வன்னிப் பிராந்தியத்தில் தமிழர்களின் குடியிருப்புகளை கபளீகரம் செய்வதற்கான நடவடிக்கைகள், பாதுகாப்பு எனும் போர்வையில் இரகசியமாகவும் தூர நோக்குடனும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தமிழர்களின் பாரம்பரிய நினைவுச் சின்னங்களையும் கல்வெட்டுகளையும் அகழ்ந்துவிட்டு பெரும்பான்மையின மக்களின் கலாசாரச் சின்னங்களை வேண்டுமென்றே புதைத்து வைப்பதன் மூலம் சில காலங்களின் பின்பு இது தமிழர்களின் வாழ்விடங்கள் அல்ல, பெரும்பான்மை மக்கள் வாழ்ந்த பிரதேசங்கள் என்று கூறும் கபட நாடகங்கள் இரவோடு இரவாக அரங்கேறிக் கொண்டிருப்பதாக வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
கிளிநொச்சி பல்லவராயன்கட்டு, ‘அறம் செய்’ அறக்கட்டளை நிலைய ஏற்பாட்டில் அறநெறிப் பாடசாலை மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற, வன்னியிலுள்ள வறிய மாணவர்களுக்கான துவிச்சக்கரவண்டிகள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்த முதலமைச்சர் விக்னேஸ்வரன் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;
தமிழர்களின் பாரம்பரிய பூமிகளையும் வாழ்விடங்களையும் வளம் மிக்க நிலப்பரப்புகளையும் கபளீகரம் செய்வதற்கு கழுகுகள் எம்மைச் சுற்றி வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன. நாமோ எதையும் உணராதவர்களாக பேசா மடந்தைகளாக சிறு சிறு மகிழ்ச்சிக் கேளிக்கைகளில் மூழ்கி இருக்கின்றோம்.
மிகப் பெரிய நிலப்பரப்பைக் கொண்ட வன்னிப் பிராந்தியத்தில் தமிழர்களின் குடியிருப்புகள் கேள்விக்குறியாக்கப்படுவதற்கான முத்தாய்ப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு எனும் தலைப்பின் கீழ் இரகசியமாகவும் தூர நோக்குடனும் முன்னெடுக்கப்பட்டுவருவது எம்மால் உணரக்கூடியதாக உள்ளது. ஆனால் அதனை எந்த அளவுக்கு எம்மால் கட்டுப்படுத்த முடியும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இந்த இரகசிய நிகழ்வுகளை கட்டுப்படுத்துவதற்கும் தடுத்து நிறுத்துவதற்கும் நாம் எம்மால் முடிந்தவரையில் அல்லும் பகலும் முயன்று வருகின்றோம். எமது முயற்சிகளுக்கு அவ்வப்பகுதிகளில் உள்ள மக்களின் உதவி ஒத்தாசைகள் அவசியம் தேவைப்படுகின்றன.
தமிழர்களின் பாரம்பரிய நினைவுச் சின்னங்களையும் கல்வெட்டுகளையும் அகழ்ந்துவிட்டு பேரினவாத மக்களின் கலாசாரச் சின்னங்களை வேண்டுமென்றே புதைத்து வைப்பதன் மூலம் சில காலங்களின் பின்பு இது தமிழர்களின் வாழ்விடங்கள் அல்ல, பெரும்பான்மை மக்கள் வாழ்ந்த பிரதேசம் என்று கூறும் இவ்வாறான கபட நாடகங்கள் இரவோடு இரவாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
எனவே மக்கள மிகவும் விழிப்பாக செயற்பட வேண்டிய காலம் இது. அரசாங்கத்தின் ஒவ்வொரு அசைவுகளும் நடவடிக்கைகளும் கவனமாக உற்றுநோக்கப்பட வேண்டும். கபட நோக்கில் மேற்கொள்ளப்படக்கூடிய விடயங்கள் பற்றி உங்களது மக்கள் பிரதிநிதிகள் ஊடாகவோ அல்லது எமக்கு நேரடியாகவோ அறியத்தரும் பட்சத்தில் அவ்வாறான நிகழ்வுகளை தடுத்து நிறுத்துவதற்கு அல்லது வெளிநாடுகளுக்கு படம் பிடித்துக் காட்டுவதற்கு ஏற்ற நடவடிக்கைகளை எம்மால் முன்னெடுக்க முடியும் என்றார்.