புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த வருட இறுதிக்குள் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க முடியும் என நம்பிக்கை வெளியிட்டதாகவும் தாமதமானது குறித்து இந்திய பிரதமருடன் கலந்துரையாடியதாகவும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறியுள்ளார்.
சர்வதேச வெசாக் தின கொண்டாடங்களில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்திருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நேற்றிரவு இலங்கையில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.
அதற்கு முன்னர் விமான நிலையத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை இந்திய பிரதமர் சந்தித்தார்.
நாட்டில் வாழும் சகல மக்களுக்கு ஏற்றுக்கொள்ள கூடிய அரசியலமைப்புச் சட்டத்தை மிக விரைவாக உருவாக்க வேண்டும் என்ற அவசியத்தை இந்திய பிரதமருக்கு தெளிவுப்படுத்தியதாகவும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
அர்த்தமுள்ள அதிகார பகிர்வு அவசியம் என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் போது கருத்து வெளியிட்டுள்ள இந்திய பிரதமர், புதிய அரசியலமைப்புச் சட்டம் குறித்த எதிர்பார்ப்புடன் இந்தியா செயற்படும் என கூறியுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்துடன் இது பற்றி பேசியுள்ளதாகவும் இந்திய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இலங்கையின் தமிழ் மக்களுக்கு வழங்கி வரும் தலைமை தொடர்பான இந்திய பிரதமர் பாராட்டியதாகவும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.