ஒன்பது வருடங்களுக்கு முன்னர் இராணுவ ரீதியாக விடுதலைப்புலிகளைத் தோற்கடித்து, அந்த அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை இல்லாதொழித்துள்ளதாக அரச தரப்பினர் கூறுகின்றனர். ஆயினும் இல்லாமல் செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் பெயரைப் பயன்படுத்தி, பயங்கரவாதம் தலையெடுக்கின்றது. நாட்டில் பிரிவினைவாதம் உயிர்த்தெழுகின்றது என அச்சமூட்டி அரசியல் செய்கின்ற மோசமான அரசியல் பிற்போக்கு இப்போது தீவிரமடைந்திருக்கின்றது.
குறிப்பாக ஜனநாயகத்தை மீண்டும் நிலைநிறுத்தி, ஊழல்களை ஒழித்து, தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தவும், குடும்ப அரசியலுக்கும் எதேச்சதிகாரத்திற்கும் வழிசமைத்துள்ள நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறைமையில் மாற்றத்தைக் கொண்டு வரவும், இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற உறுதி மொழியோடு ஆட்சிபீடம் ஏறிய நல்லாட்சி அரசாங்கத்தில் இத்தனைய ஒரு நிலைமை உருவாகியிருப்பது துரதிஸ்டவசமானது என்றே கூற வேண்டும்.
இனவாத அரசியல் போக்கு தீவிரமாகத் தலையெடுத்துள்ள இப்போதைய நிலைமையானது, நல்லாட்சி அரசாங்கத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த தமிழ் மக்கள், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட சிறுபான்மை அரசியல் கட்சிகள் மற்றும் சில அரசியல் தரப்புக்கள் மட்டுமன்றி பொது அமைப்புக்களும்கூட இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.
இந்த நிலைமையானது, அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் எத்தகைய திருப்புமுனையை நாட்டில் ஏற்படுத்தப் போகின்றதோ என்ற அச்ச நிலைமையை உருவாக்கி இருப்பதையே உணர முடிகின்றது, நல்லாட்சி அரசாங்கம் தனது தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை உறுதியாக முன்னெடுக்கத் தவறியுள்ளது மட்டுமல்லாமல் நாட்டின் பொருளாதாரம் முன்னைய அரசாங்கங்களிலும் பார்க்க மேசாமான வீழ்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கின்ற ஒரு நிலைமையும் உருவாகி இருக்கின்றது.
அரசியல் நிலைமைகள் மோசமடைவதற்கு பௌத்த மேலாதிக்க அரசியல் போக்கு வலுவாகத் தலைதூக்கி இருப்பது முக்கிய காரணமாகத் திகழ்கின்றது. பௌத்த சிங்கள தேசியமே இப்போது நாட்டில் முதன்மை பெற்றிருக்கின்றது. முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் அடிப்படை மதவாதப் போக்கில் செயற்பட்டு வருகின்றார்கள் என்று குற்றம் சாட்டி, அவர்களின் அடிப்படைவாதப் போக்கைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று குரல் எழுப்புகின்ற சிங்கள பௌத்த தேசியவாதிகளே, இன்றைய இனவாத அரசியல் செயற்பாடுகளில் அடிப்படைவாதிகளாக மாறியிருக்கின்றார்கள்.
பௌத்த சிங்களவர்களுக்கே இந்த நாடு சொந்தமானது. ஏனைய மதத்தவர்கள் பேரின மதவாதிகளினதும், பேரின அரசியல்வாதிகளினதும் சொற்களுக்குக் கட்டுப்பட்டே செயற்பட வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டிருப்பதைக் காண முடிகின்றது. இந்த நடவடிக்கைகள் பல்வேறு தளங்களில் பல்வேறு வடிவங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. திட்டமிட்டச் செயற்பாடுகளாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன என்பது அரசியல் ஆய்வாளர்களின் கரிசனையும் கவலமையுமாக இருக்கின்றன.
இறுதி யுத்தத்தின்போது இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களுக்குப் பொறுப்பு கூற வேண்டும் என்ற ஐநாவினதும், சர்வதேசத்தினதும் குரலுக்கு நல்லாட்சி அரசாங்கம் இணக்கப்பாட்டுடன் செவிசாய்த்திருக்கின்றது. ஐநா மனித உரிமைப் பேரவையில் கொண்டு வரப்பட்டுள்ள பொறுப்பு கூறலுக்கான தீர்மானங்கள் இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. ஆனால், பொறுப்பு கூறும் விடயத்தில் எந்த அளவுக்கு இழுத்தத்து காலத்தைக் கடத்த முடியுமோ அந்த அளவுக்கு தாமதமான நடவடிக்கைகளையே அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
சர்வதேசத்தின் அழுத்தங்களும்சரி, பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்ற சிறுபான்மை தேசிய இனத்தவராகிய தமிழர் தரப்பின் அழுத்தங்களும்சரி, அரசாங்கத்தை வளைக்க முடியவில்லை. அரசாங்கத்தின் இழுத்தடிக்கின்ற போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தவும் முடியவில்லை. அரசாங்கம் தான் நினைத்தவாறே செயற்பட்டு வருகின்றது.
சிறுபான்மை தேசிய இன மக்களின் எதிர்பார்ப்புக்கும் ஓரளவு அரசியல் ரீதியான நம்பிக்கைக்கும் பாத்திரமாக இருந்த நல்லாட்சி அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குடும்ப அங்கத்தவர்களைக் கொண்ட அரசியல் குழுவினரிடம் எதிர்பாராத விதமாக அரசியல் ரீதியாக சிக்கிக்கொண்டிருப்பதே அதன் செயல் வல்லமை அற்ற தன்மைக்குக் காரணமாகத் தெரிகின்றது.
ஆட்சி மாற்றத்தை உருவாக்கிய 2015 ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியைத் தழுவிய ராஜபக்ச குழுவினர் மீண்டும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக பகீரத முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர். இன்னும் அந்த முயற்சி தொடர்கின்றது. நல்லாட்சி அரசாங்கம் சற்றும் எதிர்பாராத வகையில் நடந்து முடிந்த உள்ளுராட்சித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுனவிடம் படுதோல்வி அடைந்ததையடுத்தே, நல்லாட்சி அரசாங்கத் தரப்பினரும் இனவாத அரசியல் போக்கில் சரிந்திருப்பதைக் காண முடிகின்றது.
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னரும், மகிந்த ராஜபக்ச குழுவினர் தமது இனவாத அரசியல் போக்கின் மூலம் தங்களை அதிகாரத்தில் இருந்து தூக்கிவிடக் கூடும் என்ற அச்சநிலையிலேயே நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தனர்.
ஆட்சி அதிகாரம் பறிபோய்விடப் போகின்றதே என்ற அரசியல் எண்ணத்தின் விளிம்பில் செயற்பட்ட இந்த அரசியல் தவைர்கள் இருவரும் தமது தேர்தல் காலத்து வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான செயற்பாடுகளில் மந்தகதியிலான கவனத்தையே செலுத்தி வந்தனர். யுத்ததத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் இந்த அரசாங்கத்தை உருவாக்குவதற்குப் பேராதரவு வழங்கியிருந்தனர். தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இன்னும் ஒரு படி மேலே சென்று இந்த அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியிருந்தது.
அதுமட்டுமல்ல. தமிழ் மக்கள் சார்ந்த செயற்பாடுகளும், தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் மற்றும் அரசியல் தீரவு உள்ளிட்ட நீண்ட நாளைய பிரச்சினைகள் என்பவற்றைத் தீர்ப்பதற்காக முன்னெடுக்கின்ற செற்பாடுகள் ஆட்சி அதகாரத்தைக் கைப்பற்றுவதற்காகத் துடித்துக் கொண்டிருக்கின்ற மகிந்த ராஜபக்ச அணியினருடைய இனவாத அரசியல் பிரசாரங்களுக்கு துணை போய்விடக் கூடாது என்பதிலும், அதன் ஊடாக அவர்கள் தலையெடுத்து, நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஊறு விளைந்துவிடக் கூடாது என்பதிலும் திவிர அக்கறை செலுத்திச் செயற்பட்டு வந்தது. தமிழ் மக்களுடைய நாளாந்தப் பிரச்சினைகளுக்கோ அல்லது அரசியல் தீர்வு உள்ளிட்ட மிக முக்கியமான பிரச்சினைகளுக்கோ தீர்வு காண்பதற்காக அரசாங்கத்தின் மீது அழுத்தத்தைப் பிரயோகிப்பதையும் கூட்டமைப்பு முடிந்த அளவில் தவிர்த்து வந்தது என்றே கூற வேண்டும்.
இந்த நிலையில்தான் நல்லாட்சி அரசாங்கம் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றச் செயற்பாடுகளுக்கு பொறுப்பு கூறுவதாக சர்வதேசத்திற்கும் ஐநூ மனித உரிமைப் பேரவைக்கும் உறுதியளித்திருந்த போதிலும், மகிந்த ராஜபக்ச தலைமையிலான எதிரணியினராகிய பொதுஜன பெரமுனவில் ஒன்றிணைந்துள்ள சிங்கள பௌத்த தேசியவாதிகள் போர்க்குற்றச் செயற்பாடுகளோ அல்லது மனித உரிமை மீறல்களோ இடம்பெறவில்லை என்று சிங்கள மக்கள் மத்தியில் அடித்துக் கூறி பெரும் பிரசாரத்தை முன்னெடுத்திருந்தனர்.
அத்துடன் பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து நாட்டை மீட்டுள்ள வீர கதாநாயகர்களாகிய இராணுவத்தினரை சர்வதேச குற்றவாளிக்கூண்டில் நிறுத்துவதற்கான முயற்சிகளில் நல்லாட்சி அரசாங்கம் தமிழ்த் தரப்புடன் இணைந்து முயற்சித்து வருகின்றது என்ற இனவாதப் பிரசாரத்தை முன்னெடுத்திருந்தனர். உள்ளுராட்சித் தேர்தலில் அரசாங்கத் தரப்பினர் படுதோல்வி அடைவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.
விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் வேகமாக முன்னேறி வருகின்ற இன்றைய அரசியல் சூழலில், உலக சமூகங்கள் மனித உரிமைகளை மேம்படுத்தவதிலும் பன்முகத்தன்மையைக் கடைப்பிடிப்பதிலும், சகிப்புத் தன்மையுடன் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை வளர்த்தெடுப்பதிலும் தீவிர கவனம் செலுத்திச் செயற்பட்டு வருகின்றன. நவீன முறையிலான இராஜதந்திரத்தின் ஊடாக பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன.
அதேநேரம், பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு சாத்வீகப் போராட்டத்தின் மூலம் அழுத்தங்களைப் பிரயோகிக்கின்ற உத்தியை ஏற்றுச் செயற்படுகின்றன. ஆனால் இலங்கையில் அத்தகைய பண்பட்ட, நாகரிகமான அரசியல் போக்கைக் காண முடியவில்லை. இத வெறியும், இனவாத வெறியும் நிறைந்த சமூகமாக பேரினவாதிகள் தமது சமூகத்தை வழிநடத்தி சிறுபான்மை தேசிய இனமக்களைப் பல்வேற வடிவங்களில் அடக்கி ஒடுக்குவதிலேயே கவனம் செலுத்தி வருகின்றனர். இது பிற்போக்கான அரசியல் செயற்பாடு என்பதை அவர்கள் உணர மறுக்கின்றார்கள். இதற்கு சிங்கள பௌத்த தீவிரவாத அரசியல் அமைப்புக்களும் உறுதுணையாகச் செயற்பட்டு வருகின்றன.
இத்தகைய பின்னணியிலேதான் நல்லாட்சி அரசாங்கமும் மதச்சார்பற்ற இனச்சார்பற்ற பன்முகத்தன்மையுடைய அரசியல் வழிகளைப் பின்பற்றுவதற்குப் பதிலாக எதிரணியினருடைய அரசியல் வழியில் இனவாத அரசியல் முன்னெடுப்புக்களில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கின்றது. இரண்டாவது நாடாளுமன்ற தொடர் அமர்வின் உரையிலும், உரையிலும், மே 18 ஆம் திகதி இடம்பெற்ற போர் வெற்றி நிகழ்;வுதின உரையிலும் நல்லாட்சி அரசாங்கம் இத்தகைய அரசியல் போக்கில் கவனம் செலுத்தியிருப்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிப்படுத்தியிருந்தார் என்பத கவனத்திற்கு உரியது.
வரலாற்று வாழ்வுரிமை, பிறப்புரிமை என்பவற்றின் அடிப்படையில் இந்த நாட்டின் தேசிய இனமாகத் திகழ்கின்ற சிறுபான்மையினரை பேரினவாதம் என்ற மேலாண்மையின் அடிப்படையில் அடக்கி ஒடுக்குவதற்கு மேற்கொள்ளப்படுகின்ற ஓர் அரசியல் உத்தியாக இனவாத கைக்கொள்ளப்பட்டிருக்கின்றது. அதற்கு நாட்டில் நிலவிய பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பின்னர், யுத்தத்தில் கொல்லப்பட்ட பொதுமக்களை நினைவுகூர்வது, அடிப்படை உரிமை சார்ந்த செயற்பாடாக இருந்தபோதிலும், அது பயங்கரவாதத்திற்கு உயிரூட்டுவதற்கான முயற்சியாகவே அரச தரப்பினரால் நோக்கப்படுகின்றது.
யுத்தத்தில் இறந்தவர்களை மே 18 ஆம் திகதி நினைவுகூர்வதற்கும், யுத்தத்தில் கொல்லப்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர்களை நவம்பர் மாதம் 27 ஆம் திகதி அவர்களுடைய குடும்ப உறவினர்கள் நினைவுகூர்வதற்கும் முன்னைய அரசாங்க காலத்தில் இறுக்கமான தடை விதிக்கப்பட்டிருந்தது.
நவம்பர் 27 ஆம் திகதியை விடுதலைப்புலிகள் யுத்தத்தில் உயிர் நீத்த தமது உறுப்பினர்களை உணர்வுபூர்வமான நினைவுகூர்ந்து வந்தனர். அன்றைய தினம் அவர்களுக்காக சுடரேற்றி மலர்கள் தூவி அஞ்சலி செலுத்துவது அவர்களுடைய வழக்கமாக இருந்தது. ஆனால் யுத்தம் முடிவடைந்த பின்னர், அந்த தினத்தில் ஆலயங்களில் கூட விளக்கேற்றக் கூடாது சுடரேற்றக் கூடாது என்ற கடுமையான தடை உத்தரவு நடைமுறையில் இருந்தது.
அன்றைய தினம் யாரேனும் தமது உத்தரவை மீறிச் செயற்படுகின்றார்களா என்பதை இராணுவத்தினரும் இராணுவப் புலனாய்வாளர்களம் சுற்றுக்காவல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு உன்னிப்பாகக் கண்காணித்து வந்தனர். இதனால் அன்றைய தினத்தை உள்ளடக்கி அதற்கு முன்தினமும், அதற்கு அடுத்த நாளும்கூட தீபம் ஏற்றப்படாமல் ஆலயங்கள் இருண்டு கிடந்தன.
நல்லாட்சி அரசாங்கத்தில் இந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டிருந்தது. மாவீரர் தினத்தில் இறந்தவர்களுக்கு ஒன்றுகூடவும் சுடரேற்றி மலர்கள் தூவி பலரும் ஒன்றிணைந்து அஞ்சலி செலுத்துவதற்கான இடமளிக்கப்பட்டிருந்தது. அதேபோன்று முள்ளிவாய்க்கால் படுகொலையின் நினைவுதினமாகிய மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் மக்கள் ஒன்றுகூடி தமது உறவினர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இம்முறை மே 18 ஆம் திகதி அவ்வாறான அனுமதி அளிக்கப்பட்டிருந்த போதிலும், அந்த நினைவுதின நிகழ்வு அழிக்கப்பட்ட விடுதலைப்புலிகளுக்கு உயிரூட்டி அவர்கள் மீள் எழுச்சி பெறுவதற்கான செயற்பாடாகவே முன்னெடுக்கப்பட்டது என்ற இனவாதப் பிரசாரம் நாட்டின் தென்பகுதியில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வும், வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆற்றிய உரையும், விடுதலைப்புலிகளின் மீள் எழுச்சிக்கான நடவடிக்கையாக இனவாத ரீதியில் தீவிரமாகப் பிரசாரப்படுத்தப்பட்டிருக்கின்றது.
சிறுபான்மை தேசிய இனத்தவராகிய தமிழ் மக்களின் ஆதரவில் ஆட்சி அமைத்துள்ள நல்லாட்சி அரசாங்கம் அந்த மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் நாட்டில் நல்லிணக்கத்தையும், ஐக்கியத்தையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதற்குப் பதிலாக ஆட்சியில் நிலைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக இனவாதப் போக்கில் சரிந்து செல்வது ஆரோக்கியமான நகர்வாகத் தெரியவில்லை.
சிங்கள மக்களின் வாக்கு வங்கியை இலக்கு வைத்து, அதனைப் பலப்படுத்தும் நோக்கத்தில் முன்னெடுக்கப்படுகின்ற இனவாத அரசியல் போக்கானது னஜநாயக மறுப்பு நடவடிக்கையாக மாறிவிடக் கூடிய ஆபத்து இருக்கின்றது.
ஜனநாயகத்தைக் கட்டியெழுப்பி ஊழல்களுக்கு முடிவுகட்டி பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப் போவதாக உறுதியளித்து மக்கள் ஆணையைப் பெற்றள்ள அரசாங்கம் அந்த ஆணையை நிறைவேற்றத் தயங்குவதும் அந்த நோக்கத்தில் இருந்து திசைமாறிச் செல்வதும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துவதற்கே வழி வகுக்கும்.
நல்லாட்சி புரிவதாக உறுதியளித்து சர்வதேசத்தின் ஆதரவையும் சிறுபான்மை இன மக்களின் பெரும்பான்மை ஆதரவையும், பெரும்பான்மை மக்களின் சிறுபான்மையான ஆதரவையும் பெற்ற அரசாங்கம் தனது தேர்தல் கால ஆணையை நிறைவேற்றத் தவறினால், சர்வதேச அழுத்தங்களுக்கும் உள்ளுர் அழுத்தங்களுக்கும் ஆளாக நேரிடும் என்பதிலும் சந்தேகமில்லை.
ஆட்சிக் காலம் முடிவடைவதற்கு இன்னும் மீதமுள்ள சுமார் ஒன்றரை வருட காலத்தில் அரசாங்கம் தன்னால் இயன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து மக்களின் ஆதரவைப் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும். வெறுமனே இனவாத பிரசாரங்களின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள எதிரணியினருக்குப் பதிலடி கொடுக்கவும், அவர்களுடைய பாணியில் மக்களின் ஆதரவைப் பெறவதற்கு முயற்சிப்பதும். ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய நாட்டின் இரண்டு தலைவர்களினதும் எதிர்கால அரசியல் இருப்புக்கு ஆரோக்கியமாக இருக்கமாட்டாது.
நாட்டின் எதிர்கால நன்மைக்கும் நல்லதாக இருக்க முடியாது.
Related