இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகிக்க முடியாதென மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பிற்கு அமைவாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் உள்ளடங்களாக அறுவரின் பதவிகள் பறிபோகும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இரட்டைப் பிரஜாவுரிமை கொண்ட ஒன்றிணைந்த எதிரணியின் கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ள நிலையில், இப்பிரச்சினை அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வர், அமைச்சரவை அந்தஸ்து பெற்ற அமைச்சர் ஒருவர் மற்றும் இராஜாங்க அமைச்சர் ஒருவர் என அறுவரின் நாடாளுமன்ற உறுப்புரிமை நீக்கப்படுவதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதாக கூறப்படுகிறது.
இரட்டை பிரஜாவுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எட்டு பேர் காணப்படுவதாக ஏற்கனவே குறிப்பிட்டிருந்த ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்களது விபரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் குடிவரவு குடியகல்வு திணைக்களத்திடம் கோரியுள்ளார்.
இதேவேளை, கீதா குமாரசிங்கவின் உறுப்புரிமை நீக்கப்படுவதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தினால் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர், குறித்த வெற்றிடத்தை நிரப்புவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
எனினும், மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கீதா குமாரசிங்க மனு தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, குறித்த தீர்ப்பிற்கு எதிர்வரும் 15ஆம் திகதிவரை இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.