நான் தான் யாழ்ப்பாண பொது நூலகத்தின் வாயிலில் இருக்கும் சரஸ்வதி சிலை பேசுகிறேன்.
என்னை கட்டாயம் உங்களிற்கு ஞாபகம் இருக்கும், ஏனென்றால் யாழ்ப்பாணம் வாற சிங்கள சுற்றுலா பயணிகள் தொட்டு வெளிநாட்டிலிருந்து வாற எங்கட சனம் வரை, எனக்கு முன்னால் நின்றுதான் செல்ஃபியும் படமும் எடுத்து பேஸ்புக்கில் போடுறவை.
நான் இந்த இடத்தில் உட்கார்ந்து பல வருடங்கள் ஆகிவிட்டது, உண்மையாக சொல்லப் போனால் இன்றோடு 58 ஆண்டுகளாகிறது. 1933ல் K.M. செல்லப்பா என்பவரின் முயற்சியால், முதலில் அவரது இல்லத்திலும் பின்னர் யாழ் ஆஸ்பத்திரி வீதியிலும் யாழ்ப்பாண பொது நூலகம் இயங்கத் தொடங்கியதாம். செல்லப்பா அந்தக் காலத்தில் வெளியான “இந்து சாதனம்” பத்திரிகையில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டு பொது நூலகம் நடாத்த நிதியும் புத்தகங்களும் சேர்த்ததாக கதைப்பார்கள்.
1981 ஜூன் முதலாம் திகதியை நாங்கள் மறக்கவே ஏலாது, நீங்கள் மறந்தாலும் என்னால் மறக்க முடியாது. அன்றைக்கு அந்த அறுவான்கள் செய்த அநியாயம் எங்கள் இனத்தின் அறிவுக் கருவூலத்தையே நாசமாக்கிய நாள். எங்கள் வரலாற்றில் இடம்பிடித்த ஒரு சோக நாள். தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் ஒரு முக்கியமான நாள் ஜூன் 1, 1981. அந்த நாளில் தான் சிங்கள இனவாதம் நிர்வாண கோலம் கொண்டு, வெறியாட்டம் ஆடி, அரிய புத்தகங்களோடு ஒரு அருமையான நூலகத்தை எரித்து தனது தமிழினப் படுகொலை நோக்கத்தை பறையறிவித்த நாள்.
நானறிந்த மட்டில் மாதம் 25 ரூபாய்கள் வாடகைக் கட்டிடத்தில் இயங்கிய யாழ்ப்பாண பொது நூலகத்தை 1935ல் யாழ்ப்பாண நகர சபை (Urban council) பொறுப்பேற்றது. 1949ல் யாழ்ப்பாண நகர சபை இலங்கையின் இரண்டாவது மாநகர சபையாக (Municipal council) தரமுயரத்தப்பட, மேயராக பதவியேற்ற சாம் சபாபதி, நூலகத்திற்கென தனியான கட்டிடம் கட்ட வேண்டும் என்ற திட்டத்தை முன்மொழிந்து செயலிலும் இறங்கினார்.
1981 மே மாதம் இறுதியிலிருந்து யாழ்ப்பாணத்தில் ஒரு பதற்ற நிலை உருவாகியிருந்ததை, நூலகத்திற்கு வந்து போவார் கதைப்பதிலிருந்து அறிந்து கொண்டேன். தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்தி சபைக்கான தேர்தலை யாழ்ப்பாணத்தில் நடாத்திக் காட்ட, இரு சிங்கள இனவெறி அமைச்சர்களான காமினி திசநாயக்காவும் சிறில் மத்தியூவும், காடையர்களும் குண்டர்களும் அடங்கிய பரிவாரங்களுடன் வந்து, யாழ்ப்பாணத்தில் முகாமிட்டிருக்கிறார்கள் என்று சனம் கதைத்தது காதில் விழுந்தது. தமிழர்களிற்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும் என்ற வெறியோடு திசநாயக்கவும் மத்தியூவும் யாழ்ப்பாணத்திற்கு வந்திறங்கினாங்களாம்.
1950களில் மேயர் சாம் சபாபதி மற்றும் புனித பற்றிக் கல்லூரியின் Rector Fr Longன் இணைத்தலைமையில் யாழ்ப்பாண பொது நூலத்திற்கான கட்டிடம் அமைக்க நிதி திரட்டும் முயற்சி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. கப்பல் மூலம் தனது சொந்த நாடான அயர்லாந்து வரை சென்று நிதி திரட்டினாராம் Fr Long. அமெரிக்க தூதவராலயம் யாழ்ப்பாணத்தில் வைத்திருந்த நூலகத்தை மூடி, நூல்களை யாழ்ப்பாண நூலகத்திற்கு அன்பளிப்பு செய்தது. அமெரிக்க அரசும், இந்திய அரசும், கிறிஸ்தவ திருச்சபைகளும், இந்து ஆலயங்களும் நிதிப்பங்களிக்க கட்டிடப் பணிகள் வலு மும்மரகாக நடந்தன.
தென்னிலங்கையிலிருந்து வந்திருந்த அமைச்சர்களின் காடையர்கள் துரையப்பா விளையாட்டரங்கில் தான் தங்கியிருப்பதை நான் இருந்த இடத்திலிருந்து பார்க்கக் கூடியதாகவிருந்தது. காமினியும் சிறிலும், பிரதான வீதி முடக்கிலிருந்த யாழ் வாடி வீட்டில் (Jaffna Guest House) தங்கினவையாம். இரவில் துரையப்பா விளையாட்டரங்கில், ஒரே குடியும் கும்மாளமும்தான். காடையரோடு ஆமிக்காரன்களும் பொலிஸும் சேர்ந்து யாழ் நகரத்தில் அட்டகாசம் செய்து விட்டு, இரவில் கூத்தாடுவதை இரண்டு நாட்களாக பார்த்துக் கொண்டிருந்தேன்.
மார்ச் 29, 1954ல் யாழ் நூலகத்திற்கான அடிக்கல்லை யாழ்ப்பாண மேயர் சாம் சபாபதியோடு Fr Longம் அமெரிக்க, பிரித்தானிய இந்திய உயர்ஸதானிகர்கள் இட்ட நாளில், அமெரிக்க அரசு 22,000 அமெரிக்க டொலர்களை (அன்றைய பெறுமதியில் ரூ 104,000) நன்கொடை செய்ததாம். அன்றைய மதராஸ் அரசின் தலைமை கட்டிடக் கலைஞரான VM நரசிம்மன், திராவிட கட்டிட பாரம்பரியத்திற்கமைய வடிவமைத்த கட்டிட வரைபிற்கமைய கட்டப்பட்ட கம்பீரமான யாழ்ப்பாண பொது நூலக கட்டிடம், ஒக்டோபர் 11, 1959ல், அன்றைய யாழ்ப்பாண மேயரான அல்பிரட் துரையப்பாவால் திறந்து வைக்கப்பட்டபோதுதான், என்னையும் இந்த இடத்தில் நிர்மாணித்தார்கள்.
ஜூன் 1, 1981 அன்று, துரையப்பா விளையாட்டரங்க பக்க மதிலிற்கு மேலால் பாய்ந்து வந்த சிங்கள காடையர்கள், Fr Longன் சிலையைத் தாண்டி, என்னருகில் வரும்போது இரவு பத்து மணியிருக்கும். பொது நூலக வாயிலில் காவல் கடமையிலிருந்த காவலாளி அரை நித்திரையிலிருந்தான். சிங்களத்தில் கத்தி சிரித்துக் கொண்டு வந்த கூட்டத்தை பார்த்து டோர்ச் அடித்த காவலாளியை, காடையர் கூட்டம் அடித்துக் கலைத்தது. காடையர் கூட்டத்தில் சீருடையணிந்த பொலிஸ்காரன்களும் இருந்ததை அப்பத் தான் கவனித்தேன். காவலாளி சுப்ரமணிய பூங்காப் பக்கம் தலைதெறிக்க ஓட, நிறை வெறியிலிருந்த அறுவான்கள் நூலகத்தின் பிரதான கதவை அடித்து திறந்தார்கள்.
யாழ்ப்பாண நூலகத்தை சர்வதேச தரத்தில் இயங்க வைக்க, டெல்லிப் பல்கலைக்கழக பேராசிரியர் S.K ரங்கனாதனின் சேவையையும், யாழ்ப்பாண மாநகரசபை பெற்றுக் கொண்டதாம். நரசிம்மன் வடிவமைத்த கட்டிட வரைபு நான்கு பகுதிகளைக் கொண்டமைந்திருந்ததாம். நடு மைய கட்டிடத்தில் ஒரு குவிமாடத்தையும் (dome) அதன் இரு புறமும் பின்புறமும் இரு மாடிகளையுடைய கட்டிடத் தொகுதிகளையும் உள்ளடக்கியிருந்ததாம். நிதிப் பற்றாக்குறை காரணமாக, முன்புற கிழக்கு மற்றும் மேற்கு கட்டிடத் தொகுதிகளையும், குவிமாடத்தை உள்ளடக்கிய நடு மைய கட்டித்தையும் மட்டும் தற்பொழுது கட்டுவதாக முடிவெடுக்கப்பட்டதாம். பின்புற மேற்குத் தொகுதி கட்டிடம் கட்டுவதை பிற்போட்டார்களாம்.
முன் கதவை உடைத்து திறந்து கொண்டு உள்ளே நுழைந்த சிங்கள காடையர்களும் பொலிஸ்காரன்களும், புத்தகங்களையும் அரிய ஓலைச் சுவடுகளையும் அள்ளிக் கொண்டு வந்து நடுக் கட்டிட விறாந்தையில் போடுவதை பார்க்க எனக்கு நெஞ்சம் பதைபதைத்தது. கிழக்கு பக்க கட்டித்திலிருந்தும் மேற்குப் பக்க கட்டிடத்திலிருந்தும் ஓடி ஓடி பெறுமதியான புத்தகங்களை அள்ளிக் கொண்டு வந்து கொட்டினார்கள். புத்தகங்களை கொண்டு வந்து கொட்டி என்ன செய்யப் போறாங்கள் என்று நான் ஏங்கி நிற்க, ஒருத்தன் நெருப்புப் பெட்டியை எடுத்து நெருப்பு பற்ற வைத்தான்.
நானறிய யாழ்ப்பாண நூலகத்தில் இருந்த அரிய புத்தகங்களுள், 1660ல் Robert Knox எழுதிய History of Ceylon, யாழ்ப்பாண வரலாற்று நூலான முதலியார் ராஜநாயகத்தின் பண்டைய யாழ்ப்பாணம், தமிழில் முதல் முதலாக வெளிவந்த இலக்கிய கலைக்களஞ்சியமான முத்துத்தம்பிப்பிள்ளையின் அபிதான கோசம், அதன் பின் வந்த சிங்காரவேலு முதலியாரால் தொகுக்கப்பட்ட கலைக்களஞ்சியமான அபிதான சிந்தாமணி, சித்த வைத்தியம் சம்பந்தமான பனையோலையில் எழுதப்பட்ட ஓலைச் சுவடிகள் என்பன இருந்தன. ஆசியக் கண்டத்திலேயே தலைசிறந்த நூலகங்களில் ஒன்றாக யாழ்ப்பாண நூலகம் திகழ்ந்தது. இலங்கைத் தீவில் கல்வியில் தமிழர்கள் அடைந்திருந்த உச்ச நிலையும் சிங்கள இனவெறியர்களின் கண்ணைக் குத்தியிருக்க வேண்டும்.
புத்தகங்களை நெருப்பிட்டு கொளுத்திவிட்டு வெளியே ஓடிவந்த காடையர் கூட்டம், எனக்கு முன்னால் பைலா பாட்டுப் பாடி ஆடத் தொடங்கியது. இருந்தால் போல, கிழக்கு பக்க கட்டிடத்தில் நெருப்பு பிரவாகம் எடுத்தது. காக்கி களுசான் அணிந்த ஒருத்தன் கையில் பெற்றோல் கானோடு கிழக்கு பக்க கட்டிட பக்கத்திலிருந்து மேற்கு பக்கமாக ஓடிய சிறிது நேரத்தில், மேற்குப் பக்க கட்டித்தையும் தீச்சுவாலைகள் சூழத்தொடங்கியது. தீயில் கருகிக் கொண்டிருந்த யாழ் நூலகத்தின் குவிமாடத்தின் கண்களிற்கு, யாழ் வாடி வீட்டு வாசலில் நின்று நூலகம் எரிவதை பார்த்து ரசித்த காமினி திஸநாயக்காவையும் சிறில் மத்தியூவும் தெரிந்திருக்கும்.
1960களிலும் 70களிலும் படிக்கிற பெடி பெட்டைகள் என்னைத் தாண்டி நூலகத்திற்குள் நுழையும் போது மனதாரா வாழ்த்துவேன். அவர்களின் கடின உழைப்பும் என்னுடைய ஆசீர்வாதமும் சேர, அள்ளு கொள்ளையாக கட்டுபெத்தை, பேராதனை, கொழும்பு பல்கலைக்கழகங்களிற்கு என்ஜினியராகவும் டொக்டராகவும் எங்கட பிள்ளைகள் போவினம். பரீட்சையில் சித்தியடைந்த பிள்ளைகளின் பெற்றோர், எனக்கு பொங்கல் காய்ச்சி படையல் செய்வீனம். இன்றைக்கு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. நூலகத்திற்கு படிக்க வாற ஆட்களை விட, நூலகத்தை பார்க்க வாற ஆட்கள் தான் கூடவாக இருக்கீனம். யாழ்ப்பாண மாவட்டமும் கல்வியில் பின்தங்கி, எந்த நோக்கத்திற்காக எதிரி நூலகத்தை எரித்தானோ, அந்த நோக்கத்தை எதிரியை அடைய வைத்து விட்டது.
யாழ்ப்பாண நூலகம் எரிந்ததை தாங்கொண்ணா அதிர்ச்சியில் Fr டேவிட், கொழும்புத்துறையிலிருந்த அவரது செமின்றியில் மாரடைப்பு வந்து இறந்து போனார். 35ற்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருந்த, உலகப்பிரசித்தி பெற்ற மொழியியல் அறிஞரான தனிநாயகம் அடிகாளரின் ஆராய்ச்சிக் களமாக யாழ்ப்பாண நூலகமே திகழ்ந்தது.
எரிந்த நூலகத்திற்கு காவல்காரி போல நான் நிற்க, எரிந்த நூலகத்தை மீண்டும் உடனடியாக கட்டியெழுப்பி, தமிழர்களின் கல்வியை நாசமாக்கும் இனவாதிகளின் எண்ணத்தை நிறைவேற்றக் கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு, அன்றைய யாழ்ப்பாண மேயரான ராஜா விஸ்வநாதனும் மாநகர சபை ஆணையாளர் CVK சிவஞானமும் களமிறங்கினார்கள். அவர்களோடு ஒட்டு மொத்த தமிழினமும் அணிதிரள கட்டிட கலைஞர் VS துரைராஜா, எரிந்த நூலக கட்டிடத்தை அதே போல் மீண்டும் கட்ட, கட்டிட வரைபுகளை வரைய முன்வந்தார். யாழ்ப்பாண நூலகத்தை மீளக் கட்டுவதில் முன்னின்று உழைத்த இன்னுமொருவர் அன்றைய St Patrick கல்லூரியின் Rectorம், 2009ல் வட்டுவாகலில் போராளிகளோடு இணைந்து இராணுவத்திடம் சரணடைந்தது காணாமல் போகடிக்கப்பட்டவருமான, Fr பிரான்ஸிஸ் சேவியர்.
பொதுமக்களிடமும் அரசாங்கத்திடமிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் சேகிரிக்கப்பட்ட நிதியுதவியிலும் புத்தகங்களைக் கொண்டும் யாழ் நூலகம் எரிந்த சாம்பலிலிருந்து மீண்டும்
புத்துயிர் பெற திட்டங்கள் தயாராகின. எரிந்த கிழக்கு மேற்கு கட்டிடங்களை நினைவுச் சின்னங்களாக பேணிக் கொண்டு, நரசிம்மனின் திட்டத்தில் இருந்த மேற்குப் பகுதி கட்டிடத்தை மையமாகக்கொண்டு, பழைய கட்டிடத்தை போல புதிய கட்டடத்தை கட்டிடக் கலைஞர் துரைராஜா வடிவமைத்தார். புதிய கட்டிட வரைபிலிருந்த ஒரு வித்தியாசம், அது மேற்குப் புறமாக, அதாவது முனியப்பர் கோயில் மற்றும் யாழ் கோட்டையை நோக்கி காங்கேசன்துறை வீதிப் பக்கமாக அமைந்திருந்ததே. நானிருந்த இடத்தை மட்டும் அவர்கள் மாற்றவில்லை.
எரிந்த நூலகத்தின் ஓரு பகுதியில், அன்பளிப்பாக கிடைத்த புத்தகங்களைக் கொண்டு, உலக மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10, 1982ல் நூலகம் மீள இயங்கத் தொடங்க நானும் பெருமிதம் அடைந்தேன். புதிய கட்டிட வேலைகள் மளமளவென நடந்து, ஜூன் 4, 1984ல் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்தால் யாழ்ப்பாண பொது நூலகம் மீண்டும் திறக்கப்பட்டது. புதிய கட்டித்தில் மிளிர்ந்த இன்னொரு வித்தியாசம் குவிமாடத்தின் அமைப்பு, யாழ் இசைக்கருவியின் வடிவிலிருந்தது. மீள இயங்கத் தொடங்கிய நூலகத்திற்கு மெல்பேர்ண் தமிழ் சங்கமும் லண்டனிலிருந்து புலம்பெயர் உறவுகளும் புத்தகங்கள் அனுப்பியிருந்தார்கள்.
ஏப்ரல் 10, 1985ல் இயக்கம் யாழ்ப்பாண பொலிஸ் நிலைத்தை தாக்கியதுடன் ஆரம்பமான யாழ் கோட்டை முற்றுகை, யாழ் பொது நூலகத்தையும் என்னையும் யுத்த வலயத்திற்குள் உள்வாங்கியது. துப்பாக்கி ரவைகளும், ஷெல்களும், மோட்டார்களும், விமான குண்டுகளும் எங்களை நாளொரு வண்ணம் தாக்க, நாங்கள் போராடிய எங்கட பெடியளிற்கு காப்பரணானோம்.
இன்னுமொரு இருண்ட காலம் யாழ்ப்பாணத்தைச் சூழ்ந்து கொள்ள, நூலகமும் நானும் தனித்து விடப்பட்டோம். 1996ல் யாழ்ப்பாணம் மீண்டும் ஆமிக்காரன்களால் ஆக்கிரமிக்கப்பட, 1997ல் யாழ் பொது நூலகத்தை மீள கட்டியெழுப்பும் திட்டம் மங்கள சமரவீரவின் வெள்ளைத் தாமரை (சுது நெலும்) அமைப்பால் “book & brick” என்ற தலைப்போடு முன்னெடுக்கப்பட்டது. மங்கள சமரவீரமிடமிருந்து யாழ் நூலக மீள்நிர்மாண திட்டத்தை பொறுப்பேற்ற லக்ஷ்மண் கதிர்காமர், இடிந்து எரிந்த கட்டிடங்களை மீளவும் அதே இடத்தில் அதே மாதிரி கட்டி, முன்னர் நிகழ்ந்த நூலக எரிப்பு சம்பந்தமான அடையாளங்களை அழிப்பதில் முனைப்பாக செயற்பட்டு வெற்றியும் கண்டார்.
இன்னும் யாழ்ப்பாண நூலகம் ஒரு காட்சிப் பொருளாகவும் சுற்றுலா தளமாகவும் மாறி விட்டதோ என்று நினைக்க நினைக்க எனக்கு நெஞ்சு வலிக்கிறது. நூலக எரிப்பு நடந்ததற்கான எந்த வரலாற்றுத் தடங்களும் இல்லாத இடத்தில், வெளிநாட்டு தமிழர்கள் தங்கள் பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு வந்து “this library was burnt with books” என்று விளக்கம் கொடுக்க அந்த மழலைகள் “”why would someone burn a library” என்று கேட்க, எங்கட பழைய தலைமுறை, நாங்கள் ஏன் உயிரையும் வியர்வையையும் உழைப்பையும் விதைத்து விடுதலைக்காக போராடினோம் என்று விளக்கம் சொல்ல தொடங்குவினம்.
என்னைக் கேட்டால், நூலகம் எரிக்கப்பட்டது பற்றிய ஒரு நினைவுச் சின்னம் கட்டாயம் அமைக்கப்பட வேண்டும். வரலாற்றை யாரும் பூசி மொழுக ஏலாது. அதே நேரம், அந்தக் காலத்தில் தமிழர்கள் கல்வியில் அடைந்திருந்த உச்சத்தின் வெளிப்பாடாய் திகழ்ந்த யாழ்ப்பாண பொது நூலகத்தை மீண்டும் கட்டியெழுப்பியது போல், தமிழினம் மீண்டும் கல்வியில் முன்னனிக்கு வரவேண்டும். கல்வி தர வரிசையில் ஏழாம் எட்டாம் இடங்களில் இருக்கும் கிழக்கு மாகாணமும் வடக்கு மாகாணமும் முதலிரு இடங்கள் பிடிக்க வேண்டும். இருபத்தோராவது இடத்தில் இருக்கும் யாழ்ப்பாண மாவட்டமும் பதினேழாவது இடத்தில் இருக்கும் மட்டக்களப்பு மாவட்டமும் முதலிரு மாவட்டங்களாக மிளிர வேண்டும்.
வள்ளுவரின் வரிகளோடு விடை பெறுகிறேன்
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.
(நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்)
அப்ப நான் போய்ட்டு வாறன் என்ன…