கந்தகப் புகை மூட்டி
செந்தணல் விடம் வீசி
வேட்டையாடியது பாதகம் – தமிழனை
கொன்று குவித்தது அன்னியம் !
வீட்டிலே உடல் கருகி
காட்டிலே அங்கம் சிதறி
கடலிலும் உயிர் உருகி
மாய்ந்து மாண்டது எம்மினம் – அன்று
மரணத்தீயில் மடிந்தது தமிழினம் !
முள்ளி வாய்க்காலும்
மூச்சற்றுப் போனது !
முற்றிலும் பெரும் பகை
சுற்றியே சூழ்ந்தது !
எறிகணை வீச்சுக்கள்
அசுரப் பலி எடுத்தது !
ஆதரவற்று எம்மினம்
தவியாய் தவித்தது !
கண்ணீரும் நிறம்மாறி
செந்நிறம் ஆனது !
செங்குருதி உடல் நீங்கி
மண்ணோடு உறைந்தது !
வேதனைகள் அன்றாடம்
உள்ளத்தைப் குடித்தது !
சோதனைகள் தீராத
நோயாகிப் போனது !
உடலங்கள் உதிரமோடி
உயிரற்று போனது !
வன்னி மண்ணும் சிவந்த்து
இரத்த ஆறு பாய்ந்தது !
காடையர் கொடுங்கரம்
மானபங்கம் புரிந்தது !
கருணைகள் தெருவிலே
சிதைந்து சீரழிந்தது !
கடவுள்கள் எல்லாமே
கல்லாகிப் போயினர் !
உறவுகள் எல்லாமே
பிணமாக மாறினர் !
கை கட்டி வேடிக்கை
பார்த்தது இவ்வுலகு !
குமரிக்கண்டத்து பெரும் வீரம்
வன்னி மண் தந்த மா வீரம்
துரோகத்தின் சதியால்
சாய்ந்தது பெருந் துயரம் !
வேலணையூர் ரஜிந்தன்.