யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு என்பது இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு முக்கிய நிகழ்வாகும்.
97000 நூல்களையும், பழைமை வாய்ந்த 1800 ஓலைச் சுவடிகளையும், சஞ்சிகைகளையும் ஒன்று சேர்த்து எரித்துச் சாம்பலாக்கிய பண்பாட்டுப் படுகொலை, 1981 ஆம் ஆண்டு மேமாதம் 31ஆம் திகதியன்று அரங்கேற்றப்பட்டது.
20ம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது. இந்த நூலக எரிப்பு வன்கும்பலில் இலங்கையின் அமைச்சர் காமினி திசாநாயக்கா உட்பட வேறு பல அப்போதைய சிங்கள அரசியல் தலைவர்கள் அடங்கியிருந்தனர்.
தமிழர்களின் கலாச்சாரக் குறியீடுகளை அழிப்பது தமிழர்களை அழிப்பதைக் காட்டிலும் முக்கியமானது – சிங்கள இனவெறியர்களுக்குச் சொல்லித் தரப்பட்ட சித்தாந்தங்களுள் இதுவும் ஒன்று.
அத்தகைய கலாச்சாரக் குறியீடுகளுள் ஒன்று யாழ்ப்பாணம் பொதுமக்கள் நூலகம். இன்னும் சொல்லப்போனால் ஈழத்தமிழர்களின் கல்வியறிவுக்கான ஆதாரப்புள்ளியாக அந்த நூலகத்தைத்தான் சுட்டிக்காட்டுவார்கள். அதனால் தான் இந்த நூலக அழிப்பு…
அழித்தொழிப்பு என்ற கழுகுப் பார்வையில் அலைந்து திரிந்த இனவெறியர்களின் கழுகுக் கண்களில் யாழ்ப்பாணம் பொதுமக்கள் நூலகம் சிக்கியது. இனவெறியர்கள் யாழ் நூலகத்துக்குள் நுழைந்தனர். தடுத்து நிறுத்திய காவலாளியை நெட்டித் தள்ளினர்.
கைவசம் கொண்டுவந்த பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் கொண்டு நூலகத்தின் ஒவ்வொரு பகுதியாகப் பார்த்துப் பார்த்துத் தீவைத்தனர். பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதாகவும் சில சாட்சியங்கள் இருக்கின்றன. நூலகத்தின் மேற்கு மூலை பகுதிதான் முதலில் எரியத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக நூலகத்தின் அடுத்தடுத்த பகுதிகளும் எரியத் தொடங்கின.
நூலகம் எரிகிறது என்றால் புத்தகங்கள் எரிகின்றன என்று அர்த்தம். புத்தகங்கள் எரிகின்றன என்றால் தமிழர்களின் கலாச்சாரக் குறியீடுகள் எரிகின்றன என்று அர்த்தம். செய்தி கேள்விப்பட்ட தமிழர்கள் பதைபதைத்தனர்.
நூலகம் எரிந்துகொண்டிருக்கும் செய்தி மாநகரசபை ஆணையாளர் சிவஞானத்துக்குக் கிடைத்தது. பதறித் துடித்த அவர், உடனடியாக தீயணைப்பு வீரர்களையும் மாநகரசபை ஊழியர்களையும் நூலகத்துக்கு அனுப்பினார். தீயை அணையுங்கள், ஆவணங்களைக் காப்பாற்றுங்கள் என்று உத்தரவிட்டார். அதன்படி நூலகத்தை நெருங்கிய தீயணைப்பு வீரர்களைத் தடுத்து நிறுத்தினர் சிங்கள காவலர்கள். மேலிடத்து உத்தரவு அவர்களை அப்படிச் செய்யவைத்திருந்தது.
நூலகத்தின் ஒவ்வொரு அங்குலமும் அழிந்துகொண்டிருந்தது. நூலகத்துக்குள் சேமித்து வைக்கப்பட்டிருந்த 97000 நூல்கள் கருகிச் சிதைந்தன. மருத்துவம், இலக்கியம், ஜோதிடம் உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த நூல்கள், ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் சாம்பலாகின. கலாநிதி ஆனந்த குமாரசுவாமி நூற்தொகுதி, சி. வன்னியசிங்கம் நூற்தொகுதி, ஐசாக் தம்பையா நூற்தொகுதி, கதிரவேற்பிள்ளை நூற்தொகுதி, அமெரிக்காவில் இருந்து நன்கொடையாக வந்திருந்த நூற்தொகுதிகள் ஆகியன அழிந்து போன பொக்கிஷங்களில் அதிமுக்கியமானவை.
யாழ் நூலகம் எரிக்கப்பட்ட செய்தி தமிழர்களை அதிர்ச்சியில் உறையச் செய்தது. யாழ் நூலக எரிப்பு தமிழர்களின் மனத்தில் ஆற்றமுடியாத வடுக்களை ஏற்படுத்திவிட்டன. அந்த நூலகம் உருவான வரலாறு அப்படிப்பட்டது.
தமிழர்களின் சிந்தனை ஆற்றலை சிதைக்கவும், கல்வி அறிவைக் குலைக்கவும் திட்டமிட்டு அழிக்கப்பட்டது தான் யாழ் நூலகம். தமிழர்களின் அறிவை மழுங்கடிக்கச் செய்யும் செயலாகவே அமைந்தது எனலாம்.
யாழ் நூலக எரிப்பு என்பது வரலாற்றில் அழிக்க முடியாத அத்தியாயங்கள்.