வடமாகாணத்தில் முன்னெடுக்கப்படும் இனப்பரம்பலை மாற்றக் கூடிய குடியேற்றங்களை உடனடியாக நிறுத்த அரசிடம் கோரிக்கை விடுக்கவுள்ளது. அத்துடன், திட்டமிட்ட குடியேற்றங்களை ஆராய்வதற்காக 12 பேர் கொண்ட சிறப்புச் செயலணி ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாட்டங்களில் இடம்பெறும் இனப்பரம்பலை மாற்றக் கூடிய வகையிலான குடியேற்றங்கள் தொடர்பான கலந்துரையாடல் திங்கட்கிழமை (04)வடமாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலின் போதே மேற்படி தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
வடமாகாணத்தில் நடைபெறும் அனைத்து குடியேற்ற நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்த வேண்டுமென அரசிடம் வலியுறுத்துவது என
கூட்டத்தில் ஏக மனதாக தீர்மானம் எடுக்கப்பட்டது. இந்த தீர்மானம் தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மகாவலி அமைப்பு அமைச்சர் ஆகியோருக்கு தெரியப்படுத்தப்படும்.
இந்த தீர்மானத்தின் பிரகாரம் வடமாகாண சபை சார்ந்த 8 பேரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நான்கு பேரும் அடங்கிய செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த செயலணியின் முக்கிய நோக்கம் வடமாகாணத்தில் நிலவும் குடியேற்றப் பிரச்சினைகளை முழுமையாக ஆராய்ந்து அவற்றிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமா? சமூக நடவடிக்கைகள் எவ்வாறு தொடர முடியும். மக்களிடையே விழிப்புணர்வுகள் எவ்வாறு ஏற்படுத்த முடியும் போன்ற விடயங்கள் சம்பந்தமாக ஒரு செயற்பாட்டு நிகழ்ச்சித் திட்டத்தினை உருவாக்கி அதனை முழுமையாக முறையாக நடைமுறைப்படுத்தக் கூடிய செயற்திட்டத்தினை வகுத்தல் இந்த செயலணியின் மிக முக்கிய செயற்பாடாக இருக்கும்.
இந்த கலந்துரையாடலில் தமிழ் தேசிய ட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவஞானம் சிறிதரன், சிவமோகன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, வடமாகாண அவைத் தலைவர், வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
சிங்கள குடியேற்றத்திற்கு எதிராக வழக்கு தொடுக்க வேண்டுமென எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா கூறினார். மாகாணசபை உறுப்பினர் ஜெயசேகரமும் அதை வலியுறுத்தினார். ஆனால் அது சரியான தீர்மானமல்ல, வடக்கு கிழக்கு இணைப்பிற்கு எதிராக நீதிமன்றம் வழங்கிய உத்தரவைபோல பாதகமான தீர்ப்புக்களை வழங்கினால் பெரிய சிக்கலாகிவிடும் என கணிசமானவர்கள் அந்த தீர்மானத்தை எதிர்த்தனர்.