எங்களின் முன்னால் இடுப்பில் கட்டப்பட்டிருந்த ஐந்து குண்டுகளுடன் மட்டும் சென்றுகொண்டிருந்த சுடரிடம் “என்ன குண்டோட தனிய வெளிக்கிட்டுட்டியள்” என்று கேட்க “இந்தக் குண்டு மட்டும் அவசரத்துக்குக் காணும் தானே”என்று மிகச்சாதாரணமாகச் சொல்லி முடித்தான்.
பெரும் அதிர்வுகளால் குலுங்கிக் கொண்டிருக்கும் இந்தக் களத்தை எதிர்கொள்ளும்; போராளிகளின் வலிமையை இந்தப் போராளியின் செயற்பாடு எங்களிற்கு உணர்த்தியது. இவனின் கதையைக் கேட்டபடி எங்களிற்குள் சிரித்துக்கொள்ளத் திரும்பிப் பார்த்தவன் “ஏதும் சிக்கல் எங்கன்ட பெடியள் உடன வந்திடுவாங்கள்” என்றான். நகர்வு அகழிக் குள்ளால் நகரும் போது ஓரிடத்தில் நின்றுவிட்ட சுடர்ரோன் முன்னரங்க மறைப்பு வேலிப்பக்கம் திரும்பிப் பார்த்தான். ஏதும் சிக்கலாய் இருக்குமோ என்று சிந்தி;த்துக் கொண்ட நாங்கள் “என்ன சிக்கலா” என்றோம். “அப்பிடி ஒண்டும் இல்லை” என்று பதில் கூறிய சுடர் “அண்ண இந்த இடம் ஒரு முக்கியமான இடம்” என்றான்.
“ஏன் இதில உங்களிற்கு நெருக்கமான நண்பர்கள்; யாராவது வீரச்சாவோ” என்று சற்றுத் தயக்கத்துடன் கேட்டோம். “சீ அப்பிடி இல்லை இது நாங்கள் எதிர்பார்க்கிற பாதை”என்றான். இராணுவ நடவடிக்கையை படையினர் எந்த வழிகளால் ஆரம்பிக்கலாம் என்ற முன்னெச்சரிக்கையை அவர்களிடம் நிறையவே இருக்கிறது. இராணுவ உடைப்புப் பாதைகள் பற்றிக் கூறிக்கொண்டிருக திடீரென எங்கள் முன்னால் ஒரு குரல் “என்ன மச்சான் சினைப்பர் இந்தப் பக்கம்” என்றவாறு எங்களைத் திசை திருப்பியது. திடீரென நிமிர்ந்து பார்த்தோம்.
எங்களின் முன்னால் நெத்தி முட்டாக துப்பாக்கியுடன் போராளி ஒருவன் வந்து நின்றான். அரைக் காற்சட்டையுடனும் வட்டக் களுத்து ரீசேட்டுடனும் நெஞ்சில் துப்பாக்கி ரவைகளைத் தாங்கியபடி கையில் ரீ-56 துப்பாக்கியுடன் நின்றான். இந்தப் போராளியின் அன்பான அழைப்பின் போதுதான் எங்களிற்கு முன்னால் குண்டுகளுடன் வந்து கொண்டிருந்த போராளி சினைப்பர் அணியைச் சேர்ந்தவன் என்பது தெரிந்தது. “வள்ளுவன் வணக்கம் மச்சான்” என்றவன் “நித்திலன் அண்ணான்ர இடத்தில ஒரு வேலையாய் வந்து நிண்டனான் அப்ப அவர் இவையோட அனுப்பி விட்டார் அதுதான்” என்றான். கனிந்த முகத்துடன் போர்முனையின் நகர்வகழிக்குள் நின்று கொண்டிருந்த வள்ளுவன் எங்களிற்கும் “வணக்கம் சொல்லியபடி சரி வாங்கோ எங்கண்ட பொயின்றுக்க போவம்” என்றபடி தனது பயணத்தை இடையில் நிறுத்தி எங்களுடன் பயணிக்கத் தொடங்கினான். எங்களின் முன்னால் சென்று கொண்டிருந்த வள்ளுவன் திடீரென தனது பயணத்தை நிறுத்தி விட்டு “அண்ண” என்றான்.
“என்னப்பா ஏதும் பிரச்சனையா?”என்று கேட்க “சீ…. ஓண்டும் இல்லை இதில அடிக்கடி சினைப் பண்ணுறவன் கவனம் குனிஞ்சு கொண்டு வேகமாய் வாங்கோ”என்றான். கதைப் பிராக்கிலும் இந்தப் போராளிகள் காரியத்தில் கண்ணாய் இருக்கிறார்கள் என்பதை வள்ளுவனின் பேச்சு உணரவைத்தது. நாங்களும் அவன் கூறியதைப் போலவே விரைவாய் அந்தச் சினைப்பர் எச்சரிக்கைப் பகுதியைக் கடந்து காப்பரணுக்குள் நுழைந்தோம். அங்கு நின்ற போராளிகள் அனைவரும் எங்களைச் சிரித்தபடி வரவேற்க நாங்களும் அவர்களை மகிழ்வுடன் தழுவிக் கொண்டோம்.
உயிர் குடிக்கும் களத்தில் போராளிகளின் உற்சாகம் எங்களிற்கு மேலும் வேகத்தை தந்து கொண்டிருந்தது. போராளிகளை ஒவ்வொருவராய் அவதானித்துக் கொண்டிருந்தோம். வள்ளுவன் திடீரென “சோலையன் என்ன மாதிரி என்று தொடங்கியவன் சற்று இடைவெளியின் பின் “கறுப்பனைக் கூட்டிக்கொண்டு வாவன்” என்று சொல்லியபடி எங்களைப் பர்த்தான். “பிரச்சனை இல்லை ஓவர் விளங்கீட்டுது. உடன கிடைக்கக் கூடியமாதிரி ஒழுங்கு செய்யிறன் வேற ஏதும் இருக்கோ” என்றான். வள்ளுவன் “இல்லை” என்று கூற “அப்பிடி எண்டால் சரி நன்றி அவுட்” என்று அவன் வோக்கியில் கதைப்பது போல காப்பரணின் அடுத்த பக்கம் நின்று சொல்லிக் கொண்டிருந்தான்.
அந்தக் காப்பரணில் சோலையன் இருப்பதால் காப்பரண் சோலைபோலக் குதூகலித்துக் கொண்டிருந்தது. அந்தக் காப்பரணில் இருக்கின்ற போது முகமாலைக் களத்தில் நிற்கிறோம் என்ற சிந்தனை எள்ளளவில்க் கூட எங்களிற்கு வந்து விட வில்லை. அவ்வளவிற்குக் கலகலப்பாக அந்தக் காப்பரணைச் சோலையன் வைத்திருந்தான். அந்தப் போராளிகள் “கறுப்பனைக் கொண்டுவாடாப்பா” என்று எதைச் சொல்லியிருப்பார்கள் என்பது எங்களிற்குப் புரிந்துவிடவில்லை. சரி வரட்டும் பார்த்துக் கொள்வோம் என்று மனதிற்குள் நினைத்த படி “என்ன மாதிரி லையின் போகுது” என்ற கேள்வியைப் போட அனைவரும் சேர்ந்து “லையின் ஒரு பிரச்சனையும் இல்லை அண்ண இப்ப எங்களுக்குச் சண்டை தான் தேவப்படுகுது” என்றார்கள்.
“என்ன எல்லா பொயின்ரிலையும் இதத்தான் சொல்லுறியள் எல்லாரும் பாடமாக்கி வைச்சிருக்கிறியளோ” என்றோம். “பாடமாக்கி வைச்சிருக்கிறமோ இஞ்ச நிண்டு பாத்தால்த் தான் தெரியும் அவன் செய்யிற வேலைக்கு என்ன செய்யிறது எண்டுறது தெரியும்”என்றார்கள். இதற்கிடையில் வோக்கியில் கொமாண்ட் பண்ணுபவன் போல வள்ளுவனுடன் கதைத்துக் கொண்டிருந்த சோலையன் தேனீருடன் எங்களின் முன்னால் வந்து நின்றான். சோலையன் தேனீருடன் எங்களின் முன்னால் வந்து நின்ற விதம் ஒரு வீட்டில் இருப்பதைப் போன்ற உணர்வை எங்களிற்கு ஏற்படுத்தியிருந்தது. அங்கிருந்த அனைத்துப் போராளிகளிற்கும் ஒரு தட்டில்; தேனீரை அடுக்கிய படி எங்களின் முன்னால் அவன் வந்து நின்றது எங்களுக்கு ஒரு வித பூரிப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. களமுனையில் தட்டில் வைத்துத் தேனீர் தருவார்கள் என்பதைச் சற்றும் எதிர்பார்க்காத நாங்கள் ஆச்சரியத்தில் உறைந்து போனோம்.
தட்டுடன்; நின்ற சோலையன் “தண்ணி நல்லாய்க் கொதிச்சிட்டுது அதுதான் சரியாய்ச் சுடுறான் பறவாயில்ல. சமாளிச்சுக் குடியுங்கோ” என்றான். ‘கறுப்பன்’ என்பது அவர்களின் ‘பிளேன்ரிக்’ ‘கோட்’ என்றவிசயம் எங்களிற்கு அப்போது தான் புரிந்துகொண்டது. அதனால் நாங்கள் “அட இதையே கறுப்பன் எண்ட நீங்கள்” என்று சொல்ல எல்லோரும் சிரித்தார்கள். இப்படியே அந்தப் போராளிகளின் கறுப்பனை மெதுவாக வாயில் வைக்க அதன் சுவை அருமையாக இருந்தது. “கறுப்பன் அந்த மாதிரி இருக்குது”என்று கூற “எங்கண்ட சோலை போட்டால் இப்பிடித்தான்” இருக்கும் என்றான் காப்பரணில் இருந்த போராளி ஒருவன்.
“கறுப்பன் அயிற்றம் என்ன மாதிரி எண்டு கொண்டு சோலையிட்டத்தான் எல்லாரும் வருவாங்கள். அந்தளவுக்கு சோலை பிளேன்ரில பேமஸ் ஆகிட்டான்” என்று சோலையின் பிசகாத பிளேன்ரிப் பெருமையைச் சொல்லி முடித்தான் வள்ளுவன். ஒதிய மரத்தின் கீழ் அமைந்திருந்த காப்பரணிற்குள் இதமான காற்று வீசிக்கொண்டிருக்க உடல் பூரித்துவிட சோலையின் ‘கறுப்பன்’ நாவின் சுவையைத் தட்டிக் கொண்டிருந்தான். “பிறகு என்ன மாதிரி சோலை” என்று நாங்கள் கூற சோலை கறுத்த இளமையான முகத்துடன் எங்களைப் பார்த்துச் சிரித்து விட்டு “பிளேன்ரி குடிக்கத்தான் வேணும் ஆனால் நெடுகலும் முகமாலையில இருந்து குடிக்க ஏலாது அண்ண. கொஞ்சம் எண்டாலும் முன்னுக்குப் போய்க் குடிச்சால் தானே இன்னும் நல்லாய் இருக்கும்”என்று கூறி விட்டு எங்களைப் பார்த்தான் சோலை.
அப்போது தான் சோலையின் தவிப்பு எங்களிற்குப் புரிந்து கொண்டது. திடீரென கையில் கட்டியிருந்த மணிக்கூட்டைப் பார்க்க நேரம் மாலையாகி விட்டது என்பதை சொல்லிக்கொண்டது. அப்போது தான் இன்றைய பொழுது எப்படிக் கடந்தது என்பது எங்களிற்கு ஒரு மர்மமாக இருந்தது. களமுனையில் காவல் வேலிகளாக நிற்கும் போராளிகளின் உணர்வுகளுடன் ஒன்றித்த எங்களிற்கு அவர்கள் அந்தக் களமே அதிரும் எதிரியின் எறிகணைகளிற்குள் இருந்து எப்படித் தப்பிக்கிறார்கள் என்பதைப் போல பொழுது கழிந்தது கூடப் புதிராகவேதான் இருந்தது.
காப்பரணில் இருந்து போராளிகளுடன் கதைத்துக் கொண்டிருந்த நாங்கள் சுடும்; ஓட்டைப்பக்கம்; சென்றோம். அங்கு சோலையின் கறுப்பணை ஒழுங்கு படுத்தும் வேலையில் இருந்த துடிப்பான போராளி ஒருவன் சுடும் ஓட்டையின் ஊடாக எதிரியின் திசையை நோக்கி உன்னிப்பாக அவதானிப்பவணைப் போலிருந்தான். “என்னமாதிரி ஆமி வாறானே” என்று கேட்க சீ…அவன் எங்கறது”என்றவன் எங்களுடன் மிகவும் வேகமாக நெருங்கிவிட்டான். “நாங்களும் வந்ததுக்கு எப்ப எண்டாலும் வருவான் எண்டு பாக்கிறம் ஆனால் எங்க அவன் தலைக்கறுப்பைக் கூடக்காட்டுறான் இல்லை” என்று தனது ஆதங்கத்தையும் சொல்லி முடித்தான்.
“இதுக்குள்ளால நாங்களும் பார்க்கலாமா?” என்று அவனிடம் கேட்க “கவனம் வெளியால முகத்தக்காட்டாமல் பாருங்கோ” என்றான். “ஏன் வெளியால முகம் காட்டினால் அடிப்பானோ” என்று எங்களிற்குள் எழுந்த கேள்வியை அவனிடம் கேட்;க “இல்லை அவன்ர பொயின்ரில சென்றீக்கு நிண்ட ஆமிக்காறங்கள் ரெண்டு பேர சுடும் ஓட்டைக்குள்ளால பாத்து எங்கண்ட சினைப்பர்க் காறங்கள் போட்டுட்டாங்கள் அதுதான் அவனும் அப்பிடி அடிச்சுவிட்டாலும் கவனமாய் பாருங்கோ” என்றான் கண்ணியமாக. பார்ப்பவர்களிற்கு மிகவும் சிறிய தோற்றத்தை வெளிப்படுத்தும் இவன் மிகவும் நிதானமானவனாய் இருந்தான். “அவன்ர பொயின்ருக்குள்ள நிண்டவங்களுக்கோ சினைப்பரால போட்டவங்கள்…?” என்று அதனை உறுதி செய்து கொள்வதற்காய் திரும்பவும் கேட்டோம்.
“ஓம் அண்ண ஒரு நாளில ரெண்டு ஆமிக்காறங்களப் போட்;டவங்கள்” என்றான் திரும்பவும். அந்தப் போராளியுடன் கதைத்த படியே காப்பரணின் சுடும் ஓட்டைப்பகுதியால் எதிரியின் பக்கம் பார்த்தோம். வெறும் நாயுண்ணிப் பற்றைகள் மட்டுமே எங்களிற்குத் தெரிந்தன. இதுக்குள்ளால என்னத்தைப் பாக்கிறாங்கள் என்று மனதிற்குள் நினைக்க அவனுக்குத் தும்மல் வந்தது போல “என்ன இதுக்கால என்னத்தப் பாக்கிறம் எண்டு நினைக்கிறியள் போல” என்று அச்சொட்டாகக் கேட்டுவிட்டான். “எப்பிடி கறைக்ராப் பிடிச்சியள்” என்று கேட்க அவன் சிரித்தபடி நாங்களும் இஞ்ச வரேக்க இப்பிடித்தான் நினைச்சம் அதுதான்” என்றான்.
“பாக்கிறதுக்குக் காடு மாதிரித்தான் இருக்குது. ஆனால் பெடியள் நாயுண்ணிப் பத்தையின்ர அசைவை வைச்சே எல்லாத்தையும் சொல்லுவாங்கள்” என்றவன் முன்பொருநாள் இந்தப் பத்தைக்குள் நடந்த பண்டிக் கதையைச் சொல்லி முடித்தான். அவன் கூறி முடிப்பதற்கிடையில் வேறொரு போராளி துப்பாக்கியுடன் வந்து “இன்னருவி நீ அங்கால இருந்து கதை” என்றான். நாங்களும் இன்னருவியுடன் கதைத்தபடி காப்பரணின் தங்ககத்திற்குள் வந்து அமர்ந்து கொண்டோம்.
தொடரும்…..
தாரகம்