எந்த விடயத்திலும் கண்டபடி அலட்டிக்கொள்ளாத அமைதியான போராளி. அவளுக்குள்ளே கனன்று கொண்டிருந்த எரிமலையைப் பற்றியோ, உள்மனப் போராட்டங்களையோ, ஆழ்ந்து ஊறுகின்ற மென்மையைப் பற்றியோ நாங்கள் உணர்ந்ததில்லை. எல்லாவற்றையும் தனக்குள் பூட்டிவைத்தது போன்ற அமைதி. தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்கின்ற பண்பு. தான் நெருங்கிப் பழகுகின்ற ஒரு சில போராளிகளுக்கும் மட்டுமே தன்னைப்பற்றி வெளிப்படுத்திய சில தருணங்கள். அவற்றுக்குள்ளே அவளது உறுதியையும் வேகத்தையும் மிகுந்த துணிச்சலையும் மட்டும் அறிந்துகொண்டோம். அதுதான் அவளைக் கரும்புலியாச் சாதிக்கவைத்ததோ.
யாழினியின் அக்கா 2ம்.லெப் தர்சினி இந்திய இராணுவ ஆக்கிரமிப்பின்போது வீரச்சாவடைய, அக்காவின் பாதையில் தானும் போகவேண்டும் என்று கூறிக்கொண்டிருந்த யாழினி, போராட்டத்தோடு தானும் இணைந்து கொண்டாள்.
மணலாற்றில் அரசபடைகளின் கஜபார இராணுவ நடவடிக்கையை முறியடிக்க நாம் அமைத்த சண்டைக்களம் இவளது முதற்களம். அந்தச் சண்டையின்போது அவள் மணலாற்றுக் காட்டிலே நின்றாள். ஆரம்பப்பயிற்சி ஆரம்பித்து ஏழு நாட்கள்தான் முடிவுற்ற நிலையில் இவர்களுக்கு காவும் குழுவேலை கொடுக்கப்பட்டது. இறுதிநேரச் சண்டை எதிர்பார்த்ததைவிட அமர்க்களமாக நடந்ததால் அதுவே இவளுக்கு பெரிய அனுபவமாக இருந்தது.
மணலாற்றிலிருந்து புகைப்படப்பிரிவிற்குவந்து, புகைப்படக் கலையைக் கற்றுக்கொண்டிருந்த போதுதான் கரும்புலியாகப் போகவேண்டும் என்பதே அவளின் மூச்சாகிப்போனது. அங்கிருந்தபடியே மாதத்திற்கு குறைந்தது ஒருதடவையாவது தலைவருக்குக் கடிதம் எழுதுவாள். அதன்படி அவள் கரும்புலியாகத் தெரிவுசெய்யப்பட்டு, வேவுப்பயிற்சி அளிக்கப்பட்டு, வேவுகளில் ஈடுபட்டாள்.
ஒருமுறை இயக்கச்சிப்பகுதியில் வேவு எடுக்கச்சென்ற சமயத்தில் நாரிப்பகுதியில் அவளுக்குப் பலமான காயம். அந்தக் காயத்தினால் சிறிதுகாலம் நாரிப்பகுதியில் உணர்வின்றி இருந்தாள். அந்த நாட்களிலும் கரும்புலியாகப்போய் சாதிக்கவேண்டும் என்ற உறுதிமட்டும் குலையவில்லை.
அந்தச்சம்பவம் எங்களுக்குள் இன்னும் அவளது ஆற்றலை, செய்துமுடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைப் பதியவைத்த சம்பவமாகும். சூரியக்கதிர் – 1 இராணுவ நடவடிக்கை நடந்து கொண்டிருந்த நேரம். அது ஒரு நிலவுநாள். வலிகாமம் மேற்கில் ஒருபகுதியில் வேவு எடுத்துவரவேண்டும். எல்லோரும் போய் சிக்கல்பட்டு திரும்பிக்கொண்டிருந்த நேரம்.
“நான் போய் எடுத்துவாறன்” என்று உறுதியளித்தபடி யாழினி போனாள். சொன்னபடியே பகல்போல நிலவு எறிந்த அந்த இரவில் மின்சார வெளிச்சங்களும், தேடொழியும் சேர்ந்து இரவைப்பகலாக்க, மண் அணைதாண்டி உட்சென்று அவள் எடுத்துவந்த வேவு அவள்மீது எல்லோருக்கும் அசையாத நம்பிக்கையைக் கொடுத்தது.
அவளது கடைசி நாட்களில் அவள் இலக்குக்குப் போகின்ற கடைசி நேரம்வரை அவளுக்குக் காய்ச்சல். இலக்குக்கான மாதிரிப் பயிற்சியையும் காய்ச்சலுடன்தான் செய்து முடித்தாள். விரைவாகத் தனக்குக் கிடைத்த சர்ந்தப்பம் நழுவிப்போய்விடுமோ என்ற ஆதங்கத்தில் தனது இயலாமையைக்கூட வெளிப்படுத்தாது இரவிரவாக கடுமையான மாதிரிப் பயிற்சிகளைச் செய்து முடித்த பின்பே தனது இலக்குக்குச் சென்றாள்.
“தற்செயலாய் இலக்கை அடையமுதல் அங்கே காயப்பட்டால் கூட, குறோஸ் இழுத்தாவது இலக்குக்குப் போவன்”
அதுதான் யாழினி சொல்லிவிட்டுச் சென்ற கடைசி வார்த்தை. அவளது இலக்கு தான் மடிகின்ற இடம் தனது சொந்த ஊர்தான் என்பதில் அவளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருந்திருக்கும். அவளின் இலக்குக்கான நீண்டநேர நடைப்பயணத்தின் இறுதியாக அவளது உறவினர் வீட்டுக்கு அண்மையாகச் சென்றுகொண்டிருந்த நேரம் என்ன நினைத்தாளோ?
“ஒரு நிமிடம்”
என ஓடிச்சென்று தனது ஜீன்ஸ் பொக்கற்றினுள் வைத்திருந்த கடிதத்தை எடுத்து, வெறிச்சோடிப் போயிருந்த தனது வீட்டுக்குள் புகுந்தாள். சில நாட்களாகக் கிழிக்கப்படாதிருந்த நாட்காட்டியினுள் வீட்டினருக்கான தனது இறுதிக் கடிதத்தை வைத்த கடைசி நிமிடத்தில், கூடச் சென்றவர்களின் விழிகள் ஈரத்தில் பளிச்சிட்டன.
அடுத்தநாள் வீடு பார்க்கச் சென்ற உறவினர்கள், கடிதத்தை எடுத்து அவளது தாயிடம் கொடுத்தார்களாம். கரைந்து போகின்ற அந்த இறுதி நிமிடங்களில் அவசரத்தில் கிறுக்கிச்சென்ற அவளது வார்த்தைகளில் அவனைத் தேடித்தேடி அவளது பெற்றோர் அழுதனர். அவள் போயே விட்டாள்.
1997.06.10 அன்று ஜெயசிக்குறுய் படையினரின் முதுகெலும்பு உடைக்கப்பட, அதில் இவள் பங்கும் பெரியதாக அமைந்தது. சண்டையின் முக்கியமான கட்டத்தில் அவளுக்குரிய கட்டளை கிடைக்க, சண்டைக்கெனச் சென்றிருந்த எல்லோரும் பார்த்திருக்க பெரிய தீப்பிழம்போடு மேஜர் யாழினியும், கப்டன் நிதனும், கப்டன் சாதுரியனும் சிதறிப் போனார்கள். தெறித்த தசைத் துணுக்குகளுடன் ஒருகணம் அதிர்ந்து குலுங்கிய சேமமடு மண்ணுக்குள் வீசுகின்ற மெல்லிய தென்றலுக்குள் எங்கள் தலைவர் கூறுகின்ற மொறாலுக்குரியவள் போய்விட்டாள்.
வெளியீடு:களத்தில் இதழ் 1997
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “