லெப் கேணல் கஜேந்திரன் மருத்துவ போராளி கஜேந்திரன் எங்களுக்கு எல்லாம் சிறியவனாய்(யாழ்வேள் மருத்துவ மனையின் ) இருந்தாலும் அறிவால் உயர்ந்தவன். யாழ்வேள் மருத்துவமனையின் மருந்து களஞ்சிய பொறுப்பாளராக நீண்ட காலங்கள் இருந்திருக்கிறான் மருத்துவத்துறையில் . அவன் தன்னுடைய பொறுப்பில் எந்த நேரத்திலும் கடமை தவறியதில்லை. தனக்கு கொடுக்கப்படும் பணியை காத்திரமாகவும் விருப்பத்துடனும் செய்து முடிப்பான். அது அவனுடைய தனிச் சிறப்பாகும்.
பெரியவர் சிறியவர் என்ற வேறுபாடின்றி தனக்கு தேவையானதையும் தெரியாதவற்றையும் கேட்டறிவதில் அவன் ஒருபோதும் பின்னின்றதில்லை. நோயாளர்களை அன்பால் தன்வசப்படுத்துவது மட்டுமன்றி அவர்களுக்கு குறுக்கெழுத்துப் போட்டியில் கட்டங்களை நிரப்புதல், நுண்ணறிவு போட்டிக்கான கணக்குகளை கொடுத்து அவர்களை ஆற்றுப்படுத்தும் புதுவழியை கையாள்வதில் வல்லவன். கணனி ,பொது அறிவு விளையாட்டு என்று எல்லாத்துறையிலும் அவன் வித்தகனாய் விளங்கினான்.
எப்போது எங்கே புத்தகம் படிப்பான் என்றே எங்களுக்கு தெரியாது. ஆனாலும் யாழ்வேள் மருத்துவமனையின் நூல் நிலையத்திற்கும் வரும் புத்தகங்களை முதலாவதாக அவன் வாசித்துவிடுவான். அவன் வாசித்த பிறகுதான் எமக்கு அந்தப் புத்தகங்கள் கிடைக்கும் .
போர்க்காலத்திற்கே உரிய மருந்து தட்டுப்பாட்டை கருத்தில்கொண்டு, மருத்துவ களஞ்சியத்திற்கு பொறுப்பாக இருந்த காலங்களில் கடும் சிக்கனமாக மருந்துகளைப் பிரித்து வழங்குவான். புதுக்குடியிருப்பிலிருந்து கிளிநொச்சிக்கு லான்ட்மாஸ்ரில் தான் மருந்துப்பொருட்களை எடுத்து வருவான். அப்போது அடையாளம் காணமுடியாத அளவிற்கு அவனை செம்மண் புழுதி மூடியிருக்கும். அப்படி இருந்த போதிலும், மருந்துப் பொருட்களை பத்திரமாகக் கொண்டு வந்து சேர்த்துவிடுவான். தமிழீழ சுகாதாரசேவையிலும் தன் திறமைகளை வெளிப்படுத்த அவன் தவறியதில்லை. மன்னார் மாவட்ட தமிழிழ சுகாதாரசேவைப்பொறுப்பாளராக இருந்தபோது அவனது ஆளுமையான பொறுப்புமிக்க செயற்பாட்டைக்கண்டு அப்போது சுகாதார சேவைக்கு பொறுப்பாக விருந்த விக்கி டொக்டரிடம் பல முறை பாராட்டை பெற்றதுடன் அவனுக்கான பணிகளும் கூடுதலாக வழங்கப்பட்டது.பின்னர் வைத்தியர் சுஐந்தன் தமிழிழ சுகாதாரசேவைக்கு பொறுப்பாக இருந்த போதும் கஜேந்திரனின் பணி தமிழிழ சுகாதாரசேவையுடன் தொடர்ந்தது. மாவீரன் கஜேந்திரன் பற்றி மன்னார் மாவட்டத்தில் பணியாற்றிய போராளி வைத்தியர் இப்படிக்கூறுகிறார்” சுகாதார சேவையின் பணிகள் ஆரம்பமாகும் நேரம் காலை 9 மணியாக இருக்கும் போது கஜேந்திரன் அதிகாலை 4 மணிக்கே எழும்பி களநிலமைகளை ஆராய்ந்து சரியான தரவுகளுடன் பணியாளர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடுவதுடன் பணிசார்ந்த விடயங்களில் கண்டிப்பாகவும் , மற்றவர்களையும் சரியாக வழிநடத்தி செல்லும் விரைவான செயற்பாட்டாளராகவும் மன்னார் மாவட்ட மக்கள் மத்தியில் பேசப்பட்டார். இவ்வாறு பல தியாகங்கள் அர்பணிப்புகளுடன் செயற்பட்ட மாவீரன் தான்.
பின்னோர் நாளில் அவன் கடலில் காவியமானான் லெப் கேணல் கஜேந்திரன் ஆக…
- மிதயா கானவி