உலகம் முழுவதும் இந்த நிமிடத்தில் 41 பேர் தங்களது இருப்பிடத்தைத் தொலைத்துவிட்டு மறுவாழ்வு தேடி இடம்பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தக் கட்டுரையை நீங்கள் வாசித்து முடிப்பதற்குள் அந்த எண்ணிக்கை நூற்றைத் தாண்டிவிடும். இரண்டு நாடுகளுக்கிடையில் நடக்கும் போரினாலோ, ஒரே நாட்டுக்குள் நடக்கும் இனக்கலவரத்தாலோ இவர்கள் அகதிகள் ஆகவில்லை. இவர்கள் சூழலியல் அகதிகள். இதில் உலகிலிருக்கும் எல்லோருக்கும் பங்கிருக்கிறது.
வெள்ளம், புயல், அனல் காற்று, பூமி வறண்டு ஏற்படும் பஞ்சம் ஆகிய பல்வேறு காரணிகளால் உலகம் முழுவதிலும் நிமிடத்திற்கு 41பேர் என்ற விகிதத்தில் தனது இருப்பிடத்தைத் தொலைத்து இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் விரும்பிச் செல்வதில்லை. தள்ளப்படுகிறார்கள். மோசமான சூழலியல் விளைவுகளால் தங்களது வாழிடத்தைத் தொலைத்து, இருக்க இடம்தேடி வாழப் பிழைப்புதேடி, தாங்கள் வாழ்ந்த வீடுகளை விட்டு வேறு இடங்களுக்குப் பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். தங்கள் நாட்டிற்குள்ளேயோ, அண்டை நாடுகளையோ நாடிச்செல்லும் அவர்கள்தாம் சூழலியல் அகதிகள்.
“சூழலியல் அகதிகள்” என்ற சொல் கடந்த பத்து ஆண்டுகளாகப் பல சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், அது சர்வதேசச் சட்டங்களால் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. அதை ஒரு மிகைப்படுத்தப்பட்ட சொல்லாகவே கருதுகிறார்கள். இடம் பெயர்பவர்களுக்கான சர்வதேச அமைப்பு ஒன்று அந்தக் கூற்றுக்கான விளக்கத்தை வரையறுத்துள்ளது.
“சுற்றுச்சூழலிலும் பருவநிலையிலும் ஏற்படும் திடீர் மாற்றங்களாலும், படிப்படியான மாற்றங்களாலும் தனது வாழ்வுக்கும் வாழ்வாதாரத்துக்கும் ஏற்படும் பாதிப்புகளால், தனிநபராகவோ, குழுவாகவோ தாங்கள் வாழும் பகுதிகளை விட்டுத் தங்கள் நாட்டிற்குள்ளேயே வேறு பகுதிகளுக்கோ, வெளிநாட்டிற்கோ இடம்பெயரவேண்டிய சூழ்நிலைக்குத் தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ தள்ளப்பட்டால் அவர்களே சூழலியல் அகதிகள்.”
2008ஆம் ஆண்டிலிருந்து 2016ஆம் ஆண்டிற்குள் மட்டும் 6.32 கோடி மக்கள் சூழலியல் அகதிகளாக மாறியுள்ளனர். இதுவே 2050இல் 20 கோடியாக மாறும் என்கிறது ஐ.நா.
2010ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தால் பாகிஸ்தானில் இதுவரை ஒரு கோடி மக்களும் பிலிப்பைன்ஸில் 2013ஆம் ஆண்டு ஏற்பட்ட சூறாவளியால் 40 லட்சம் மக்களும் இடம்பெயர்ந்தார்கள். அதில் பிலிப்பைன்ஸில் மட்டும் 19 லட்சம் பேர் வீடற்றுத் தெருவோரங்களில் வாழவேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டார்கள். கடந்த சில ஆண்டுகளாகக் கடல் மட்டம் உயர்வதாலும், வெள்ளங்களாலும் பாதிக்கப்படும் வங்கதேசத்தின் கடலோர கிராம மக்கள், நமது கண்முன் நாம் பார்த்துக்கொண்டிருக்கும் சூழலியல் அகதிகள். கடந்த சில ஆண்டுகளாக அந்நாட்டின் தலைநகரமான டாக்காவை (Dhaka) நோக்கிக் குறைந்தபட்சம் 50,000 மக்கள் பருவநிலை மாற்றங்களின் விளைவுகளால் ஏற்படும் பாதிப்புகளுக்குள்ளாகிச் சூழலியல் அகதிகளாக இடம்பெயர்ந்துகொண்டிருக்கிறார்கள். இன்றுவரையிலும் இத்தகைய சூழலியல் பிரச்னைகளின் காரணமாகப் பல ஆயிரம் மக்கள் இந்தியாவின் கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆசியாவிலேயே இந்தியா, இந்தோனேஷியா, வங்கதேசம் ஆகிய நாடுகளில்தான் பருவநிலை மாற்றங்களின் விளைவுகளுக்கு ஆளாகும் நிலையில் அழிவின் விளிம்பில் வாழும் மக்கள் அதிகம் வாழுகின்றனர். இந்தியாவிலேயே 2015ஆம் ஆண்டில் மட்டும் பல்வேறு காரணங்களுக்காக 1 கோடியே 90 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு இடம் பெயர்ந்துள்ளார்கள். அதில் 90 சதவிகிதம் பேர் இயற்கைப் பேரிடர்களாலும் வறட்சி, பஞ்சம் போன்றவற்றாலும் பாதிக்கப்பட்டவர்கள் என்கிறது சர்வதேச இடப்பெயர்வு கண்காணிப்பு மையம். பிரம்மபுத்திரா நதியில் ஏற்பட்ட மண்சரிவுகளாலும் வெள்ளப் பேரிடர்களாலும் மட்டுமே கடந்த சில ஆண்டுகளில் 1.3 கோடி பேர் தங்கள் வாழிடங்களை இழந்துள்ளனர். அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள கடலின் மட்டம் அறிஞர்கள் நினைத்ததைவிட இருமடங்கு அதிகமாக உயர்வதால் அந்த டெல்டா பகுதி முழுவதும் அடுத்த இருபது ஆண்டுகளில் கடல்சூழ் பகுதியாக மாறினாலும் ஆச்சர்யமில்லை.
தற்போதைய நிலையை வைத்துக் கணிக்கும்போது 2100க்குள் இந்தியா மற்றும் வங்கதேசத்தில் மட்டும் 12கோடி மக்கள் சூழலியல் அகதிகளாக மாறுவார்கள் என்கிறது கிரீன்பீஸ் என்ற சுற்றுச்சூழல் அமைப்பின் ஓர் ஆய்வு. பொருளாதார ரீதியிலும் இந்தியா கடந்த சில ஆண்டுகளில் பெரும் இழப்புகளைச் சுற்றுச்சூழல் சீர்கேடுகளால் சந்தித்துள்ளது. வருடத்திற்குக் குறைந்தபட்சம் 10 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு, இந்தியாவிற்கு இயற்கைப் பேரிடர்களால் ஏற்படுகிறது. அதில் வெள்ளப்பெருக்கால் மட்டுமே 7 பில்லியன் டாலர்.
நாம் சூழலியல் அகதிகளுக்கான காலத்தில் தற்போது இருக்கிறோம். ஆனால், இந்தியா உள்பட உலக நாடுகள் எதுவுமே பொருளாதார ரீதியாக அதற்குத் தயாராகவில்லை. அப்படிச் சூழலியல் அகதிகளாக மாறிக்கொண்டிருக்கும் மக்களின் சமூகப் பொருளாதாரப் பாதுகாப்புகளுக்கெனத் தனிச்சட்டங்களும் இதுவரை இயற்றப்படவில்லை. நாம் இந்தப் பிரச்னைகளைச் சமாளிக்கத் தாயாராகும்போது நிலைமை இன்னும் எல்லைமீறிச்செல்ல வாய்ப்புகள் உள்ளன. உலக மக்கள் தொகையில் 10 சதவிகிதம் பேர் கடல்மட்ட உயர்வால் பாதிக்கப்படும் பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அத்தோடு வளரும் நாடுகளில் பருவநிலை மாற்றங்களின் விளைவை அதிகமாகச் சந்திக்கிறார்கள். அந்நாடுகளில் விளிம்புநிலையில் வாழும் ஏழை மக்களே இத்தகைய சீர்கேடுகளினால் முதலில் பாதிக்கப்படுகிறார்கள்.
ஆம், உலகம் வெப்பமடைந்து கொண்டிருக்கிறது. நிலைகுலைந்து குழம்பிக் கிடக்கிறாள் பூமாதேவி. அதன் விளைவால் ஏற்படுகின்றன பருவநிலை மாற்றங்கள். ஆனால், அதற்கான உலக நாடுகளின் பங்கில், அடித்தட்டில் வாழுகின்ற ஏழை மக்களின் பங்கு ஒரு சதவிகிதம் மட்டுமே. வெப்பமயமாதலால் ஏற்படும் பருவநிலை மாற்றங்களின் விளைவுகளை எதிர்கொள்வதிலும் வாழிட இழப்பில் தொடங்கிப் பொருட்சேதம், உயிர்ச்சேதம் வரை அனைத்தையும் 99% அனுபவிப்பதும் அதே ஏழைமக்கள்தாம்.
சர்வதேச அமைப்புகள் மாசு வெளியேற்றங்களைக் குறைப்பதிலும் பருவநிலை மாற்றத்தின் வீரியத்தைக் குறைப்பதிலும் முனைந்துகொண்டிருக்கின்றன. அது ஒருபுறம் இருந்தாலும் தற்போது நாம் எதிர்கொள்ளும் சவால்களையும் விளைவுகளையும் புரிந்து கொண்டு செயல்படவேண்டும். அதன் முதல்படியாகச் சூழலியல் அகதிகளின் பாதுகாப்பை உறுதிசெய்து அவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முனையவேண்டும். நேர்மையான கட்டமைப்பை உருவாக்கி அவர்களுக்கான சட்டங்களை வகுக்கவேண்டும். அது சூழலியல் காரணங்களால் இடம்பெயரும் மக்களுக்கு உயிர்காக்கும் படகாக விளங்கவேண்டும்.