ஆவணப்படுத்தலென்பது வரலாற்றுரீதியில் முக்கியமானதும், செயற்படுத்தப்படவேண்டியதுமாக முனைப்புப்பெற்ற சூழலில் தனது வாழ்நாட்பணியாக ஈழத்தமிழர்களின் நூல்களைப் பட்டியலிடும் தலையாய பணியினை நூலகவியலாளர் என்.செல்வராஜா லண்டனிலிருந்து தனிமனித முயற்சியாக மேற்கொண்டு வருகின்றார்.
இவ்வரிய செயற்பாட்டை உய்த்துணரும்போது அதற்குப் பின்னே இருக்கின்ற அவரது பாரிய உழைப்பையும், விருப்பையும், அர்ப்பணிப்பையும் நாம் ஒவ்வொருவரும் கண்டுகொள்ளலாம்.
“நூல்தேட்டம்’ என்கின்ற பெயரில் பன்னிரு தொகுதி நூல்கள் இதுவரை வெளிவந்து அங்கு யாவுமாக 12000 நூல்களை நூலாசிரியர் பார்வையிட்டுக் குறிப்பெடுத்து அவற்றைப் பதிவு செய்துள்ளார். அதன் தளர்வுறாத தொடர்ச்சியாகத் தற்போது 13ஆவது தொகுதியைப் பூர்த்திசெய்யும் முனைப்பில் செயற்பட்டுவருகின்றார்.
யாழ்ப்பாண நூலகம் ஒரு வரலாற்றுத் தொகுப்பு, ஈழத்தின் சிறப்பு மலர்களுக்கான வழிகாட்டி, ஈழத்தமிழரின் போர்க்காலம், வேரொடி விழுதெறிந்து, தேடலே வாழ்க்கையாய், மலேசியாவில் தமிழ்ப் பார்வையும் பதிவும், ஈழநாடு, ஒரு ஆலமரத்தின் கதை, ஈழத்தின் தமிழ் வெளியீட்டுப் பெருவெளி, நூலகர் கைந்நூல் என 48இற்கும் அதிகமான நூல்களை எமக்கு இதுவரை தந்திருக்கிறார்.
இவைதவிர பல நூல்களுக்கான பதிப்பாசிரியராகவும், தொகுப்பாசிரியராகவும் விளங்குகின்றார். இவரது படைப்பாக்கங்களை விரும்பிப் பெற்றுப் பிரசுரிக்காத ஊடகங்கள் இல்லையெனலாம். இன்றளவில் வெளிவந்த ஈழத்தின் ஒரேயொரு தமிழ் நூலகவியல்துறைக்கான சஞ்சிகையான நூலகவியல் காலாண்டிதழை ஏழாண்டுகள் தொடர்ச்சியாக ஈழத்தில் வெளியிட்டுவந்தவர்.
என்.செல்வராஜா “பயில்தொறும் நூல்நயம்’ போன்ற பண்புடையவர். அந்தப் பண்பு யாவரையும் அனுசரித்துச் செல்லும் பான்மையினால் எங்கெல்லாம் நூல்கள் இருக்கின்றதோ அங்கெல்லாம் சலிக்காமல் சென்று தேடுவாரற்றுக் கிடக்கும் நூல்களைப் பொறுக்கியெடுத்து அவற்றிற்குத் தக்க அங்கீகாரம் கொடுத்துத் தனது நூல்தேட்டத்தில் பதிவிடுகின்றார்.
உ.வே.சாமிநாதையர், சி.வை.தாமோதரம்பிள்ளை போன்றோர் பழந்தமிழ் இலக்கியங்களை நாம் கற்பதற்கு எவ்வாறு தேடியெடுத்து அச்சிட்டுத் தந்தார்களோ அவ்வாறே இவரும் எம்மவர்கள் ஆக்கிய நூல்களை எமக்கு இனங்காட்டும் வகையில் இப்பணியை மிகுந்த சவால்களுக்கு மத்தியில் செயற்படுத்தி வருகின்றார்.
மக்களின் நலனிற்காக எந்தவிதச் சுயநலமுமின்றிச் செயற்படுவதையே “பணி’ என்ற சொல்லால் எம்முன்னோர் அழைத்து வந்தமையால், அச்சொல்லாலேயே நூல்களைத் தேடிச் சேகரித்துப் பதிவாக்கும் இவரது நடவடிக்கையைக் குறிப்பிடுவது சாலச் சிறந்ததெனலாம். “என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்று வாழுமிவரை நாம் போற்றித் தாங்குவதும் எம் பணியேயாகும்.
பாரதிதாசன் “மூலையிலோர் சிறுநூலும் புதுநூலாயின் மடிதனிலே சுமந்துவந்து தருதல் வேண்டும்’ எனச் சொன்னது போன்று ஈழத்தின் குக்கிராமமொன்றில் வெளிவந்த நூலாக இருந்தாலும் அதனைச் சர்வதேசங்களில் உள்ளோரும் பார்வையிடவும் அது பற்றிய தேடலை மேலும் ஊக்குவிக்கவும் இவரது அயராத முயற்சி பயன்தருகின்றது. ஏனெனில் இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் வேற்று நாட்டினரும் வேற்று இனத்தவரும் வேற்றுமொழி பேசுவோரும் ஈழத்தமிழ் இலக்கியத்தை அதனது சுவையை நாடுவதற்கு, அதனை ஆய்வு செய்வதற்கு, இத்தகைய முயற்சிகள் பெரிதும் உதவும்.
தமிழ் செம்மொழியாக்கப்பட்ட பின்னணியில் இன்று இம்மொழி சம்பந்தமான ஆய்வுகள் உலகப் பல்கலைக்கழக மட்டத்தில் முனைப்புப்பெற்று வருவதனை தற்போது ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் பிற மேலைத்தேய நாடுகளிலும் எம்மால் அவதானிக்க முடிகின்றது. அவ்வகையில் எதிர்காலத்தில் தமிழர்கள் மட்டுமல்ல ஏனையோரும் ஈழத் தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தை ஆய்வுசெய்ய முயல்கின்றபோது “நூல்தேட்டம்’ அவர்களுக்குப் பேருதவியாக விளங்குமென்பதில் சந்தேகமில்லை.
எனவே ஈழத்தமிழ் ஆக்க இலக்கிய கர்த்தாக்கள் தமது படைப்புகளைத் தாமே முன்வந்து இவரிடம் கையளிப்பார்களேயானால் அவை காலங்கடந்தும் பதிவுகளாக நிலைநிற்கும். இதனைப் பலரும் உணர்ந்து கொள்வதில்லை. தனியொருவர் தனது இலாபத்திற்காக இதனை செய்கின்றாரெனப் பெறுமதியுணராது எண்ணி விடுகின்றனர். ஆனால் பல நூற்றாண்டுகள் கடந்துநின்று பின்னோக்கிப் பார்ப்போமானால் இதன் பயன் தங்கமெனப் பிரகாசித்து நிற்கும்.
ஈழத்தின் தமிழ்க் கவிதையியல்: ஒரு நூல்விபரப்பட்டியல்.
மேற்கண்ட பின்புலத்தில் நின்று நூலகவியலாளர் என்.செல்வராஜா அவர்களின் அண்மைக்கால வெளியீடாக, ஈழத்துக் கவிதைப் பரப்பை ஆவணப்படுத்தும் வகையில் வெளிவந்துள்ள ‘ஈழத்தின் தமிழ்க் கவிதையியல் ஒரு நூல்விபரப் பட்டியல் என்கின்ற நூல் அமைந்திருக்கின்றது. 1040 பக்கங்கள், ஒன்றரைக் கிலோ எடை என அமைந்துள்ள நூலின் “கனதி அதன் உள்ளடக்கத்துக்கும் பொருந்துகின்றது.
தமிழ்நாட்டுச் சங்க இலக்கியங்களுக்கு ஈடான இலக்கியப் பயில்வு ஈழத்திலும் இருந்திருக்கலாமென்ற ஊகம் பலகாலமாக இருக்கின்ற அதே வேளை, யாழ்ப்பாண மன்னர்கள் “சரஸ்வதி பண்டாரகம் எனும் நூல்நிலையத்தை நிறுவி நூல்களைப் பேணினரென்றும், அதனைப் போர்த்துக்கேயர் வந்து தீயிட்டுக் கொளுத்தினரென்றும் செவிவழிச் செய்தி எம்மடையே இருக்கின்றது.
இது உண்மையெனில் நாம் காலாதிகாலமாக இழந்தயையெண்ணிக் கலங்குவதைத் தவிர எம்மால் எதுவுமே செய்திட முடியாது. இந்நிலை இன்றும் தொடர்கின்றதே என்ற மனக்கவலையை நூலகவியலாளரின் இவ்வரிய நூல் எமது முகத்தில் அறைந்து, எமக்கு எச்சரிக்கை உணர்வினைத் தட்டியெழுப்புகின்றது.
ஈழத்தமிழ்ச் சமூகத்தை அவர்களது பொருளாதார பண்பாட்டு அரசியல் நிலையில் நின்று விளங்கிக்கொள்வதற்கு அவர்களது கவிதைப் பாரம்பரிய வரலாறு உறுதுணை செய்யும். நாட்டார் பாடல்கள், நாடகமேடைப் பாடல்கள், வாய்மொழியில் இருந்து செம்மொழியாக்கப்பட்ட அரைவாய்ப் பாடல்கள், வித்துவக் கவிதைகள், நவீன கவிதைகள் வரை இப்பண்பைக் காணலாம்.
இவை எப்பொழுது எச்சந்தர்ப்பத்தில் தோன்றின என்பது பற்றிய ஆய்வும், அவை கூறும் பாடுபொருளும் அறிவதற்கு இந்நூல் ஆய்வுரீதியில் உதவி செய்தாலும் முழுமையாக அனைத்து நூல்களையும் உள்வாங்கியிருக்குமெனச் சொல்லமுடியாதுள்ளது. உதாரணமாகப் பொன்னாலைக் கிருஷ்ணபிள்ளையின் அரைவாய் இலக்கியமெனக் கொள்ளக்கூடிய பதினான்குக்கு மேற்பட்ட கவிதைநூல்களிலே ஒரேயொரு நூலாகிய “நமற்கார நவீன நாகரிக நவரசக் கீதங்கள்’ எனும் நூல் மட்டுமே இங்கு பதிவிடப்பட்டுள்ளது.
இது போன்று பல நூற்றுக்கணக்கான புத்தகங்கள் பதிவுக்குட்படுத்தப்படாமல் கிராமங்கள் தோறும், அங்குள்ள மக்களிடையே கவனிப்பாரின்றிக் கிடக்கக்கூடும். அல்லது அழிந்து அடையாளமே மறைந்திருக்கக்கூடும். அவை பற்றிய அறிதலை, தேவையை இந்நூல் எமக்கு அழுத்தமாகச் சொல்கின்றது.
இத்தொகுதியில் ஈழத்தின் கவிதை நூல்கள் ஆண்டுவாரியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. கற்போருக்கு அல்லது வாசிப்போருக்கு “வாழைப்பழத்தை உரித்து வாயில் வைப்பது’ போன்றதான இச்செயற்பாட்டை “அழுகின்ற பிள்ளை பால் குடிக்கும்’ என்பதாக தேவையறிந்தோர் பயன்படுத்திக்கொள்வர்.
இவ்வகையில் முதலாவது ஈழத்துக் கவிதை நூலாக பதினெட்டாம் நூற்றாண்டில் (1755) வெளிவந்த தாவீதின் சங்கீதங்கள் எனும் நூலைப் பதிவிட்டுள்ளார். அடுத்த நூலாக பத்தொன்பதாம் நூற்றாண்டில் (1827), வெளிவந்த ஆசௌச விதி எனும் நூல் அமைகின்றது.
ஆரம்பத்தில் பல ஆண்டுகளுக்கு ஒன்று இரண்டு என அச்சுவாகனமேறிவந்த கவிதை நூல்கள் காலக்கிரமத்தில் பணபலமும், தொழில்நுட்பமும், அச்சக வசதிகளும் அதிகரிக்க ஆண்டிற்கு பத்திற்கும் மேற்பட்ட நூல்களின் வருகையைக் கொண்டிருந்திருக்கின்றது. இந்த வளர்ச்சித் தன்மையின் ஊடாகக் கவிதைப் பாடுபொருள் பல கோணங்களில் விரிவுபட்டுச் செல்வதையும் அவதானிக்க முடிகின்றது.
குறிப்பாகச் சைவம், கிறிஸ்தவம், இஸ்லாமியம் சார்ந்த மத இலக்கியங்கள் தத்தம் மதக்கருத்துக்களை மக்களிடையே பரப்புவதற்கு ஆரம்பத்தில் பாரம்பரியமான தமிழ்ச் செய்யுள் வடிவத்தையே கையாண்டுள்ளன. இதன் காரணமாக புராணம், தூது, ஆற்றுப்படை, பள்ளு, அம்மானை, கும்மி, கோவை, பிள்ளைத்தமிழ் போன்ற இலக்கிய வடிவங்கள் ஈழத்தில் தோற்றம் பெற்றிருக்கின்றன.
பின்னர் இவ்விலக்கிய வடிவங்களினூடாகச் சமூகக் கருத்துக்களும் சொல்லப்பட்டிருக்கின்றன. காலத்திற்குக் காலம் இதன் கவிப்பொருளும் பாடல் வடிவமும், பாடுதளமும் எவ்வாறு வளர்ச்சிபெற்றுச் செல்கின்றதென்பதனை இந்த நூலை மட்டும் வைத்துக்கொண்டே அவதானிக்க முடிகின்றதென்றால் இந்நூலின் முக்கியத்துவத்தை கற்றுணர்ந்தோர் புரிந்துகொள்வர்.
நூலினைப் பதிப்பிக்கின்றபோது கவனத்தில் கொள்ளவேண்டிய குறிப்புகளும் அவற்றின் பெறுமானமும் தெளிவுபடுத்தும் வகையில் ஆசிரியர், ஆண்டுகள் தெரியாத (குறிப்பிடப்பட்டிராத) நூல்களின் விபரத்தைத் தந்திருப்பதுடன், பெறுமதிமிக்க நூல்கள் வெளிவந்தும் தற்போது எமக்குக் கையில் கிடைக்க வழியில்லையென்கின்ற துர்ப்பாக்கிய நிலையையும் குறிப்பிட்டிருக்கின்றார்.
இத்தகைய சூழலில் ஓர் ஆய்வை வரலாற்றுரீதியில் நோக்குகின்ற ஆய்வாளனுக்கு ஏற்படுகின்ற தர்மசங்கடத்தை உணர்ந்துகொள்வதுடன் தாயக மண்ணில் ஈழத்துத் தமிழ் நூல்களுக்கானதொரு ஆவணக்காப்பகத்தின் நிர்மாணிப்பின் அவசியத்தையும் எமக்கான கடமை என்னவென்பதையும் இந்நூலின் வழியாக விளக்கிக்கொள்ள முடிகின்றது.
1948இல் நாடு சுதந்திரமடைந்த பின்னர் மக்களிடையே எற்பட்ட எழுச்சி, சமூக மாற்றம் என்பன கவிதைப் பாடுபொருளிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தியிருப்பதுடன், பரிசோதனை முயற்சிகளை செய்யவும் காலப்போக்கில் சந்தர்ப்பம் தந்திருக்கிறது.
அத்துடன் தமிழகக் கவிஞர்களுடனும் ஈழத்துத் தமிழ்க் கவிஞர்கள் நட்புறவைப் பேணத் தொடங்கியதுடன் ஆரோக்கியமான புரிதல்களையும் பேணலாயினர். 1960களின் பின்னர் ஈழத்தில் கவிஞர்கள் பலர் தோன்றி கவிதைத்துறை மண்சார்ந்து முனைப்புடன் வளர உத்வேகம் கொடுத்துள்ளனர்.
கவியரங்கம் என்கின்ற அரங்கு சார்ந்த ஆற்றுகைக்கும் முக்கியத்துவம் தந்து கவி கேட்கும் பாரம்பரியத்தினை இக்காலக் கவிஞர்கள் ஏற்படுத்தியிருந்தனர். இதன் காரணமாக கவிதையினை வாசிப்போர் மட்டுமல்ல, அதனை எழுதியோனே அதனை நேரில் வாசித்தளிக்கையில் அவற்றைக் கேட்டு இரசிக்கின்ற இரசனையாளர்களைக் கொண்டதாகத் தமிழ்ச் சமூகம் உருவாகியது.
இக்காலங்களிலேயே கவிதை, நெடுங்கவிதை, காவியம், கவிதா நிகழ்வு போன்ற கவிதை வடிவங்கள் பன்முக நிலைகளில் வளர்ச்சிபெற்றிருக்கின்றன. இவற்றிற்கான போட்டிகளும் நடைபெற்றுத் தங்கப் பதக்கம், பொற்கிழி, சான்றிதழ் என்பன வெற்றியாளர்களுக்கு வழங்குகின்ற நிகழ்வுகள் நடந்தேறி, வீச்சுடன் கவிதைத்துறை வளர்ச்சியடைந்தது. இலங்கை அரசு சாகித்திய மண்டலப்பரிசு எனும் பெயரில் பரிசுகள் வழங்கிக் கலைஞர்களை கௌரவிக்கத் தொடங்கியதை இக்காலகட்டத்தில் காணலாம்.
முழுமையாகப் பார்க்கின்ற போது இந்நூலில் மரபுக்கவிதை, வித்துவக் கவிதை, நவீன கவிதை, மொழிபெயர்ப்புக் கவிதை, குழந்தைப் பாடல், மதம் சார்ந்த கவிதை, பெண் கவிதை, போராட்டக் கவிதை, மலையகக் கவிதை, புலம்பெயர் கவிதை போன்றவற்றின் வளர்ச்சித் தன்மைகளையும் உற்றுநோக்க முடிகின்றது.
இன்னுமொரு முக்கிய விடயமாக ஊர் தோறும் அமைந்திருக்கின்ற சைவ ஆலயங்கள் மீது பாடப்பட்டு வந்திருக்கின்ற தல புராணங்கள் பெருவாரியாக இங்கு பதிவிடப்பட்டிருப்பது, அவை பற்றியதான ஆய்வை, ஊர் சார்ந்தநிலையிலும், வாழ்வியல் சார்ந்தநிலையிலும் பார்க்கவைக்கின்றது.
1976இன் பின்னர் புதுக்கவிதை எழுதுவோர் எழுச்சிபெறுகின்றனர். இன விடுதலைப்போராட்டம் பல இளம் கவிஞர்களைத் தம் அனுபவத் தளத்தில் நின்று கவியாக்க வைத்தமையால் அந்த உணர்வுடனும் வீச்சுடனும் கவிதை வளர்ச்சி காணத் தொடங்கியது. 1983களுடன் விடுதலை இயக்கங்களின் செயற்பாட்டு விரிவாக்கமும் போராளிக் கவிஞர்களின் உருவாக்கத்திற்குக் காரணமாக அமைந்தது.
மேலும் இந்நூலை வைத்துக்கொண்டு ஈழத்தின் கவிதைத் துறையில் சில மைல்கற்களை அடையாளம்காண முடிகின்றது.
1. இருபதாம் நூற்றாண்டின் முதல் கவிதை நூல்புலவராற்றுப்படை (1903)
2. குழந்தை இலக்கியம் பிள்ளைப்பாட்டு (1935)
3. மொழிபெயர்ப்பு நூல் ஈனக் ஆடன் (1939)
4. பெண் கவிஞர் முல்லைக்காடு (1957) என்னும் நூலில் ஜீவா எனும் புனைபெயரில் பரிமளா இராஜதுரை, யாழ்ப்பாணன், ராஜபாரதி, ஆகியோருடன் இணைந்து கவிதை எழுதியுள்ளார்.
5. முற்றத்து மல்லிகை 1810 முதல் 1964 வரையான காலப்பகுதியில் எழுதப்பட்ட முஸ்லிம் புலவர்கள் ஐம்பத்தேழு பேரின் கவிதைகள் ஒரே நூலில் தொகுக்கப்பட்டுள்ளது.
6.இனப்போராட்டம் சார்ந்த நாட்டார் பாடல்வாழ்விழந்தோர் புலம்பல் ஒப்பாரி (1975). அரசியல்சார்ந்த கருத்துக்கள் இதுவரை பேசப்பட்டு வந்தாலும் இது முக்கியத்துவமுடையதாகின்றது.
7. பெண் கவிஞர்களின் தொகுப்பு பாலர் பா அமுதம் (1985) யாழ். இந்து மகளிர் கல்லூரி மாணவிகளின் கவிதைகளை உள்ளடக்கியது.
8. புலம்பெயர் ஈழத் தமிழர்களின் இரண்டாம் தலைமுறைக் கவிஞர்களின் தொகுப்பு நாங்கள் (2012).
இவ்வாறு பல அவதானிப்புகளை நோக்க முடிகின்றது. தனிநபர் கவிதைப் படைப்புகள் மட்டுமன்றி, பல கவிஞர்களின் கவிதைகள் தாங்கிய தொகுப்பு நூல்கள் பலவற்றையும் இற்றைவரை பார்க்க முடிவதுடன் அவை ஏதோவொன்றை மையப்படுத்தித் தொகுக்கப்பட்டுள்ளதையும் பிரித்துணர முடிகின்றது.
இந்நூலாசிரியர் திரு என்.செல்வராஜா நூல்களைப் பதிவிடும்போது அவை பற்றிய நூலியல்சார்ந்த சிறு குறிப்பைத் தருவதுடன், அது பதிக்கப்பட்ட அச்சகம், ஆண்டு என்பவற்றையும் குறிப்பிடுவதனால் ஈழத்தில் ஒரு காலகட்டத்தில் காணப்பட்ட அச்சகங்களின் பட்டியலையும் எம்மால் இந்நூல்வழியாகப் பெறமுடிகின்றது. இவ்வாறாக இந்நூலை மட்டும் வைத்துக்கொண்டு, பல கோணங்களில் ஆய்வுப் பரப்பை விஸ்தரித்துச் செல்லக்கூடிய சந்தர்ப்பம் வாய்த்திருக்கின்றது.
இவை யாவற்றையும் பார்க்கும்போது ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாறு என்பது இதுவரை காலமும் ஆங்காங்கே செய்யப்பட்டு வந்தாலும் அவற்றை முழுமையுறு பார்வையில் நோக்க முடியாதிருந்தது. அதனைத் தவிர்த்து ஈழத்துக் கவிதைத்துறை எம் கைக்குள் வந்த உணர்வை இத்தொகுப்பு தந்துள்ளதென்றே கூறலாம். இந்நூலின்; இரண்டாவது தொகுதியின் வருகையின் எதிர்பார்ப்பும் எமக்குள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சலிப்புத் தராத பதிவுகளாகச் சுவாரசியம் நிறைந்தவையாக, கவிதைத்துறையின் வரலாற்றை, அதன் படிமுறை வளர்ச்சியை பார்வையிடுவதாக ஒவ்வொரு நூலின் பதிவும் வாசிப்போரை ஈர்த்தெடுப்பது நூலின் இன்னொரு சிறப்பம்சமாகின்றது.
பரந்த பார்வையில் மிக நுணுக்கமாக நூல்களைப் பதிவுசெய்கின்ற நூலாசிரியர் என்.செல்வராஜா அவர்களைக் காலம் நிச்சயம் கொண்டாடி மகிழும் அதே சமயம் இலக்கியத் தேடலில் நாட்டமுடைய ஒவ்வொருவரும் இப்பணியின் முக்கியத்துவமுணர்ந்து அவருக்குப் பக்கபலம் சேர்ப்பது ஈழத்து இலக்கியத் துறைக்குச் செய்கின்ற பாரிய பங்களிப்பாக அமையும் என்பதனை உணர்ந்து நாம் ஒவ்வொருவரும் செயற்படவேண்டும் என்பதே எனது பேரவாவாகும்.