வட தமிழீழம், மல்லாகத்தில் நேற்று இளைஞன் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் தொடர்ந்தும் மேலதிக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.
சம்பவம்:-
நேற்று மாலை 6.45 மணியளவில் சுன்னாகத்தில் இருந்து சுமார் 8 வரையான மோட்டார்சைக்கிள்களில் ரௌடிக்குழுவொன்று வந்துள்ளது. அவர்கள் வாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை வைத்திருந்தனர். ஆலயத்திற்கு அருகில் ஒருவரை விரட்டி வந்துள்ளனர். விரட்டப்பட்டவர், ஆலய திருவிழாவிற்குள் புகுந்து விட்டார். இதனால் ஆலய வாசலில் வாள்களுடன் ரௌடிகள் நின்றுள்ளனர்.
அந்த சமயத்தில் ஆலய திருவிழா கூட்டத்திற்குள் இருந்து இளைஞன் ஒருவர் வீதிக்கு போயிருக்கிறார். அவரை ரௌடிகள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.ஆலய திருவிழாவில் கலந்து கொண்டிருந்த கொல்லப்பட்ட இளைஞனான பாக்கியராசா சுதர்சன் (32) இதை பார்த்துவிட்டு, அங்கு சென்றிருக்கிறார். தாக்கப்பட்டவர் சுதர்சனின் உறவுமுறையானவர். சுதர்சன் அவரை காப்பாற்ற முயற்சித்துள்ளார். ஆனால் சுதர்சனும் மோதலில் ஈடுபட்டிருந்தார் என பொலிசார் கூறுகின்றனர்.
அந்த சமயத்தில் முச்சக்கரவண்டி ஒன்றில் சுன்னாகம் காவல்துறையினர் அந்த பகுதியால் வந்துள்ளனர். ஏழாலையில் நடந்த திடீர் உயிரிழப்பை விசாரிக்க சென்றுவிட்டு அவர்கள் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
மோதலை அவதானித்த முச்சக்கரவண்டியில் வந்த காவல்துறையினர், அதை நிறுத்திவிட்டு கீழே இறங்கினர். துப்பாக்கியுடன் இருந்த உத்தியோகத்தர் அடிவாங்கியவரை நோக்கி சுட முயன்றதாக பிரதேசமக்கள் கூறுகின்றனர். சுதர்சன் அடி வாங்கியவரை காப்பாற்ற முயற்சித்துக் கொண்டிருந்தார். பொலிசாரின் துப்பாக்கிச்சூடு சுதர்சனை தாக்க, அவர் அலவக்குரல் எழுப்பியவாறு நிலத்தில் விழுந்து துடித்தார்.
இதையடுத்து வாள்களுடன் வந்த ரௌடிகள் தப்பியோடியுள்ளனர். முச்சக்கர வண்டியில் வந்த மற்றைய கால்துறையினரும் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர். துப்பாக்கியால் சூடு நடத்திய காவல்துறை உத்தியோகத்தர்அந்த பகுதியில் நின்றுள்ளார். நான்தான் சுட்டேன் என அங்கிருந்தவர்களிடம் தெனாவெட்டாக கூறியுமிருக்கிறார். பின்னர் அந்த பகுதியில் சிவில் உடையில் நின்ற ககால்துறையைச் சேர்ந்த ஒருவர் அவரை ஏற்றிச்சென்றார்.
அந்த பகுதியில் ஏற்கனவே சிவில் உடையில் கால்துறையினர் இருந்ததாக தேரியவருகிறது.
எனினும், இந்த சம்பவம் தொடர்பில் சம்பவ இடத்திலிருந்து முரண்பட்ட தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
“ஆலயத்தில் குழப்ப நிலைமை ஒன்று ஏற்பட்டது உண்மைதான். இளைஞர் ஒருவர் கையில் கம்பியுடன் வந்தார். அவரை நான்கு இளைஞர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது அங்கு வந்த அவரது உறவினர் (உயிரிழந்தவர்) கம்பியுடன் வந்தவரை சமாதானப்படுத்தி அங்கிருந்து பாதுகாப்பாக அகற்ற முயன்றார். அப்போது வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இது நடந்து கொண்டிருந்தபோது திடீரெனப் காவல்துறையினர் வந்தனர். துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டது. மோதலைத் தவிர்க்க வந்த இளைஞர் நெஞ்சில் குண்டடி பட்டு நிலத்தில் கிடந்து சத்தமிட்டார். சிறிது நேரத்துக்குப் பின்னர் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்துவிட்டார்” என்றும் இன்னும் சிலர் சொல்கிறார்கள்.
சுதர்சனின் முன்பக்க வலது இடுப்பினூடாக நுழைந்த துப்பாக்கி ரவை, அவரது நுரையீரலின் அடிப்பகுதியை தாக்கியவாறு வெளியேறியுள்ளது.
இரண்டு ரௌடிக்குழுக்கிற்கிடையிலான மோதலை தடுக்க முற்பட்ட காவல்துறை மீது தாக்குதல் நடத்த முற்படடதையடுத்தே, தற்காப்பு தாக்குதல் நடத்தப்பட்டதாக காவல்துறையினர் கூறுகின்றனர். நேற்று சம்பவ இடத்திற்கு வந்த நீதிவானிற்கும் அப்படியே கூறினர்.
ஆனால் அங்கிருந்த பொதுமக்கள் இதை மறுக்கின்றனர். தெல்லிப்பழை காவல்துறை பகுதியில் நடந்த சம்பவத்திற்கு சுன்னாகம் கால்துறையினர் ஏன் சுட வேண்டும் என்றும் மக்கள் கேள்வியெழுப்பினர்.
வாள்வெட்டு கும்பல் கைவிட்டு சென்ற மோட்டார்சைக்கிள் மாத்திரம் ஆரம்பத்தில் அங்கு நின்றது. நீதிவானுக்கு காண்பிக்கும்போது அந்த மோட்டார் சைக்கிளுடன் இரும்பு கம்பியையும் காவல்துறையினர் காண்பித்துள்ளனர். இது விடயங்களை திசைதிருப்பும் முயற்சியென சந்தேகிப்பதாக மக்கள் விசனம் தெரிவித்தனர்.
இதேவேளை, துப்பாக்கியால் சுட்ட காவல்துறை உத்தியோகத்தர்இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளார்.