தமிழ் மக்கள் மீது கொழும்பு அரசு அதிக அக்கறை கொண்டு செயற்படவில்லை என்றால் 6 லட்சத்து 20 ஆயிரம் தமிழ் மக்களும் வெளிநாடு சென்றுவிடும் நிலை ஏற்படும் என்று தெரிவித்தார் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன்.
நல்லூர் கிட்டுப் பூங்காவில் நேற்று நடைபெற்ற உற்பத்திப் பொருள்களின் கண்காட்சியும் விற்பனையும் நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது; வடக்கு கிழக்கில் அமைச்சின் ஊடாகப் பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக கல் வீடுகள் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது. அது இரண்டு வருடத்தில் நிறைவடையும் என்று எதிர் பார்க்கின்றோம்.
40 ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்குத் தூண்டுதலாக இருந்தவர் சம்பந்தன் ஐயா என்பதை நான் குறிப்பிடவேண்டும். அவர்தான் அதற்கான தயார்ப் படுத்தலை என்னிடம் தந்து வீடுகள் வேண்டும் என்று தெரிவித்தார். அதற்கு
அமைவாகத் தற்போது வீடுகள் அமைக்கப்படவுள்ளன.
பனம் சாராயத்துக்கு நல்ல வரவேற்பு நாடெங்கிலும் உள்ளது. அதனால் திக்கம் வடிசாலை சீரமைக்கப்படவுள்ளது. அத்துடன் வெகு விரைவில் பனம் குளிர் பானம் ஒன்றும் யாழ்ப்பாணத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதுவரையில் 500 மில்லியன் ரூபா பெறுமதியான இழப்பீட்டு உதவிகளை வழங்கியுள்ளோம். இன்னமும் அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. ஆனால் இந்த முறை நிதி ஒதுக்கீடு எமது அமைச்சுக்குக் குறைவாகவே வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் நலன் முன்னேற்றம் தொடர்பில் தலைமை அமைச்சர் அதிக அக்கறை கொண்டுள்ளார். தமிழ் மக்கள் மீது நாம் அதிக அக்கறை கொண்டு செயற்பட வேண்டும். எமது கலாசாரத்தை அழிக்கப் பலர் நினைப்பார்கள். போரால் அல்ல. வேறு வகையில் முயற்சி
செய்வார்கள் என்றார்.
‘‘மீள் குடியயேற்ற அமைச்சாராக சுவாமிநாதன் வந்த பின்னரே இந்த அபிவிருத்திகள் வேகமாகச் சிறப்பாக நடைபெறுகின்றன. அவர் பல திட்டங்களை முன்னெடுத்துள்ளார். இன்னும் பலர் மீளக்குடியமர்ல்த்தப்படாமல் உள்ளனர். அவர்களும் மீளக்குடியமர்த்தப்படவேவண்டும்.
யாழ்ப்பாணத்தில் சிறப்பான உற்பத்திகள் இடம்பெறுகின்றன. அவர்களுக்கான சந்தை வாய்ப்பு வேண்டும்’’ என்றார் யாழ். மாவட்டச் செயலர் நா.வேதநாயகன்.
இதேவேளை, நிகழ்வு முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சுவாமிநாதன், மீள் குடியேற்ற அமைச்சின் ஊடாக பாதுகாப்பு பிரிவுக்கு வழங்கப்பட்ட நிதி வடக்கில் விடுவிக்கப்படும்
பகுதிகளில் உள்ள கட்டங்களை அகற்றுதல் உள்ளிட்ட வேலைகளை மேற்கொள்ளுவதற்கே
என்று தெரிவித்தார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய உரையில், மீள் குடியேற்ற அமைச்சின் ஊடாகப் பாதுகாப்புப் பிரிவுக்கு அதிகளவு நிதி வழங்கப்பபட்டது என்று குற்றஞ்சாட்டியது குறித்து அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேள்வி
எழுப்பினர்.
‘‘மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாகப் பாதுகாப்புப் பிரிவுக்கு நிதி வழங்கியமை உண்மை. மீள்குடியமர்வுக்குக் காணி விடுவிப்பு அவசியமாகும். இவ்வாறு விடுவிக்கப்படும் காணிகளில் உள்ள கட்டடங்களை அகற்றுதல் போன்ற வேலைகள் இருந்தன. அதற்காகவே அந்தப் பணம்
பாதுகாப்புப் பிரிவுக்கு வழங்கப்பட்டது’’– என்றார்.
இதேவேளை நிகழ்வில் கலந்து கொண்ட தமிழரசுக் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா ; ”வடக்கில் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கும், செயற்பாடுகளுக்கும் முன்னரையும் விட எதிர்ப்புக்கள் மற்றும் எதிர்க் கருத்துக்கள் தெற்கில்
அதிகமாகவே தற்போது வருகின்றது. வடக்கு மாகாண சபையில் இன ஒழிப்புப் பற்றிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கும் அவர்கள் எதிர்ப்புகளைக் காட்டியிருந்தார்கள். எனினும் நாம் நிதானமாகவே பயணிக்கிறோம் என்று ஊடகவியலாளரால் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்திருந்தார்.