கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றதற்காகக் கைது செய்யப்பட்ட முகிலன், பாளையங்கோட்டை சிறையின் உள்ளே தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். அவரை விடுவிக்கக்கோரி பல்வேறு அமைப்பினர் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி இருக்கிறார்கள்.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த தண்ணீருக்கான போராட்டத்தில் பங்கேற்றுத் திரும்பிய அவரைக் கடந்த 20017-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர். மஃப்டி உடையில் வந்தவர்கள் வெள்ளை வேனில் கடத்திச் சென்றதால் பதற்றம் ஏற்பட்ட நிலையில் நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பின்னர் போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.
இந்த நிலையில் கடந்த 9 மாதங்களுக்கும் மேலாகப் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், கடந்த 5-ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ஸ்டெர்லைட் ஆலைப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்தும் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற ஒரு லட்சத்துக்கும் அதிகமான அப்பாவி மக்கள் மீது போடப்பட்ட 132 வழக்குகளை திரும்பப்பெறக் கோரியும் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
பாளையங்கோட்டை சிறையில் 6-வது நாளாக உண்ணாவிரதம் இருப்பதால் முகிலன் மிகவும் சோர்வடைந்துள்ளார். அவரது உடல்நிலை மோசம் அடைந்துள்ள நிலையில், அவரை உடனடியாக நிபந்தனையின்றி விடுவிக்கக் கோரியும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்துப் போராடிய மக்கள் மீதான துப்பாக்கிச்சூட்டுக்கு முறையான நீதி வழங்க வலியுறுத்தியும் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது.
அநீதிக்கு எதிரான கூட்டியக்கம், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் மற்றும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் சார்பாக சென்னை தாம்பரம், பெசன்ட்நகர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற இந்தக் கையெழுத்து இயக்கத்தில் ஏராளமான மாணவர்களும் தன்னார்வலர்களும் கலந்துகொண்டு ஆர்வத்துடன் கையெழுத்திட்டனர். இந்தக் கையெழுத்து பிரச்சாரம் தமிழகம் முழுவதும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.