இரா.கலைச்செல்வன், தமிழ்ப்பிரபா – படங்கள்: எல்.ராஜேந்திரன், ஏ.சிதம்பரம், ஆர்.எம்.முத்துராஜ், ரா.ராம்குமார்
ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை பிறப்பித்திருக்கிறது தமிழக அரசு. ஆனால் இந்த அரசாணையைப் பெற 13 பேர் உயிரைவிட வேண்டியிருந்தது. ஆயிரக்கணக்கானோர் ரத்தம் சிந்த வேண்டியிருந்தது. அந்தத் துயரக்கதைகள் சொல்வது அரசின் வன்முறையையும் காவல்துறையின் வெறியை யும்தான். கேளுங்கள் இந்தத் துயரக்கதைகளை… இவை நமக்கான கதைதான்; நம் கதைதான்!
துயரக் கதை 1
“இங்கன வெச்சுதான் எங்க அம்மாவைத் தலையில சுட்டாங்க. மூளையே சிதறிப்போச்சு” என்ற பவுல்ராஜ் அதற்கு மேல் பேச முடியாமல் டி-ஷர்ட்டை வாயில் பொத்தி அழுகையைக் கட்டுப்படுத்துகிறார். ஆனால் திடீரென்று ஏதோ நினைவுக்குவர, “அம்மோவ்….” என வெடித்து அழும் அந்த இளைஞனின் ஓலம் போலத்தான் ஏராளமான கதறல்கள் தூத்துக்குடியெங்கும் எதிரொலிக்கின்றன.
ஒற்றை மனுஷியாக நின்று, மூன்று பெண் பிள்ளை களையும், மகனையும் வளர்த்த ஜான்ஸியின் தலையைத்தான் சிதறடித்திருக்கின்றன காவல்துறையின் ரத்தவெறி பிடித்த தோட்டாக்கள்.
“நேத்து இந்நேரமெல்லாம், எங்கம்மா என்ன திட்டிட்டுக் கிடந்ததே.. அம்மா திட்டும்மா வாம்மா… வாம்மா திட்டுமா”எனச் சொல்லிச் சொல்லி அழும் இளைய மகள் அன்பரசியை யாராலும் தேற்ற இயவில்லை.
“போராட்டம் நடந்த இடத்தை விட்டுட்டு எதுக்குய்யா போலிஸ்காரங்க திரேஸ்புரத்துக்கு வந்து எங்களைச் சுடணும்? பொண்ணு மீன் குழம்பு கேட்டுச்சுன்னு மீன் வாங்கிட்டு வந்து ஆட்டோவுல இருந்து எறங்கியிருக்கு ஜான்ஸியக்கா. ஊர்ப்பிள்ளைகளை போலீஸ்காரங்க போட்டு அடிக்கவும் ‘எதுக்குத் தேவையில்லாம எங்க ஊருப் பசங்களைப் போட்டு அடிக்கிறீங்க’ன்னு ஒரு வார்த்தை கேட்டதுக்குப் பாவிப் பயலுவ தலையில சுட்டுக் கொன்னுருக்கானுங்க” என்றார் பக்கத்துக்கு வீட்டிலிருக்கும் இன்பராஜ்.
கலெக்டர் பங்களா திரேஸ்புரம் அருகில் இருப்பதால், பேரணி சமயத்தில் இங்கிருக்கும் மக்களால் கலெக்டருக்கு இடையூறு ஏதும் ஏற்பட்டு விடக்கூடாதென்றுதான் துப்பாக்கிச்சூடு நடத்தி இருக்கிறார்கள். காவலர்கள் திரும்பவும் வரக்கூடாது என்று மிகப்பெரிய படகை ஊருக்கு மத்தியில் குறுக்கே போட்டு காவல் நின்றார்கள் இளைஞர்கள்.
“தம்பி, பல உயிர்களை அநியாயமாப் பலிகொடுத்துட்டு நிக்கிறோம். ராத்திரி போலிஸ்காரனுக தூக்கிட்டுப்போன எங்க பிள்ளைக இன்னும் வீடு வந்து சேரல. அன்பா சொல்லிடுறோம் போயிடுங்க” என அவர்கள் எங்களை அனுப்பி வைத்தார்கள்.
இவற்றையெல்லாம் தூரத்தில் இருந்து கவனித்துக்கொண்டிருந்த காவலர்கள் அருகில் வந்தார்கள் ஆனால், மீண்டும் துப்பாக்கிச்சூடு நடந்துவிடுமோ என அந்த மக்கள் அச்சப்படவில்லை. “வாங்க வந்து சுடுங்க, முடிஞ்சா இந்த வள்ளத்தை மீறி வாங்க” என இளைஞர்களும், சிறுவர்களும், பெண்களும், ஊர்ப்பெரியவர்களும் அணி திரண்டு படகின் மீதேறி நின்ற காட்சி ஒரு போருக்கான எத்தனங்களாக இன்னமும் கண்முன் நிற்கிறது.
துயரக் கதை 2
கடந்த 22 வருடங்களாக ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடி வந்த தமிழரசனை நெற்றிக்கு அருகே சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்.பாஞ்சாலங்குறிச்சிக்குச் செல்லும் வழியில் இருக்கும் தமிழரசனின் வீட்டுக்கு நாங்கள் சென்றபோது மரத்தடி யில் நின்றிருந்த மற்ற தோழர்கள் “தோழர் தமிழரசனைக் கொன்னதோடு மட்டுமில்லாம அவரோட அண்ண னையும் காவல்துறை கைது செய்து எங்கயோ கொண்டுபோய் வெச்சிருக்கு. `எந்தப் பிரச்னையும் இல்லாம தமிழரசன் உடலை வாங்கிக்கணும், ஏதும் பிரச்னைப் பண்ணா அண்ணனையும் கொன்னுடுவோம்’னு வீட்ல இருக்கிற பொம்பளைகளுக்கு போன் பண்ணி போலீஸ் மிரட்டுறாங்க. பயத்துல ரொம்ப அழறாங்க” என்றார்கள்.
தமிழரசனுக்கு 42 வயது. திருமணம் செய்து கொள்ளவில்லை. ஸ்டெர்லைட்டுக்கு எதிராக இருபது வருடங்களாக களப்பணி ஆற்றி வந்தார். ஸ்டெர்லைட்டால் தன் அண்ணன் புற்றுநோய் வந்து இறந்து போனதற்குப் பிறகு, ஊரில் மேலும் பல உயிர்கள் போகக்கூடாது என ஸ்டெர்லைட்டுக்கு எதிராகத் தீவிரமாக மீண்டும் களம் இறங்கினார்.
‘நூறாவது நாள் போராட்டம். அற வழியில் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை’ என ஊரெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூடியிருக்கிறார்கள்.
“இவ்ளோ கூட்டத்தைப் பார்த்த உடனே தோழர் தமிழரசன் ரொம்ப உறுதியோட ‘நிச்சயம் இந்தமுறை ஸ்டெர்லைட்டை மூட வைப்போம்’னு நம்பிக்கையோடு பேசிட்டுவந்தார். கலெக்டர் ஆபிஸ் உள்ளே போனதும் பல பெண்களும், திருநங்கைகளும் முன்னாடி போய் நின்னாங்க. காவலர்கள் துப்பாக்கிச்சூடு நடத்த ஆரம்பிச்ச உடனே கூட்டம் சிதறியது. ‘கலெக்டரைச் சந்திக்காம இங்கிருந்து போகக்கூடாது தோழர்’னு சொல்லிட்டே வந்த தமிழரசன் சடார்னு கீழ விழுந்தாரு. நெத்தியில் இருந்து ரத்தம் வழியது. எங்கிருந்து சுட்டாங்கன்னு தெரியலை. அவரைத் தூக்கிட்டு ஓடினோம். அப்பவும் போலிஸ்காரங்க சுடுறத நிறுத்தலை. அப்டி என்னங்க கொலைவெறி எங்க மேல. நாங்க என்ன தீவிரவாதியா” என்று குமுறிய தமிழரசனின் நண்பர் உத்திரனின் கண்கள் நீண்டநாள் நண்பரை, சக தோழரை இழந்த துக்கத்தில் கலங்குகின்றன.
துயரக் கதை 3
வாயில் சுடப்பட்டு இறந்து போன ஸ்னோலின் வீடு இருக்குமிடம் மினி சகாயபுரம். அங்கே உள்ள இளைஞர்கள் எங்களை ஊரின் உள்ளே அனுமதிக்கவில்லை. “போதும்ல, எந்த மீடியாவும் உள்ள வராதீங்க. வந்தாலும் உண்மையவா காமிக்கப்போறீங்க? போலீஸ்காரங்கதான் மொதல்ல கல் எறிஞ்சாங்க, அவங்கதான் மொதல்ல வாகனங்களுக்குத் தீ வைச்சாங்க. அவங்கதான் அமைதி வழியில போராட வந்த எங்க மேல மாடுகளை விட்டாங்க. இதுலே ஏதாவது ஒண்ணைக் காமிச்சீங்களா? துக்கம் விசாரிக்க மட்டும் வந்துட்டீங்களே” என்று கோபப்பட்டவர்களைச் சமாதானப்படுத்தவே முடியவில்லை. அவர்களிடமிருந்து பிரித்து ஸ்னோலினின் மாமா எங்களை வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.
அம்மாவும் ஸ்னோலினும் சேர்ந்து தான் பேரணிக்குச் சென்றிருக்கிறார்கள். எதிர்ப்பைக் காட்டும் விதமாக கறுப்பு ஆடை அணிந்து, கறுப்புக்கொடி ஏந்தியபடி ஊர்வலத்தின் முன்னணியில் நின்று முழக்கமிட்டிருக்கிறார்கள்.
போலீசார் தடியடி நடத்தியும் ஸ்னோலின் நகரவில்லை. “நம்ம என்ன தப்பு பண்ணோம். எதுக்கு இவங்க அடிக்கணும்? பயமா இருந்தா நீ போடின்னு ஸ்னோலினக்கா எங்கிட்ட சொல்லுச்சு. நானும் நின்னேன். அக்கா நின்னுகிட்டே இருக்கிறதப்பாத்து ஒரு போலீஸ் எங்களை அடிக்க வந்தாரு. அக்கா பயப்படலை. ‘எங்க ஊருக்கு ஸ்டெர்லைட்டு வந்த மாதிரி, நாளைக்கு உங்க ஊர்லயும் ஏதாச்சும் வந்து ஆளுக சாவும்ல. உங்களுக்கும் சேர்த்துதானே போராடுறோம் அதை ஏன் புரிஞ்சிக்க மாட்டுறீங்க?’ன்னு அக்கா சொல்லி முடிக்கக்கூட இல்லை. என் ட்ரெஸ் முழுக்க சடார்னு யாரோ தண்ணி பீய்ச்சி அடிச்ச மாதிரி இருந்துச்சு. என்னன்னு பார்த்தா ரத்தம். ரொம்பப் பயந்துட்டேன். அக்கா கீழ விழுந்து கிடக்கு. வாய் கிழிஞ்சி இரத்தமா ஊத்திக்கிட்டு இருந்தது” என்று சொல்லிக் கொண்டிருந்த சிறுமி அதற்குமேல் பேச முடியாமல் எங்களையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
துயரக் கதை 4
துப்பாக்கிச்சூடு நடந்த இரண்டாம்நாள் தூத்துக்குடி அரசு பொதுமருத்துவமனை எதிரே, இறந்தவர்களின் உறவினர்களும், ஊர்க்காரர்களும் கூடியிருந்தார்கள். உடல்களைப் பார்க்க வேண்டுமென அவர்கள் ஆவேசப் பட்டார்கள். ஒரு கட்டத்துக்கு மேல் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் காவலர்கள் தடியடி நடத்தினார்கள். அன்றும் துப்பாக்கிச்சூடு தொடர்ந்தது. அந்த வழியாக சாப்பிடுவதற்கு வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்த காளியப்பன் என்கிற 22 வயது இளைஞன் காவலர்களால் சுடப்பட்டு இறந்தார்.
வீட்டில் இருந்து சாப்பிடுவதற்கு அழைப்பு வர, வருவதாகச் சொன்ன மகன் நெடுநேரம் ஆகியும் வீட்டுக்கு வரவில்லையே என்று பதற்றமடைந்த குடும்பத்தினருக்கு “டேய், நடிக்காதே, எழுந்துடு” என காளியப்பனைச் சுட்டுவிட்டு அவனைச் சுற்றி கிண் டலடித்துக் கொண்டிருந்த காணொளிப் பதிவுதான் கிடைத்திருக்கிறது.
பிள்ளையை அங்குமிங்கும் தேடி அரசுப் பொது மருத்துவ மனைக்கு வந்தார்கள். காளியப்பன் என்கிற பெயரைச் சொல்லி ‘உள்ளே இருக்கிறானா’ என அழுதுகொண்டே விசாரித்தார்கள். “ஏண்ணே, இத்தனை பத்திரிகைகாரங்க இருக்கீங்க. யாராவது உண்மையைக் கேட்டுச் சொல்லுங்கண்ணே” என மன்றாடினார் காளியப்பனின் தாய். அங்கே இருந்த காவலர்கள், மருத்துவர்கள் யாரும் வாய் திறக்கவில்லை. நாங்கள் அவர்களைக் கூட்டிக்கொண்டு அரசு மருத்துவமனையிலுள்ள அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் சென்றோம். அவர்கள் வெளியே நின்று கொண்டிருந்தார்கள். “காளியப்பன்னு ஒரு பேஷன்ட். உள்ள இருக்காரா? அவங்க அப்பா அம்மா வந்து இருக்காங்க” என்றோம்.
“காளியப்பனைக் கொண்டு வரும்போதே உயிர் இல்லைங்க” என்றார் அந்த மருத்துவர்.
வெளியே நின்று கொண்டிருக்கும் அந்தப் பெற்றோரிடம் இந்தச் செய்தியை எப்படி சொல்வதென்று தெரியவில்லை. ஒருவழியாகத் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, “காளியப்பனைக் கொண்டுவரும்போதே…” என நாங்கள் சொல்லி முடிக்கக்கூட இல்லை. அந்தத் தாயும், காளியப்பனின் நண்பனும் கதறி அழுத காட்சி இன்னும் கண்களுக்குள் திரையிடுகிறது.
“சாப்பிட வரேன்னு சொன்னியேடா.. அம்மா உனக்கு பிடிச்சத தான்டா ஆக்கி வெச்சு இருக்கேன். வா……….டா” என்று அந்தம்மா குரல் இழுத்து அழுவதைப் பார்த்து சுற்றியிருந்த பெண் போலீஸும் அழுதார்கள்.
இதுபோல ஏராளமான துயரக்கதைகள் தூத்துக்குடி தெருக்களெங்கும் நிறைந்து கிடக்கின்றன. ஊர்முழுக்க மரண ஓலங்களைக் கேட்க வைத்திருக்கிறது தமிழக அரசு. மருத்துவமனை முன்பும், பிணவறையின் முன்பும் யார், யாருடைய மரணத்துக்கு அழுகிறார் களென்றே தெரியவில்லை. மிகப்பெரிய வேட்டையை நடத்தி முடித்த காவலர்கள் சாரை சாரையாக ஆயுதங்களை ஏந்தியபடி தூத்துக்குடி சாலைகளில் அணிவகுத்து நடந்து சென்றார்கள். ஒரு நாடு இன்னொரு நாட்டின் மீது போர் தொடுத்து அதைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தபிறகு மமதையுடன் நடந்துபோகும் தோரணை அந்த அணிவகுப்பில் தெரிந்தது.
இறந்து போன பதிமூன்று பேர்களின் குடும்பங்களும், ஊர்மக்களும் கொதித்துப் போய் இருக்கிறார்கள். உண்மையில் இறந்து போனவர்களின் எண்ணிக்கை அதிகம் என்கிறார்கள் தூத்துக்குடி மக்கள். இது தவிர காவலர்கள் கைது செய்து கூட்டிக் கொண்டு போன பலரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை.
“எய்யா எடப்பாடி, எங்க எல்லோர் வாயிலயும் அரிசி போட்டுட்டுத்தான் உன் தட்டுல சோறு விழுகணுமாய்யா” என மண் தூற்றிய பாட்டியின் அழுகை கேட்கும் தூரத்தில் தமிழக அரசு இல்லை.
மனசாட்சி இல்லாத மன்னன் இருக்கலாம். ஆனால், மக்கள் இருக்க மாட்டார்கள். மிகப்பெரிய சரித்திரப் படுகொலையைச் செய்துவிட்டு சாதாரணமாக இந்த அரசு கடந்து சென்றுவிட முடியாது.
ஜெர்மானிய அரசியல் அறிஞர் ஹான்னா அரென்ட் (Hannah Arendt) கூற்று இது…
“அதிகாரம் பறிபோகலாம் என்ற பதற்ற நிலையில் வன்முறை ஏவப்படுகிறது. ஆனால், அதை அதன் போக்கில் விட்டால் அதன் முடிவு, அதிகாரத்தின் அழிவுதான். வன்முறை மிக உறுதியாக அதிகாரத்தை அழிக்கும். அரச பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டும்.”
கலவரத்தில் இறந்துபோன மற்றவர்களின் விவரம்…
பி.கே.கந்தையா: மில்லர்புரத்தைச் சேர்ந்தவர். முப்பதாண்டுகளுக்கு முன்பு இலங்கையிலிருந்து தூத்துக்குடிக்கு இடம் பெயர்ந்திருக்கிறார். மக்களின் உரிமைக்காகப் போராடச் சென்ற இவர் இறந்தது கூட தெரியாமல் இருக்கிறான், மனநலம் குன்றிய இவரது மகன் ஜெகதீஷ்.
ரஞ்சித்: தலையில் சுடப்பட்டு உயிரிழந்தவர். ராணுவத்தில் சேர வேண்டுமென்கிற ஆசையுடன் அதற்கான பயிற்சியில் இருந்தவர். மக்களோடு மக்களாக கலந்து போராடுவதற்காக வீட்டை விட்டுக் கிளம்பினார். இப்போது மகனின் சட்டையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு அழுது கொண்டிருக்கிறார் அவரது தாய்.
கிளாஸ்ட்டன்: லூர்தம்மாள் புரத்தைச் சார்ந்தவர். கூலித் தொழிலாளி. மகளைப் படிக்க வைத்து பெரிய ஆளாக்கிட வேண்டுமென்று லட்சியத்துடன் இருந்தவர்.
மணிராஜ்: திருமணம் முடிந்து மூன்று மாதங்களே நிறைவடைந்த புதுமாப்பிள்ளை. மனைவியைத் தன் வீட்டுக்கு அழைத்துவர பைக்கில் சென்றிருக்கிறார். போகிற வழியில் மக்கள் கூட்டத்தைப் பார்த்ததும் வண்டியின் வேகத்தை குறைக்க, மணிராஜின் உடலில் குண்டு பாய்ந்திருக்கிறது.
ஜெயராமன்: இருசக்கர வாகனத்தில் ஜவுளி வியாபாரம் செய்துவந்த இவர் உசிலம்பட்டியைச் சார்ந்தவர். ‘மக்கள் அதிகாரம்’ என்கிற அமைப்பின் முக்கியமானவர்களுள் ஒருவரான ஜெயராமன் தொடர்ந்து மக்கள் சார்ந்த பிரச்னையில் அழுத்தமாக தன் இருப்பை பதிவு செய்பவர். இந்த ஸ்டெர்லைட் போராட்டத்திற்காக உசிலம்பட்டியிலிருந்து தூத்துக்குடி வந்தவர் தூத்துக்குடியிலேயே தன் உயிரைவிட்டுவிட்டார்.
கார்த்திக்: பி.ஏ இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருந்தவர். தமிழர்களை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறதென்று எப்போதும் நண்பர்களிடம் புலம்பிக் கொண்டே இருப்பவராம். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுவிடுமென்று மிகுந்த நம்பிக்கையுடன் போராட்டத்தில் கலந்து கொண்ட கார்த்திக்கின் கடைசி ஃபேஸ்புக் பதிவு ‘வருங்காலம் நம்மைப் போற்றுமடா’.
செல்வசேகர்: லத்தியால் அடி அடியென்று அடித்ததும், கீழே விழுந்த வரை நெஞ்சில் மிதித்திருக்கிறார்கள் காவலர்கள். படுகாயம் அடைந்தவர் சிகிச்சைப் பலனின்றி உயிர் இழந்திருக்கிறார். ஏற்கனவே அப்பா இறந்துவிட்ட நிலையில் திருமணமாகாத செல்வசேகர், இரண்டு சகோதரிகளையும், அம்மாவையும் காப்பற்றிவந்திருக்கிறார். இவரின் குடும்பம் செய்வதறியாது திகைத்து நிற்கிறது.
அந்தோணி செல்வராஜ்: மகளுக்கு அடுத்தமாதம் பூப்புனித நீராட்டு விழா. அதற்கான ஆயத்தங்களில் இருந்திருக்கிறார். அலுலவகத்திலிருந்து கீழே இறங்கி பேரணியை வேடிக்கைப் பார்க்க வந்தவர். துப்பாக்கிச் சூட்டில் பலியானார்.
சண்முகம்: அப்பா அரசு வங்கி ஊழியர். அவரின் ஒரே மகனான சண்முகம் பெரும்பாலும் வீட்டை விட்டு எங்கேயும் செல்லாதவர். ஆனால் ஸ்டெர்லைட் ஆலை குறித்து இணையத்தில் படிக்க ஆரம்பித்தபிறகு இது நம்ம ஊரில் இருக்கவே கூடாது என களத்திற்கு வந்தவர். காவலர்களால் தாக்கப்பட்டு இறந்திருக்கிறார். “எல்லாம் சேர்ந்து எங்க பிள்ளையை கொன்னுப்பிட்டீங்கள்ல.” என மிகுந்த கோபமும் அழுகையுமாக யாரையும் சந்திக்க மறுத்துவிட்டனர் இறந்துபோன சண்முகத்தின் குடும்பத்தினர்.