடிகாலாக அமைந்தது. என்னை எனக்கே அடையாளம் காட்டுவதற்கு என்னை நானே அறிந்து கொள்வதற்கு எழுத்தும் ஒருவிதமான முயற்சி என்றே கூறலாம்.
அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் கடந்த 15 வருடங்களாக நிகழ்ச்சி தயாரித்து வழங்குகின்றேன், எனது இலக்கியத் தாகத்தைத் தீர்ப்பதற்கு இந்த வானொலி பாரிய பங்களிப்பை வழங்கிவருகிறது. எனக்குள்ளிருந்த திறமைகளை புடம்போடச் செய்ததில் முக்கிய பங்கு இந்த வானொலியையும் வானொலி நேயர்களையும் சாரும். மேலும் பல பத்திரிகைகள், வார இதழ்கள், முகநூல் மற்றும் இணையத்தளங்கள் போன்றவையும் எனது எழுத்தை பல வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி என்வளர்ச்சிக்கு உதவியிருக்கின்றன.
நிலவன் :- “நீர்த்திரை” என்ற கவிதைத் தொகுதியை தாங்கள் எழுதுவதற்கு உந்துதல் வழங்கிய காரணி எது?
கவிதை நூலை வெளியிடவேண்டும் என்ற எண்ணம் என்னிடம் இருக்கவில்லை. எனது எழுத்துக்கள் பதியப்படவேண்டும், கவிதைகளை முழுத் தொகுதியாகக் கொண்டு வரப்படவேண்டும் அப்போதுதான் அவை அறியப்படும் என்ற நண்பர்களின் நச்சரிப்புத்தான் எனது முதலாவது கவிதைத் தொகுதியான நீர்த்திரையின் உருவாக்கத்திற்கான காரணமாகும்.
நிலவன் :- நீங்கள் எழுதிய கவிதைகளில் உங்களை அதிகம் கவர்ந்த கவிதை எது?
அடிப்படையான மனக் கிளர்ச்சியுடன் ஒரு சுரணையுள்ள பெண் சொல்ல நினைப்பவற்றைத்தான் எனது கவிதைகள் கூறுகின்றன. முக்கியமாக எனது சந்தோசங்களை, உளைச்சல்களை, அவஸ்தைகளை, தோல்விகளை வெளிப்படுத்துகின்ற பாமர வார்த்தைகள்தான் எனது கவிதைகள். நான் எழுதிய ஒவ்வொரு கவிதையும் எனது உணர்வுகள் சார்ந்தது. எனது அனுபவம் சார்ந்தது ஆகவே அதை பிரித்துப் பார்த்து எது பிடித்தது எது பிடிக்கவில்லை என்று என்னால் கூறமுடியாது. நான் எழுதியவை எனக்கே பிடிக்கவில்லையென்றால் மற்றவர்களுக்கு எப்படிப் பிடிக்கும். ஆனாலும் தேசிய விடுதலை மற்றும் பொதுப் பிரச்சனைகள் பற்றிய எனது கவிதைகள் எனக்குள் ஆழ்ந்த நிறைவைத் தந்தவை என்று கூறலாம்.
நிலவன் :- உங்கள் முயற்சிக்கு தடையாக அமைந்த சந்தர்ப்பங்கள் உள்ளனவா ?
சௌந்தரி :- எனது முயற்சிக்கு எதிரான தடை என்றால் அது நானாகத்தான் இருந்திருப்பேன். எந்த ஓர் எழுச்சியும் எந்த ஓர் வீழ்ச்சியும் எனது கையில்தான் இருக்கிறது. யாரையும் சுட்டிக்காட்டுவதில் எனக்கு விருப்பமில்லை. எனக்குள் ஏற்பட்ட பல நல்லமாற்றங்களுக்கு என் எழுத்தும் ஓர் காரணமாக இருந்திருக்கிறது. எனது நினைவுகளின் சேகரிப்பை நான் விரும்புகின்ற வகையில் வெளிப்படுத்த தடைகள் ஏற்பட்டிருந்தால் அதை நான் ஏற்றுக்கொண்டிருக்க மாட்டேன்.
எனது மேற்படிப்பும் அதை சார்ந்த சில விடயங்களும் எழுத்துக்கான நேரத்தை சிறிதளவு
குறைத்திருந்தது ஆனால் எதுவும் பெரிதாக தடையாக அமையவில்லை. என்னை சுற்றியுள்ளவர்கள் எப்போதும் ஊக்கம் தரக்கூடியவர்களாகவே இருந்திருக்கிறார்கள்
நிலவன் :- ஒரு எழுத்தாளன் அறிஞராகவும் அல்லது கல்வியாளரக இருக்க வேண்டிய அவசியம் இருக்கின்றதா ?
சௌந்தரி :- ஆளுமை கொண்ட மனிதர்கள் என்னை சுலபமாக ஆக்கிரமிப்பார்கள். ஒரு மனிதன் தனது ஆளுமையை எப்படி வளர்த்துக் கொள்கிறான் என்பதில் தான் எல்லாம் தங்கியிருக்கிறது. கல்வியா, அனுபவமா, சூழலா எது எமது ஆளுமையை வளர்க்கிறது. எவரிடம் தேடல் அதிகமாக இருக்கிறதோ எவரிடம் சிந்தனை அதிகமாக இருக்கிறதோ அவர் கல்வியாளராகவும் இருந்தால் அவர் அறிந்தவை அல்லது படித்தவை அவரிடம் ஓர் மாற்றத்தை ஏற்படுத்தும். தேடுதலற்ற ஆர்வமற்றவர்களிடம் உள்ள கல்வியறிவு பொதுவெளியில் பிரயோசனமற்று வேறாகத் தனித்து நிற்கும்.
ஓர் எழுத்தாளன், தான் பார்த்ததை ரசித்ததை உணர்ந்ததை தனக்குத் தெரிந்த மொழியில் வாசகர்களுக்குப் புரியும் வண்ணம் சுவைபட எழுதமுடிந்தாலே அவன் எழுத்தாளனாவான். ஆனால் ஒரு படைப்பானது உணர்வுகளின் மொழிபெயர்ப்பாக உணரப்படும்போதுதான் அவை வாசகர்களை சென்றடையும். அறிவால் எழுதாமல் உணர்வால் எழுதப்படுகின்ற எழுத்துக்கள்தான் பேசப்படும். அப்படிப்பட்ட எழுத்தை வளர்த்தெடுப்பதற்கும், செழுமைப்படுத்துவதற்கும் சரியான சிந்தனையும் சரியான பார்வையும் தொடர்ச்சியான உழைப்பும் வேண்டும். அதற்கு கல்வியறிவு ஓர் ஊக்கியாக அமையலாம் என்றே நம்புகிறேன்.
நிலவன் :- ஒரு எழுத்தாளனின் / கலைஞர்களின் முக்கிய அடையாளமாக எதை நினைக்கிறிர்கள்?
சௌந்தரி :- அவனது மொழிப்பற்று, சமூகப்பற்று, சுய அடையாளத்தை தன் இனம் சார்ந்து உணர்ந்து கொள்வது, எங்கு இருந்தாலும் தனது பண்பாட்டு விழுமியங்களை பேணுவதிலும் வளர்ப்பதிலும் காட்டும் அக்கறை, இவற்றையெல்லாம் தனது படைப்புக்கள் வழியே வெளிக்கொண்டுவருகின்ற தார்மீகம் இவை ஓர் எழுத்தாளனை சமூகத்தில் அடையாளப்படுத்தும்.
நிலவன் :- உங்களுக்கு மிகவும் விருப்பமான எழுத்தாளர்கள் பற்றி சொல்லுங்கள்
சௌந்தரி :- மனிதர்களின் தேடல்களும் அவர்களது வாழ்க்கை அனுபவங்களும் மாறுபட்டவை. இன்னுமொருவரின் படைப்பை படித்து இன்னுமொருவரின் சிந்தனையை விரும்பி உள்வாங்குவதென்பது மிக இனிமையான அனுபவம். அவை சாதாரணமாக அமைந்துவிடுவதில்லை. ஏதோ ஓர் விதத்தில் புதிய சிந்தனைகளை எனக்குள் உருவாக்கும் எந்த எழுத்தாளர்களையும் நான் விரும்பி வாசிப்பேன். போலியான பார்வையோடு வெற்றுக் கருத்துக்களை எழுதிக் குவிக்கும் சமூக அக்கறையற்ற எந்த எழுத்தின்மீதும் எனக்கு நம்பிக்கை கிடையாது. சமூக வலைத்தளங்களின் நன்மையால் எவரும் தங்களுக்கு பிடித்தவற்றை தங்களுடைய போக்கில் எழுதலாம். எனக்குப் பிடித்தவற்றை நான் தரம்பிரித்து வாசிக்கின்றேன். பிடிக்காதவற்றை வாசிக்காமல் விடுகின்றேன். நல்லவை நிலைக்கும் அல்லாதவை நிலைகாமல் போகும் அல்லது நிலைப்பதற்கான மாற்றத்தை தனக்குள் ஏற்படுத்தும்.
நிலவன் :- யாருடைய புத்தகங்களை அதிகம் வாசிப்பீர்கள்…?
சௌந்தரி :- இன்றைய இயந்திரமயமான வாழ்க்கையில் ஆறஅமர இருந்த வாசிப்பது என்பதே மிகப்பெரிய விடயம். கற்பனை இலக்கியங்களைவிட யதார்த்த எழுத்துக்கள்மீது நாட்டம் அதிகம். மண்வாசனை மாறாத ஈழத்து எழுத்துக்கள் என்னை அதிகமாக கவர்பவை. என் உணர்வுகளின் விம்பங்களை பிரதிபலிக்கின்ற எந்த படைப்பும் என்னைக் கவரும். எனது அனுபவங்களின் ஊடாக நான் அறிந்தவற்றை நான் உணர்ந்தவற்றை நான் எழுத மறந்தவற்றை மற்றயவர்களின் எழுத்துக்கள் பிரதிபலிக்கும்போது அவற்றை நான் மிகவும் விரும்பிப் படிப்பேன்.
நிலவன் :- தமிழரின் கலை, கலாசார பண்பாடுகளைப் பாதுகாப்பதில்,இன்றைய நவீன, நாகரிக வளர்ச்சி எவ்வகையான ஆதிக்கத்தினைச் செய்கின்றது என நினைக்கின்றீர்கள்…?
சௌந்தரி :- மாற்றம் ஒன்றே மாறாதது. கலாச்சாரம் பண்பாடு போன்றவை தொடர்ச்சியான மாற்றத்திற்கு உட்பட்டவைதான். சில மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் வதையில் மனதைப் பழக்கப்படுத்த வேண்டும். ஆனால் அதற்காக பாதிப்பைத் தருகின்ற மாற்றங்களை ஊக்கப்படுத்த முடியாது. பண்பாடும் கலாச்சாரமும் எமது அடையாளம் அவற்றை நாகரீகம் என்ற போர்வைக்குள் தொலைத்துவிடக் கூடாது.
நிலவன் :- நெருக்கடிகளைப் பதிவு செய்வதில் உங்களின் பங்கு பற்றி கூறுவீர்களா?
சௌந்தரி :- அக உலகம் சார்ந்த கவிதைகளில் ஆர்வம் அதிகமாக இருந்தாலும், இன உணர்வு, மொழி உணர்வு பற்றி ஈழத்தமிழர்கள் பேசவேண்டிய தேவையிருக்கிறது. ஆதலால் எமது வாழ்க்கையை, எமது பிரச்சினைகளை, எமது மனோபாவங்களை எடுத்துச் சொல்வது எனது கடமை என்றே கருதுகிறேன். எந்தவிதமான ஒப்பனையுமின்றி எனது வழமையான மொழியில் தேவையானதை தேவையான நேரத்தில் பேச நான் தயங்கியதில்லை. மறதி என்ற போர்வைக்குள் தம்மை மறைத்துக் கொள்ளும் மனிதர்களையும் தமது சுயநலத்தை தக்கவைக்க அர்த்தமற்ற பொருந்தாத நியாயங்களை முன்வைக்கும் மனிதர்களையும் அவ்வப்போது எனது கவிதைகளும் எழுத்தும் சாடியிருக்கின்றன.
நிலவன் :- போருக்கு பிற்பட்டு படைப்பாளிகளின் உளவியல் நிலை பற்றி?
சௌந்தரி :- அடுத்த மனிதனின் துயரம் கண்டு உணர்வுபூர்வமாக அதில் பங்கு கொள்ள முடியாதவன் மனிதனாக கருதமுடியாது. போருக்குப் பிற்பட்ட படைப்பாளிகளின் படைப்பில்தான் அவர்களது சுயம் வெளிப்படுகின்றது என்று கூறலாம். எமது நிலமும் எமது மக்களும் பேரினவாதத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு நிற்கின்றபோது ஏற்படும் சலிப்பு, இறுக்கம், கோவம் ஏக்கம் போன்ற பலஉணர்வுகளை இன்றைய படைப்பாளிகளின் எழுத்துக்கள் பேசுகின்றன. அவற்றில் படைப்பாளிகளின் மனஉளைச்சல் விரவிக் கிடக்கிறது. துரோகத்தின் நிழல் பரவி ஏமாற்றப்பட்டு கசந்து போய் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் பயத்துடன் எதிர்கொண்ட மனிதர்களின் உளவியல் நிலையை எதைக்கொண்டு எடுத்துக் கூறுவது. அவை காலத்தால்ஆறாத வடுக்களாகும்.
நிலவன் :- போர் கால வரலாறுகளை பதிவிடுவது பற்றி உங்கள் கருத்து ?
சௌந்தரி :- வேறு நாடுகளில் இருந்தாலென்ன தாய் நாட்டில் இருந்தாலென்ன ஈழத்தமிழர்களின் படைப்புக்கள் போர்க் கால வரலாற்றை பதிவதில் பின்னிற்கவில்லை. போர்க்கால இலக்கியம் தருகின்ற அனுபவம் தனித்துவமானது. தனது இனத்தின் பிரச்சனைகளை, வலிகளை சரியாக விளங்கி, அந்த அனுபவங்களை முழுமையாக உள்வாங்கி படைக்கப்படும் எந்த ஒரு படைப்பையும் நான் பெரிதும் மதிக்கின்றேன். படைப்பின் உருவாக்கத்தில் தவறுகள் இருக்கலாம், படைப்பின் தரத்தில் குறைகள் இருக்கலாம் ஆனாலும் எனது இனம் எனது உறவு என்ற உணர்வு அவர்களது படைப்பின் ஊடாக வெளிப்படுகின்றது. அந்த உணர்வுகளின் தனித்தன்மைக்கு நிகரானது வேறெதுவுமில்லை.
நிலவன் :- விமர்சனங்கள்அல்லது எதிர்மறை கருத்துக்களை எப்படி பார்க்கிறீர்கள் ?
சௌந்தரி :- காழ்ப்புணர்ச்சி காரணமாக முன்வைக்கப்படும் எதிர்மறையான விமர்சனங்களையோ போலித்தனமான கூச்சல்களையோ நான் கணக்கில் எடுப்பதில்லை. ஆனால் ஓர் விடயம் சார்ந்து முன்வைக்கப்படும் விமர்சனங்களை நான் விரும்பி ஏற்றுக் கொள்கின்றேன். சுட்டிக்காட்டப்படும் பிழைகளை சீர்செய்வதற்கு அவை உதவும் என்று நம்புகிறேன்.
எது என்னை மகிழ்விக்கிறதோ அதை நான் செயல்படுத்துகின்றேன். ஆர்வமில்லாத எதையும் கடமைக்காக செய்வது கிடையாது. எனது மகிழ்ச்சி எனது ஆற்றல்களின் ஊடாக வெளிவருவதால் அவற்றை பயனடைபவர்களும் மகிழ்கிறார்கள். அதனால்தான் பாராட்டுபவர்களும் தட்டிக்கொடுப்பவர்களும் என்னைச் சுற்றி நிறைய இருக்கின்றார்கள்.
எதிர்மறையான விமர்சனங்களும் வராமல் இல்லை. எந்த ஓர் விடயத்தில் ஈடுபட்டாலும் அதில் மிகத் தெளிவாகவும் சந்திக்கப்போகின்ற விளைவுகளை ஏற்றுக்கொள்ளும் முடிவோடும் இருப்பதால் எதிர்மறையான விமர்சனங்கள் என்னை ஒன்றும் செய்வதில்லை. விமர்சனங்களை கேட்க விருப்பமில்லை என்றால் எதையுமே செய்யாமல்தான் இருக்கவேண்டும். அப்படி என்னால் இருக்கமுடியாது. இப்படியும் அப்படியும் பேசுகின்ற அவன்களையும் அவள்களையும் நான் கணக்கில் எடுப்பதில்லை.
நிலவன் :- பெண் ஊடகவியலாளர்கள் சுயமாக இயங்கக்கூடியவகையில் இன்றைய தமிழ்ச்சூழல் இருக்கிறதா?
சௌந்தரி :- தமிழ் சமூகத்தில் ஓர் பெண் ஊடகத்துறையில் நிலைத்திருப்பதென்பது சுலபமானதல்ல. அவளை முழுமையாக புரிந்து கொள்வதற்கும் யாரும் தயார் நிலையிலுமில்லை. ஆனாலும் எனது மனதில் ஒருபோதும் சலிப்பு ஏற்பட்டதில்லை. அவ்வப்போது என் சார்ந்த விடயங்கள் பேசப்படுவதும் பின்னால் ஒன்றுமில்லாமல் போய்விடுவதும் காணமுடிகிறது. ஆழமான எதிர்வினைகளை சந்திக்காவிட்டாலும் அவதானிக்கக்கூடிய அளவில் சிக்கல்களை சந்தித்திருக்கிறேன். கண்டனம், விமர்சனம் இவற்றிற்கு மத்தியில்தான் என் குரல் இன்னும் வலிமையாக உயரும் என்ற நம்பிக்கையில் பயணிக்கின்றேன். ஆரம்பத்தில் கூறியதுபோல் என்னைச் சுற்றி நல்லவர்கள் அதிகமாக இருப்பது எனது பலம் என்று கருதுகிறேன்.
நிலவன் :- உங்கள் படைப்புகளில் காலம் தாண்டி நின்று நிலைக்கக் கூடியதாக எதைக் கருதுகிறீர்கள்?
சௌந்தரி :- சமூக அங்கீகாரம் என்பது என்னை மிகவும் கவர்ந்த ஓர் விடயம். சமூகம் சார்ந்த சமூக நலன் வேண்டிய செயல்பாடுகளில்தான் எனது கவனம் அதிகம். பகுதிநேரமாகத்தான் நான் கலை இலக்கியங்களில் பங்கெடுக்கின்றேன். எனது படைப்புகள் காலம் தாண்டிப் பேசப்பட வேண்டும் என்ற எண்ணத்தைவிட நான் தொடர்ந்தும் படைப்பூக்க நிலையில் இருக்கவேண்டும் என்றே பிரியப்படுகின்றேன். அதற்கான முயற்சிகளில் தொடர்ந்தும் கவனமெடுக்க வேண்டும் என்பதே எனது நோக்கம்.
நிலவன் :- உங்களைப் போன்ற இளம் எழுத்தாளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
சௌந்தரி :- சிநேகபூர்வமான கருத்து ஒன்று. இலக்கியம் மற்றும் கலை உணர்வுகள் பல அனுபவங்களை பெற்றுத் தரும். கிடைக்கின்ற வாய்ப்பை பயன்படுத்தி அல்லது புதியவாய்ப்புக்களை உருவாக்கி இலக்கியப்பயணத்தை ஆர்வத்துடன் தொடருங்கள். உங்களுக்கான ஓர் தனியான இடத்தை உடனடியாக அடையமுடியாமல் போனாலும் அதன் மூலம் கிடைக்கின்ற அனுபவம் கூர்மையானதும் விரிவானதுமாகும். புதிய கருத்துக்கள், புதிய உத்திகள் புதிய முயற்சிகள் இவற்றோடு பயணிக்கின்றபோது ஓர் பூரணத்துவத்தை உணரலாம்.
நிலவன் :- அடுத்த கட்டமாக ஏதேனும் முயற்ச்சியில் ஈடுபடவுள்ளீர்களா?
சௌந்தரி :- பல நாடுகளில் வாழ்ந்தாலும் அவுஸ்திரேலியாதான் எனது தேடலுக்கு நிறைய தீனி போடுகின்றது. உற்சாகத்தோடும் நம்பிக்கையோடும் உற்றுப்பார்க்கக்கூடிய பல அழகான உறவுகளையும் இலக்கிய ஆளுமைகளையும் நான் இங்கே சந்திக்கின்றேன். நான் வாழுகின்ற இந்த சமூகத்தை நான் அதிகமாக நேசிக்கிறேன். அதனாலோ என்னவோ எனது ஆர்வங்களும் திறமைகளும் தொய்வில்லாமல் வளர்கின்றன. எனது இரண்டாவது கவிதைத் தொகுதியான அகத்தி மிகவிரைவில் வெளிவரவுள்ளது. தொடர்ந்தும் எழுத வேண்டும் என்பதே எனது விருப்பம்.
நிலவன் :- நிறைவாக என்ன சொல்லிட விரும்புகின்றீர்கள்?
சௌந்தரி :- தமிழ் இலக்கியக்கடலில் நான் வெகு சாதாரணம். மிகமிகச்சிறிய அலகு. எனக்கு என் தகைமை புரியும் என்னை அளவிடும் வகையும் தெரியும். என்னை ஓர் கவிதாயினி என்றோ ஓர் எழுத்தாளினி என்றோ அடையாளப்படுத்துவதையோ அல்லது அங்கீகாரம் கிடைப்பதையோ நான் எதிர்பார்க்கவில்லை, அதற்கான முயற்சியையும் நான் மேற்கொள்ளவில்லை. எனது எழுத்தின் மூலம் என்னை நான் அடையாளம் காண்கிறேன். எனது விடுதலையை எனது சுதந்திரத்தை எனது எழுத்தின்மூலம் சாத்தியமாக்க முயற்சிக்கிறேன்.அதற்காக நான் தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பேன். எனதுசின்னச்சின்ன அழகான குணங்களுடன் வாழ்க்கையை முழுமையாக ரசிக்கின்ற ஓர் சாதாரண பெண்ணாகவே என்னை வகைப்படுத்த விரும்புகின்றேன்.
நிலவன் :- வாழ்த்துகள் உங்கள் முயற்சிகள் வெற்றி பெறுவதற்கு இறைவனை வேண்டுகின்றேன். என்னுடைய இந்த நேர்காணலுக்கு ஒத்துழைத்தமைக்கு உங்களுக்கும் எனது நன்றிகள்.
நன்றி
-நிஜத்தடன் நிலவன்