நல்லாட்சி என்ற போர்வையில் தற்போதைய அரசாங்கம் நாட்டினுள் பாதாள குழுவினரை கொண்டு வந்து மக்கள் வாழ முடியாத சூழலை உருவாக்கியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.
காலி பத்தேகம பிரதேசத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டபின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;
தற்போதைய அரசாங்கம் மக்களை மேலும் மேலும் அழுத்தத்திற்கு உள்ளாக்கும் செயற்பாடுகளையே மேற் கொண்டு வருகின்றது. இன்று 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் கூட வருமான வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 2 ரூபாவிற்கும் தற்போதைய அரசாங்கம் வரி அறவிடுகின்றது.
இந்த நாட்டில் பாதாள உலகக் குழுவை இல்லாமல் செய்த ஆட்சியை இல்லாமல் செய்துவிட்டது. தற்போதைய அரசாங்கம் பாதாள உலகக் குழுவை நாட்டினுள் கொண்டு வந்து மக்கள் வாழ முடியாத சூழலை உருவாக்கியுள்ளது. இதனால் அம்மா, மகன் இறக்கின்றனர் பரம்பரையே காவுகொள்ளப்படுகிறது.
இவ்வாறான ஒரு யுகம் இதுவரை இருந்ததில்லை. இதற்கு பொலிஸாரும் உரிய நடவடிக்கைகளும் மேற்கொள்வதாக தெரியவில்லை, பொலிஸ் மா அதிபர் சட்டத்தை அமுல்படுத்துகின்றோம் என்று கூறி வருகின்ற போதும் எதுவும் நடக்கவில்லை.
இதேவேளை இரத்மலானையில் சுட்டுக் கொல்லப்பட்ட தங்கள் கட்சியின் மாநகர சபை உறுப்பினர் ரஞ்சன் டி சில்வாவின் உடலுக்கு இறுதி அஞ்சலி தெரிவித்த அவரின் வீட்டுக்கு சனிக்கிழமை இரவு சென்ற மகிந்த ராஜபக்ஷ பின்னர் அங்கு ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில்;
தற்போது போதைப் பொருள் கடத்தல்காரர்கள் சுதந்திரமாக செயற்படுகின்றனர்.
அவர்களிடம் பணம் உள்ளது. பலம் உள்ளது. பொலிஸ் அதிகாரிகள் உள்ளனர் . இது தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்பட வேண்டும். பொலிஸ் மா அதிபர் சட்டம் அமுல் படுத்தப்படுவதாகக் கூறிக் கொண்டே இருப்பது போதாது. மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் வழங்கப்படவும் வேண்டும்.
நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு இல்லையென்றால் நாட்டில் என்ன நடக்கின்றது? இங்கு கொல்லப்பட்டவர் சர்வதேச கிரிக்கெட் வீரரின் தந்தை. எனவே இவ்விடயம் நாளை சர்வதேசத்திற்கு செல்லும். எனவே நாட்டிற்கு அபகீர்த்தி ஏற்படவாய்ப்புள்ளது.
இது தொடர்பில் தற்போதைய அரசாங்கம் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நாட்டு மக்களின் பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் முழு பொறுப்புடன் செயற்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.