நாங்கள் அமர்ந்திருப்பது களமுனைக் காப்பரண் என்பதை எங்களால் நம்பிவிட முடியாததாய் இருந்தது. அவ்வளவிற்கு போராளிகள் அதனை மாற்றி அமைத்திருந்தனர். அதில் இருக்கும் போது கிராமத்து வீடு ஒன்றில் இருப்பதைப் போல ஒரு உணர்வே எங்களிற்கு இருந்தது.
அந்தக் காப்பரண் அதனுடன் இணைந்திருந்த சூழல் அனைத்தும் எங்களிற்கு அப்படியானதொரு நினைவை ஏற்படுத்தியிருந்தது. நாங்கள் அமர்ந்திருந்த காப்பரண் பல்வேறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. எதிரியை அவதானிக்கும் பகுதி, சுடும் ஓட்டைப் பகுதிகள், குறிப்பிட்ட போராளிகள் ஓய்வெடுக்கும் பகுதி, இதனைவிட வேறுசில அமைப்புக்களும் அந்தக் காப்பரணில் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இன்னருவியிடம் “கடும் வசதியான வேலையள் எல்லாம் செய்திருக்கிறியள்” என்று கூறிவிட அங்கிருந்த போராளிகள் “ஏன் எங்களுக்கு என்ன அண்ண நாங்கள் தனே வசதியாய் இருக்கவேணும்” என்றார்கள். நாங்களும் பதிலுக்கு “ஓம்… ஓம்… அது சரி ஆமிக்காறன் வந்து பாத்தால் யோசிக்கப்போறான் அதுதான்” என்றோம். அவன் வந்தால் இதுமட்டுமா அங்கால என்றவன் நிலத்தில இருந்து பறன் கட்டிஉயத்தி போராளிகள் ஓய்வாக உறங்கிக் கொண்டிருக்கும் காட்சியை எங்களிற்குக்; காண்பித்தான். நாங்களும் அதனைப்பார்த்து விட்ட “ஆமிக்காறன் இஞ்ச வாறதெண்டால் நாங்கள் ஏன் லையினில நிக்கிறம்” என்றொரு குரல் சட்டென்று காப்பரணிண் பறன் கட்டப்பட்ட பகுதிக்குள்ளால் வந்து காதுக்குள் மோதிக் கொண்டது.
அந்தப் போராளியின் பேச்சு நிறைவடைவதற்கு முன்னர் அருளோவியன் சீரியசாகவே “அதெல்லாம் சரி ஊரில என்ன முகமாலையால ஆமிக்காறன் வருவான் எண்டோ சனங்கள் நினைச்சுக் கொண்டிருக்கினம்” என்று எங்களிடம் கேட்டான். எதிரியின் வரவைப்பார்த்துத் துப்பாக்கியுடன் நிற்கும் அந்தப் போராளிகளின் முன்னால் நாங்கள் பகிடியாகக் கதைத்த ஒரு சின்ன விசயம் எவ்வளவு சிக்கலானதாய் மாறிவிட்டது என்பதை எங்களின் முன்னால் அமர்ந்திருந்த போராளிகளின் அசைவற்ற முகங்கள் சொல்லிக்கொண்டன. அந்தக் களத்தில் முன்னணிக்காப்பரணில் நின்ற எங்களின்; மனதில் ஒருவித மயான அமைதி நிலவியது. அந்த இடைவெளிக்குள் “ஊரில சனங்கள் உங்கள நம்பித்தான் இருக்குதுகள் அதில ஒரு சிக்கலும் இல்லை” என்று கூறியபடி மெதுவாக அந்தப் போராளிகளைச் சமாளித்துக் கொண்டோம்.
நாங்கள் சொல்லி முடித்தது தான் போராளிகளின் முகங்கள் கிறுகிறு வென்று மலர்ந்து கொண்டிருந்தன. திடீரென்டு இன்னருவி “இல்ல அண்ண சனங்கள் பிரச்சினையில்லாமல் இருக்க வேணும் எண்டுறதால தானே நாங்கள் இஞ்ச கஸ்ரப்படுறம் அதுதான் பிறகு…..” என்றவன் கதையை இழுத்துக் கொண்டு மெதுவாக நிப்பாட்டினான். “மச்சான் எங்களுக்கு வாற உலர் உணவப்பாக்கத்தெரியுது தானே சனங்களின்ர நிலப்பாடு” என்று அருளோவியன் கூறிக்கொண்டான். அருளோவியனின் தெளிவான விளக்கத்துடன் இடியப்பச் சிக்கல் ஒன்று முடிவிற்கு வந்தது போல அந்தப் பிரச்சினைக்கும் முடிவு வந்தது.
உலர் உணவுக்கதை வந்ததும் இன்னருவியின் வெள்ளை நிற அழகிய முகத்தில் இயல்பாகக் குடியிருக்கும் புன்னகை ஒன்று மெதுவாக உதிர்ந்து கொண்டது. அவனின் சிரித்த முகம் காப்பரணின் மெல்லிய இருட்டிற்குள் ஒரு பௌர்ணமி நிலா தலையை அசைத்துச் சிரிப்பது போல இருந்தது. அப்படியே இன்னருவியுடன் கதைக்கத் தொடங்கினோம். பார்ப்பதற்கு சிறியவனாக இருந்த இவனிடம் “தம்பி எப்பிடி லையின்” என்று கேட்டு முடிப்பதற்கிடையில் அவன் முந்திக்கொண்டு “என்ன அண்ண வீட்டில இருக்கேக்க நாங்கள் இரணதீவுக்கு தொழில் செய்யப் போறநாங்கள். ஒவ்வொரு நாளும் அங்க நேவிக்காறங்கள் வந்து எங்களக் கலைச்சுக் கலைச்சு அடிப்பாங்கள். அதுமாதிரி இஞ்ச கலக்க ஏலாது சும்மா அடிக்கிறான்.
அந்தளவுதான்”என்று லையின் ஒண்டும் புதுசில்ல என்று சொல்லிக் கொண்டிருந்தான். இன்னருவியின் கதைக்கு ஆதரவு செய்வது போல “அங்க நேவி அடிக்கேக்க ஓடினவ இப்ப இஞ்ச அவன ஓடவைக்கிறதுக்கு துவக்கோட பாத்துக்கொண்டிருக்கினம்” என்றான் அருளோவியன்.
இன்னருவியின் வீடு நாச்சிக்குடா இரணைமாதா நகரில் இருக்கிறது. இவன் இளம் வயதில் தனது படிப்பை கைவிட்டுவிட்டு தந்தையுடன் இரணைதீவுக் கடலில் தங்கிநின்று மீன்பிடித்தொழில் செய்து வந்தான். நாளுக்கு 350 ருபாவிற்கும் அதிகமான வருமானத்தை பெற்று வந்தான். “இன்னருவியின்ர கதையைக் கேட்டால் அவன் தன்ர உழைப்பிலதான் எல்லாத்தையும் பாத்தனான் எண்டுவான் அண்ணா கவனம்”என்று அருகில் இருந்த போராளி ஒருவன் கூற “மச்சான் சென்றி நேரத்தில கள்ளமடிக்கிற மாதிரி இல்லை” என்று பதிலுக்குக் கூறிவிடக் காப்பரண் அதிர்ந்தால் போல அனைவரும் சிரித்துக்கொண்டார்கள். சிரிப்புக் கூடிவிட அதற்குள் இருந்த போராளி ஒருவன் “இன்னருவி இயக்கத்துக்கு வரேக்க என்ன மாதிரி வந்தன் எண்டு தெரியமோ அண்ணா” என்று சொல்லி விட்டு தலைமறைவாகியவன் போல அங்கிருந்து காப்பரணிண் முன் பக்கம் போய் காப்பரன் இடைவெளிக்குள்ளால் எங்களைப்பார்ததுக் கொண்டிருந்தான்.
காப்பரண் மெதுவாகக் களைகட்டத் தொடங்குவதுபோலத் தெரிந்தது. இதற்குள் நாங்கள் இன்னருவியைப்பார்த்து “அது சரி என்ன மாதிரி பெடியள் இப்பிடிச் சொல்லுறாங்கள் உண்மையோ”என்று கேட்க வெட்கப்படுபவன் போல மெதுவாக முகத்தை கீழே புதைத்தபடி நாக்கைக் கடித்து “கடவுளே எல்லாத்தையும் போட்டுடைச்சுட்டாங்கள்” என்பதாய்ச் சற்று நேரம் மௌனமாகிக் கொண்டான். இன்னருவியின் மௌனம் போராளிகளிற்கு பெரு மகிழ்வைக் கொடுத்திருக்க வேண்டும். அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து தமது கண்களைக்காட்டி அந்தமாதிரி மச்சான் மாட்டீட்டார் என்பதாய் சமிக்ஞைகளைப் பரிமாறிக்கொண்டனர்.
சமிக்ஞைகளின் உச்சமாய்; “என்ன மச்சான் இனி என்னத்தை ஒளிக்கிறது எல்லாம் பிசகிப்போச்சுது சொல்லடாப்பா சொல்லு என்ன ராணுவரகசியமே இல்லத்தானே”என்று கூறியபடி அருளோவியன் இன்னருவியை மெதுவாகத் தூண்டிவிட்டான். இன்னருவிக்கு சாதுவான சினம் வந்திருக்க வேணும் மெதுவாக நிமிர்ந்தவன் எங்களைப் பார்க்க முடியாமல் வெட்கப்பட்டுக்கொண்டான். “சரி… சரி… இனி என்ன செய்யிறது எங்களுக்குத் தானே சொல்லுங்கோவன்” என்று இன்னருவியை பிழிந்து எடுத்துக் கதையை தொடக்கினோம்.
“அதண்ண…” என்று அங்கும் இங்கும் இழுத்தவன் இறுதியில் இனி எதுவும் சரிவராது இவங்கள் எல்லாத்தையும் போட்டுடைச்சிட்டாங்கள் என்று நினைத்தவனாய் அங்க விழுங்கி இஞ்ச விழுங்கி சொல்லத் தொடங்கினான். “எங்கண்ட ஊரில அண்ணா சனங்கள் தெரியும் தானே” என்றவன் “அதுதான்” என்றான். “ஓ சனங்களுக்கு என்ன” என்றோம்.
“அதுதான் அண்ண” என்றவன் கதையைத் தொடங்கினான். “எங்கண்ட ஊரில இயக்கத்தப் பற்றி எங்களுக்கு பயப்பிடுத்தித் தான் கதைப்பாங்கள்.” நாங்கள் வீட்டில இருக்கேக்க இயக்கம் எண்டால் காட்டுக்குள்ள தான் கூட இருக்கவேணும். சண்டை எண்டால் ஆக்கள் தரமாட்டாங்கள். சென்றில தனியத்தான் இருக்கவேணும். மழை வெயில் எல்லாம் திரியவேணும். சாப்பாடும் சரியாய்க் கிடைக்காது எண்டு கனக்கச் சொல்லுவாங்கள்” அதுதான் என்று இழுத்தான்.
“இது கள எல்லாம் நினைச்சுப் பயந்துகொண்டு தான் இஞ்ச வந்தனான். அதுதான் இவங்கள் அதச் சொல்லி எனக்கு நக்கல் அடிக்கிறாங்கள்” என்று மலேரியாக் குளிசை விழுங்கினவன் போல அங்கும் இங்கும் நெழிஞ்சு கொண்டிருந்தான்.
“இயக்கத்துக்கு வந்து பயிற்சி முடிக்கும் வரையும் நான் அப்பிடித்தான் பயந்து கொண்டிருந்த நான். பிறகு இஞ்ச வந்தாப்பிறகு தான் எல்லாம் விளங்கிச்சுது.” என்றவன் தற்போதைய களமுனை செயற்பாடுகள் பற்றி விபரித்துக் கொண்டிருந்தான். இதற்;கிடையில் வந்து புகுந்து கொண்ட அருளோவியன் “இப்ப இன்னருவிக்கு நாங்கள் தான் சாப்பாட்டை எல்லாம் வெட்டிப்போட்டுக் குடுக்கவேணும்” என்றான்.
அதெல்லாம் அப்பத்தையான் கதை அதுகள இனிக் கதைக்கக் கூடாது என்ன அண்ண”என்று எங்களிடம் குழந்தைப்பிள்ளைகள் போலச் சொல்லிக்கொண்டிருந்தான் இன்னருவி. அவனின் கதையைக் கேட்க எங்களிற்குச்; சிரிப்பு வந்துவிட்டது.
“அது சரி என்ன மாதிரி ஏதும் சண்டை அனுபவங்கள் இருக்கோ… என்று கேட்கச் சிரித்தவன் இதுவரையும் இல்லை”என்றான். “சண்டைதான் இல்லை ஆனால் எனக்கு மறக்கவே முடியாத சம்பவம் ஒண்டு இருக்கு” என்றவனின் முகம் சட்டென இருண்டு கொண்டிருந்தது. கலகலப்பான முகம் ஏன் இவ்வளவு வேகமாய் இருண்டுபோகிறது என்பது எங்களிற்கு குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.
இருந்தும் “அப்பிடி என்ன சம்பவம் சொல்லுங்கோ இன்னருவி”என்றோம். சற்றுத் தாமத்தின் பிறகு இன்னருவி மெதுவாக வாயை அசைத்தான். “ஒரு நாள் எங்களின்ர பொயின்ருக்கு முன்னுக்கு இருந்த மறைப்பு வேலிய அவன் ‘சிமோக்’ அடிச்சு எரிச்சுப் போட்டான். அவன் எரிச்ச வேலி சினைப்பர் ஏரியா. அதால எங்கண்ட நடமாட்டத்துக்கு சரியான கஸ்ரமா இருந்தது.
அப்ப எங்கண்ட ‘பிளாடடூன் லீடராய்’ இருந்த அறிவண்ணா இந்த வேலியப் பாத்திட்டு இது அடைக்கவேணும் எண்டுசொல்லி அதுக்குரிய ஒழுங்குகளைச் செய்தார்”என்று அதற்குரிய ஒழுங்கு படுத்தல் கதையளைச் சொல்லிக் கொண்டிருந்தான். “அதுக்குப் பிறகு ஒரு நாள் இரவு அவன் அடிச்சு எரிச்ச வேலிய அடைப்பம் எண்டு அறிவண்ணா சொல்ல நானும் இன்னும் மூண்டு பெடியளும் நிண்டு அந்த வேலிய அடைச்சுக்கொண்டிருந்தம்.
இரவு நாங்கள் நாலு பேரும் சேந்து கனக்க இடம் அடைச்சுப்போட்டம். அப்ப அவன் அடிக்கடி செல் அடிச்சுக் கொண்டே இருந்தான். ஆமி ஒவ்வெரு தரமும் செல் குத்தேக்க நாங்கள் எல்லாரும் பங்கறுக்குள்ள போய் இருந்திட்டு வெடிச்சாப்பிறகு வெளியால வந்து வேலை செய்வம்”என்றவன் தொடர்ந்தான்.
“இப்பிடியே இருபத்தைஞ்சு,முப்பது தரம் அவனும் செல்லடிக்க நாங்களும் பங்கருக்குள்ள போறதும் வாறதுமாயே இருந்தம். கனக்க இடம் அடைச்சுப் போட்டம். இன்னும் ஒரு கொஞ்ச இடம் தான் அண்ண இருக்குது. அப்ப அறிவண்ண எனக்கு மூண்டு மீற்றர் தள்ளிநிண்டு கட்டிக்கொண்டு இருந்தார். அவருக்குப் பக்கத்தில கலையமுதன் நிண்டவன்.
எங்களுக்குப் பக்கத்தில இன்னும் ஒரு பெடியன் கீழ இருந்து வேலை செய்து கொண்டிருந்தான்.”என்று இன்னருவி கூறிக்கொண்டிருக்க எங்களிற்கு இதற்குள் ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்பது மனதுக்குள் ஓடத் தொடங்கிவிட்டது. கதையைத்தொடர்வதற்கு எங்களிற்கு மனம் இடங்கொடுக்கவில்லை. இருந்தும் இன்னருவியிடம் அதனை வெளிப்படுத்திவிடவில்லை. அதனால் எதுவம் பேசாமல் பதைபதைக்கும் மனதையும்,காதையும் இன்னருவியிடம் கொடுத்துவிட்டு மௌனமாய் இருந்தோம்.
“அப்ப கடைசியாய் வேலை முடியிற கட்டம். நானும் இன்னும் ஒரு போராளியும் நிலத்தில இருந்து வேலியக் கட்டிக்கொண்டிருந்தம். அறிவு அண்ணாவும் கலையமுதனும் நிண்டு வேலை செய்து கொண்டிருந்தவ. அப்ப செல் குத்தின சத்தம் கேட்டது. அண்ண செல் குத்திப் போட்டான் எண்டு அறிவண்ணாட்டச் சொன்னன்.
அது கண்டல் பக்கம் போகுது கெதியாய் கட்டிமுடிச்சிட்டு நாங்கள் போவம் எண்டு சொன்னார். சரி அண்ணா எண்டு சொல்லுறதுக்கு இடையில நாங்கள் வேலை செய்த இடத்துக்குப் பக்கத்தில அவன் குத்தின செல் வந்து விழுந்து வெடிச்சிட்டுது. எங்களுக்குப் ‘பிளாஸ்’ எழும்பினது தான் தெரிஞ்சுது அதக்கண்ட உடனயுமே நாங்கள் படுத்திட்டம்.” என்றவன் கதைவராமல் விக்கிக்கொண்டிருந்தான்.
சிறிது இடை வெளியின் பிறகு அதில அறிவண்ணா கடுமையான காயமடைஞ்சிட்டார். அப்ப நான் அவர பங்கருக்குள்ள இழுத்து அவற்ற வயித்தைப் பொத்திப் பிடிச்சன். என்ர கையுக்குள்ளஅடங்காமல் ரத்தம் சீறிக்கொண்டிருந்திச்சு. உடன வேற பெடியளும் வந்து வயித்துக்குக் கட்டுப் போட்டு பின்னுக்கு அனுப்பிப்போட்டம். பின்னுக்கு எங்கண்ட மெடிக்சில அறிவண்ணா வீரச்சாவடைஞ்சிட்டார். அவரோட நிண்டு வேலை செய்தமற்றப் போராளியும் காயப்பட்டுட்டான்.
கீழ இருந்து வேலை செய்து கொண்டிருந்த எங்களுக்கு ஒரு பிரச்சணையுமில்லை” என்றவன் “எனக்கு அத நினைக்க நினைக்க இப்பவும் மனதுக்;கு சரியான வேதினயாய் இருக்கண்ண” என்றபடி மௌனமாகி எங்களைப்பார்த்தான். கலகலப்பால் நிரம்பிய முகாமாலையின் முன்னணிக்காப்பரண் இன்னருவியின் கதையால் நிசப்த அமைதியால் நிரமிபியது. இன்னருவியின் மனதை இப்போதும் உலுக்கும் அந்த வேதனையான சம்பவம் அனைவரின் நெஞ்சுகளும் கலக்க மனங்கள் மௌனமாக்கி ஊமையாகிப் போயிருந்தன.
மனங்கள் மட்டுமல்ல கொழுத்தும் எதிரியின் எறிகணைவாய்களும் அமைதியாகியே இருந்தன.; அந்தப் பெருங்களமே நிசப்த அமைதியாய் இருந்தது. கலகலப்பின் நிறைவில் இப்படி ஒரு வேதணை அனைவரையும் இறுகப்பற்றும் என்பதை நாங்கள் நியைத்துக்கூடப்பார்க்கவே இல்லை. திடீரென “போராளிகளின் வாழ்வு இப்பிடித்தான்” என்று அமைதியைக் குலைப்பது போல இன்னருவியின் குரல் மீண்டும் எங்கள் காதுகளை வந்து முட்டி மோதிக்கொண்டது.
“அறிவண்ணாவ நான் நல்ல நேசிச்சனான் அதால எனக்கு வர பறிகுடுத்தத் தாங்கவே ஏலாமல் இருக்குது” என்றான் இன்னருவி. “செல் குத்திறதவைச்சு இது எங்க போகும் எண்டு சொல்லுற உங்களால அந்தச்செல் இஞ்ச தான் வரும் எண்டுறதக் கண்டு பிடிக்க ஏலாமல் போச்சுதோ” என்றோம் மெதுவாக. “சீ நாங்கள் வேலை செய்து கொண்டிருந்ததால அந்தச் சத்தம் வடிவாய் விழங்கேல்ல” அதுதான் என்றான்.
தொடரும்…..
தாரகம்
போராளிகளின் உற்சாகம் எங்களிற்கு மேலும் வேகம்! – போர் முகம் தொடர் – 07