வட தமிழீழம், முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட திருமுறிகண்டி கிராம அலுவலர் பிரிவில் பொதுமக்களின் காணிகள் மற்றும் அரச காணிகள் அடங்கலாக சுமார் 300 ஏக்கர் காணி சுபீகரிப்பு முயச்சி பொதுமக்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட திருமுறிகண்டி கிராம அலுவலர் பிரிவில்சுமார் 50 ஏக்கருக்கு மேற்ப்பட்ட காணிகளை சுபீகரித்து பாரிய இராணுவ முகாம் ஒன்றை அமைத்துள்ள இராணுவம் தற்போது அந்த இடத்துக்கு மேலதிகமாக பொதுமக்களின் காணிகள் மற்றும் அரச காணிகள் அடங்கலாக சுமார் 300 ஏக்கர் காணி சுபீகரிப்பு நடவடிக்கையாக வேலி அமைக்கும் பணியைமுன்னெடுத்தது.
இன்று மாலை குறித்த காணியை சுபீகரிக்கும் முயற்ச்சியில் இராணுவம் ஈடுபட்டதை அவதானித்த மக்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் செ பிறேமகாந்த் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் குறித்தபகுதியில் கூடி இராணுவ அதிகாரிகளை அழைத்து கலந்துரையாடியதோடு காணி சுபீகரிப்பை நிறுத்துமாறும் தொடர்ந்து இடம்பெறுமானால் மக்கள் போராட்டம் இடம்பெறும் எனவும் தெரிவித்தனர்.
எனினும் குறித்த முகாமில் உயர்நிலை அதிகாரி இல்லாத நிலையில் இரண்டாம் நிலை அதிகாரி மக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களுடன் கலந்துரையாடி மக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் தெரிவித்த விடயங்களை உயரதிகாரிக்கு தெரிவிப்பதாக தெரிவித்தார். இருப்பினும் காணி சுபீகரிப்பு நிறுத்த வேண்டும் எனவும் இல்லையெனில் மக்கள் போராட்டம் இடம்பெறும் எனவும் குறித்த அதிகாரியிடம் தெரிவித்தனர்.
இந்த காணி சுபீகரிப்பு தொடர்பில் குழந்தைவேல் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் முறுகண்டியில் நாற்பது ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றேன் 1971 ஆம் ஆண்டு நான் இங்கு வந்துள்ளேன். இந்த மண்ணில் படையினர் நிலைகொண்டுள்ள காணி எனக்கு தெரியக்கூடியதாக 40 குடும்பங்கள் விவசாயம் செய்து சந்தைப்படுத்தி வந்துள்ளார்கள் இன்றும் அவர்கள் இருக்கின்றார்கள் போரின் பின்னர் அவர்கள் வெளியில் சென்றுள்ளார்கள் அவர்கள் தற்போதும் இருக்கின்றார்கள் இந்த காணிக்கு அருகில் சிவன் ஆலயம் ஒன்று அமைந்துள்ளது இந்த ஆலயத்திற்காக பத்து ஏக்கர் காணியினை அரசு தருவதாக உறுதி மொழி அளித்துள்ளது. எனவே இது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கோவில் நலன் கருதியம் மக்கள் நலன் கருதியும் காணியினை விடுவிக்கவேண்டும். என்றார்.
இதேவேளை முறுகண்டி பகுதியில் உள்ள குளத்தினை பயன்படுத்தி படையினர் தோட்டம் செய்து வருகின்றார்கள் ஏற்கனவே அரச அதிகாரிகளால் மக்களுக்கு வழங்கப்படுவதாக தீர்மானிக்கப்பட்ட காணியினை மக்களுக்கு வழங்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம் .
தொடர்ந்து இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஜீவானந்தம் நீண்டகாலமாக முறுகண்டி பகுதியில் தொழில் செய்து வருகின்றேன் இன்னிலையில் இந்த பகுதியில் சிவன் கோவில் ஆலயத்திற்காக பிரதேச செயலாளர் 10 ஏக்கர் காணியினை தருவதாக உறுதியளித்து அதனை விடுவிக்க ஆவணங்களும் தந்துள்ளார். ஏற்கனவே நான்காம் கட்டை படையினர் அதில் இருந்து வெளியேறி இருந்தார்கள். ஆனால் தற்போது அந்த காணியினையும் கையகப்படுத்த படையினர் முயன்றுள்ளார்கள் இந்த வேளையில் இந்த காணியினை எங்களுக்கு பெற்று தருமாறு வேண்டுகின்றோம்.
இந்த காணி நீண்டகாலமாக ஒலுமடு விவசாய திணைக்களத்தினால் துப்பரவு செய்து இரண்டாயிரம் மக்களுக்கு கொடுப்பதாகவும் குறித்த குளத்தினை மக்கள் பாவனைக்கு விடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது ஆனால் அந்த குளமும் இதுவரை விடவில்லை இன்னிலையில் படையினர் காணியினை அபகரிக்கின்றார்கள். என்றார்.
இங்கு கருத்து தெரிவித்த துணுக்காய் பிரதேச சபை உறுப்பினர்
நல்லாட்சி என்று நாடகம் நடத்தும் இந்த அரசாங்கம் எமது மக்களுக்கு நல்லிணக்கம் என்ற போர்வையில் மக்களின் பூர்வீக காணிகளையும் வளங்களையும் அள்ளிசெல்கின்றார்கள் படையினர் திட்டமிட்டு எமது திருமுறுகண்டி பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தினை அபகரித்துள்ளார்கள் அரசின் திட்டமிட்ட சதிவேலைகள் பின்தங்கிய மாவட்டமான முல்லைத்தீவு மாவட்டத்தில் கடுமையான பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.
வெலிஓயா தொடக்கம் முறுகண்டிவரையான பகுதி முல்லைத்தீவு மாவட்டத்தின் பூர்வீக எல்லைகளாக கொண்டுள்ளது இந்த பிரதேசத்தினை நல்லாட்சி அரசு அபகரிப்பது கண்டிக்கத்தக்கது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடன் தீர்வு பெற்று தரவேண்டுகின்றேன். என்றார்
இது விடயமாககருத்து தெரிவித்த புதுகுடியிருப்பு .பிரதேச சபை .தவிசாளர்.செ பிறேமகாந்த் கருத்து தெரிவிக்கையில்
திருமுறிகண்டிப்பகுதியில் ஆலயத்திற்கு வழங்கப்பட்ட காணியானது மீண்டும் படையினரால் வேலி போடப்பட்டு அடைத்துக்கொண்டிருக்கின்றார்கள் இந்த நிலமையினை பார்த்தால் இது இராணுவ ஆட்சி படையினர் நினைத்தால் எதுவும் செய்வார்கள் என்ற அச்ச நிலையினை தோற்றிவித்துள்ளது.
மாங்குளத்தில்இருந்து கொக்காவில் வரையான இரணைமடு குளம் அமைந்துள்ள பகுதியில் உள்ள அனைத்து பகுதியும் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது தற்போது முறுகண்டீஸ்வரர் ஆலயத்திற்கு பின்னால் உள்ள பகுதியில் படையினரால் ஆக்கிரமிக்கப்படுவது கண்டிக்கதக்க விடயமாகும் இது அடுத்துவரும் சந்ததிக்கு தேவையான காணிகள் ஆகும் இதனை உரிய தரப்பினர் பொதுமக்களுக்காக காணியினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோருகின்றேன்என்றார்.
இங்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா
முறுகண்டி பிள்ளையார் கேவிலுக்கு அருகில் உள்ள அக்கராயன் வீதியில் கொமாண்டோ றெஜிமன்ட் முகாம் அமைந்துள்ளது இந்த முகாம் அமைந்துள்ள பகுதிக்கு அருகில் உள்ள பொது காணியினை படையினர் வேலி அடைப்பதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
இது குறித்து படைமுகாமின் இரண்டாவது அதிகாரியினை சந்தித்து நான் கேட்டிருந்தேன் வேலி ஏன் அடைக்கின்றீர்கள் என்று அவரிடம் சரியான ஆவணங்கள் எவையும் இல்லாத நிலையில் அவர் எனக்கு கூறிய விடயம் தங்களுடைய தோட்டத்திற்குள் மிருகங்கள் வருகின்றன அதனை தடுப்பதற்காக வேலி அடைக்கின்றோம் என்று தெரிவித்துள்ளார்.
பொதுமக்களிடம் நான் கேட்டபோது இடம்பெயர்ந்தமட்டும் இந்த காணிக்குள் தாங்கள் வாழ்ந்ததாகவும் மீள்குடியேறியதன் பின்னர் முகாமாக மாற்றப்பட்டுள்ளதால் வசிக்கமுடியாத நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.
இந்தகாணி 2015 ஆம் ஆண்டு படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்டது ஆனால் மீண்டும் அவர்கள் இப்போது வேலி அடைப்பது என்பது முறையற்ற செயற்பாடாகும் இதனை உடன் நிறுத்துமாறும் பிரதோச செயலகத்தில் இருந்து இதற்கான ஆவணம் பெற்று தருவதாகவும் படை அதிகாரி வந்ததன் பின்னர் நாளை மறுதினம் படைஅதிகாரியுடன் பேச்சுவார்த்தை நடத்தி குறித்த வேலியினை அப்புறப்படுத்தி மக்களுக்கு வழங்குவதற்கு பிரதேச செயலகம் ஊடாக நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வடக்கில் தற்போது படையினர் இருக்கும் முகாம்களில் தோட்டம் செய்வது மட்டுமல்ல பல பண்ணைகளை ஆக்கிரமித்துவைத்துள்ளார்கள். இது மிகவும் வேதனையான விடயம் மக்களுக்கு வாழ்வாதாரமாக இருந்துள்ள போர்காலத்தில் மரங்கள் நாட்டப்பட்டுள்ள பண்ணைகளில் இன்று படையினர் வருமானத்தை எடுத்துக்கொண்டிருக்கின்றார்கள் இவ்வாறான செயற்பாடும் நிறுத்தப்படவேண்டும்.. என்றும் சாந்தி சிறீஸ்கந்தராசா தெரிவித்துள்ளார்.