அகதிகள் 600 பேருடன் வந்த கப்பலைத் தனது துறைமுகத்தில் நிறுத்த இத்தாலி அரசு மறுத்துவிட்டதனால் அவர்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது. பிரான்சை தலைமையிடமாகக் கொண்டு செயற்படும் மனிதாபிமான மருத்துவ சேவைகள் செய்துவரும் சர்வதேச அமைப்பான எல்லைகள் இல்லாத மருத்துவர்கள் அமைப்பினால் இயக்கப்படும் அகுவைரியஸ் என்ற குறித்த கப்பல் மத்திய தரைக்கடலில் வந்த நிலையில் இத்தாலியில் இருந்து 35 கடல் மைல்கள் தூரத்தில் நிறுத்தப் பட்டிருந்தது.
கப்பலைத் தனது துறைமுகத்தில் நிறுத்த இத்தாலி அனுமதிக்கவில்லை. கப்பலில் ஆதரவற்ற 123 சிறுவர், சிறுமிகள், 6 கர்ப்பிணிகள் உட்பட 600 பேர் இருப்பதாகவும் அவர்களுக்கு உடனடியாக உதவிகள் தேவைப்படுகிறது எனவும் எல்லைகள் இல்லாத மருத்துவர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது
அத்துடன் ஐ.நா.வின் அகதிகள் பிரிவு அதிகாரிகளும் குறித்த கப்பலை துறைமுகத்தில் நிறுத்த அனுமதி அளித்து 600 அகதிகளின் உயிர் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என இத்தாலிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும், ஐ.நா.வின் கோரிக்கையையும் இத்தாலி நிராகரித்துவிட்டது.
மனிதர்களை கடத்துவதனை இத்தாலி ஏற்பதில்லை எனவும் சட்டவிரோத குடியேற்றத்துக்கும் இத்தாலி மறுப்பு சொல்லும் எனவும் இதுகுறித்து இத்தாலி உள்துறை அமைச்சர் மட்டியோ சல்வினி தெரிவித்துள்ளர்h.
கப்பலில் உள்ள அகதிகள் மால்டாவில் இறங்கட்டும் என்று இத்தாலி தெரிவித்துவிட்ட போதும் மால்டாவும் அகதிகளை ஏற்க மறுத்துவிட்டது. இதனால் 600 பேரின் கதி கேள்விக்குறியாக உள்ளது. அவர்களைச் சுமந்துக்கொண்டு மத்திய தரைக்கடலில் கப்பல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது