கிழக்கு மாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனங்கள் தொடர்பான கிழக்கு மாகாண அமைச்சரவையின் விஷேட கூட்டம் எதிர்வரும் மே 17 ஆம் திகதி இடம்பெறுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
பட்டதாரிகளின் நியமனம் தொடர்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“என்னென்ன பாடங்களுக்காக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்ற விவரங்களைப் பெறும் வேலைகள் அடுத்த ஓரிரு நாட்களில் ஆரம்பித்து விடும். அதற்கான பணிப்புரைகள் ஏற்கெனவே உரிய அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு விட்டன.
அத்துடன் வேலைவாய்ப்பின்றி போராட்டத்தில் ஈடுபடும் பட்டதாரிகளுக்கு நியமனங்களைப் பெற்றுக் கொடுப்பதற்காக தற்போது வேறு அரச தொழில்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பட்டதாரிகள் மாகாண சபையால் கோரப்படவுள்ள விண்ணப்பங்களின்போது குறித்த விண்ணப்பங்களைத் தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
உடனடியாக 1000 பேரும் பின்னர் கட்டங்கட்டமாக ஏனைய அனுமதி வழங்கப்பட்ட 3784 பேரும் நியமனம் செய்யப்படவுள்ளார்கள். இதன் மூலம் கிழக்கு மாகாணத்திலுள்ள ஆசிரியர் வெற்றிடங்கள் முழுமையாக நிரப்பப்படுவதோடு ஆசிரியர் பற்றாக் குறையும் முற்றாக நீங்கி விடும்” என முதலமைச்சர் நஸீர் அஹமட் மேலும் தெரிவித்தார்.